பேரின்ப வீட்டின் திறவுகோளாக விளங்கும் ஜீவகாருண்யம்!

Jeevakarunyam
Annadhanam
Published on

ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோள் என்பதை உணர்ந்து பசித்த ஜீவர்களின் பசி குறிப்பு அறிந்து ஜாதி ஒழுக்கம், சமய ஒழுக்கம், ஆச்சார ஒழுக்கம்,தேச ஒழுக்கம் முதலானவற்றைக் குறித்து விசாரிக்காமல் பசியாற்றுகின்றவர்களுக்கு உண்டாகும் நன்மைகள் பற்றி வள்ளலார் கூறும் கருத்துக்களை இப்பதிவில் காண்போம்.

சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சம்சாரிகள் தங்கள் தரத்திற்கு இசைந்தபடி பசித்தவர்களுக்கு உணவளிப்பதை விரதமாக அனுசரித்தார்கள். இதனால், மேற்சொன்ன அந்த வியாதிகள் நிவர்த்தியாகி விசேஷ சௌபாக்கியத்தை உண்டுபண்ணும் என்பது உண்மை.

பல நாள் சந்ததி இல்லாமல் பற்பல விரதங்களை செய்து வருந்துகின்ற சம்சாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்கு பசியை ஆற்றுவிப்பதை விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணும் என்பது உண்மை.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல இந்த பூச்சிகள் இருக்கா? ரொம்ப உஷாரா இருங்க!
Jeevakarunyam

அற்ப வயதென்று குறிப்பினால் அறிந்து கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சம்சாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதை விரதமாக அனுசரிப்பார்களானால் இந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டுபண்ணும் என்பது உண்மை.

கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலியவற்றைக் குறித்து வருந்துகின்ற சம்சாரிகள் தங்கள் தரத்திற்கு தக்கபடி பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதை விரதமாக அனுசரிப்பார்கள். ஆனால், இந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலானவற்றை உண்டுபண்ணும் என்பது உண்மை.

பசித்தவர்களுக்கு பசியாற்றுவிப்பதை விரதமாகக் கொண்ட ஜீவகாருண்யம் உள்ள சம்சாரிகளுக்கு கோடையில் வெயிலும் வருத்தாது, மண்ணும் சூடு செய்யாது, பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்க மாட்டாது. அம்மை நோய், விஷக்காற்று, விஷ ஜுரம் முதலிய அஜாக்கிரதை பிணிகளும் உண்டாகாது.

ஜீவகாருண்யமுள்ள சம்சாரிகள், ஆற்று வெள்ளத்தாலும், கள்ளர்களாலும், விரோதிகளாலும் கலக்கப்பட மாட்டார்கள். அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்பட மாட்டார்கள். ஜீவகாருண்யம் உள்ள சம்சாரிகளின் விளை நிலத்தில் பிரயாசை இல்லாமல் விளைவு மென்மேலும் உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
ஓவர் பேச்சு உடம்புக்கு நல்லதுதாங்க!
Jeevakarunyam

வியாபாரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்தில் கெடுதி இல்லாத மேன்மையும் உண்டாகும். இவர்கள் சுற்றங்களாலும் அன்பர்களாலும் சூழப்படுவார்கள். ஜீவகாருண்யம் உள்ள சம்சாரிகள் துஷ்ட மிருகங்களாலும், துஷ்ட ஜந்துக்களாலும், துஷ்ட பிசாசுகளாலும், துஷ்ட தெய்வங்களாலும் பயம் செய்யப்பட மாட்டார்கள். ஜீவகாருண்யமுள்ள சம்சாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வினையினாலும் சத்தியமாக வராது.

எனவே, பசித்தவர்களின் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனை பெண் ஜாதி தடுத்தாலும், பெண் ஜாதியை புருஷன் தடுத்தாலும், பிள்ளையை தந்தை தடுத்தாலும், தந்தையை பிள்ளைகள் தடுத்தாலும், சீடரை ஆச்சாரியர் தடுத்தாலும், அடியாரை ஆண்டவன் தடுத்தாலும், குடிகளை அரசன் தடுத்தாலும், அந்தத் தடைகளால் சிறிதும் மாறாமல் அவரவர் செய்த நன்மை, தீமைகள் அவரவரை சேரும் என்று நம்பி ஒவ்வொருவரும் ஜீவகாருண்யம் செய்தல் வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com