
அதிகம் பேசுவது ஆபத்தை விளைவிக்கும் என்பது அனுபவசாலிகளின் கருத்து. அதற்காகவே பேசுவதை குறைத்து எதையும் செயலில் காட்டுங்கள் என்று சொல்வார்கள். அந்த விதத்தில், செயலே சிறந்த சொல் என்றாலும், ‘அதிகம் பேசுங்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் பேசச் சொல்வது எல்லோரையும் அல்ல, வயதானவர்களை மட்டும்தான். பொதுவாக, வயதானவர்கள் அதிகம் பேசுவல்லை. பேசினால் மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாவோம் என்ற அச்சத்திலேயே அவர்கள் அதிகம் பேசுவதில்லை.
ஆனால், மருத்துவர்கள் முதியோர்கள் அதிகம் பேசுவதை ஒரு வரமாகப் பார்க்கிறார்கள். ஓய்வு பெற்றவர்கள் (மூத்த குடிமக்கள்) அதிகம் பேச வேண்டும் என்கிறார்கள். ஏனெனில், தற்போது நினைவாற்றல் இழப்பைத் தடுக்க எந்த வழியும் இல்லை. அதிகம் பேசுவது ஒன்றுதான் நினைவாற்றலைத் தடுக்கும் ஒரே வழி. மூத்த குடிமக்கள் அதிகம் பேசுவதால் குறைந்தபட்சம் மூன்று நன்மைகள் ஏற்படுகின்றன.
ஒன்று: வயதானவர்கள் பேசுவது அவர்களின் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது, பேசுவதால் மொழியும் எண்ணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. குறிப்பாக, விரைவாக பேசும்போது, அது இயல்பாகவே சிந்தனையை விரைவுபடுத்துகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது. அதிகம் பேசாத மூத்த குடிமக்களுக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இரண்டு: மூத்த குடிமக்கள் அதிகமாகப் பேசுவது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மனநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. பெரும்பாலும், வயதானவர்கள் மற்றவரிடம் எதையும் பேசாமல், இதயத்திலேயே எல்லாவற்றையும் மறைத்து வைத்துக்கொள்வது, அவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் அசௌகரியமாக உணர்தல் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. எனவே, பெரியவர்கள் அதிகம் பேசுவதற்கு வீட்டில் உள்ளவர்கள் வாய்ப்பு கொடுப்பது நல்லது.
மூன்று: வயதானவர்கள் அதிகம் பேசுவது என்பது, முகத்தின் சுறுசுறுப்பான தசைகளுக்கு மற்றும் தொண்டைக்கு பயிற்சி அளிக்கிறது. நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது. கண்கள் மற்றும் காதுகளை சேதப்படுத்தும் தலைச்சுற்றல் மற்றும் காது கேளாமை போன்ற மறைந்திருக்கும் ஆபத்துகளைக் குறைக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், ஓய்வு பெற்றவர்கள், மூத்த குடிமக்கள் தங்களை பாதிக்கும் அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, மற்றவர்களுடன் முடிந்தவரை பேசுவதும் சுறுசுறுப்பாகப் பழகுவதும்தான். விரைவாக இயங்குவதும்தான். இதற்கு வேறு வழி இல்லை. உடலானது வயதான காலத்தில் ஓய்வெடுக்கவும் அமைதியை விரும்புவுமே செய்யும். ஆனால், அதற்காக எதுவும் செய்யாமல் சும்மாவே இருத்தல் நம்மை நாமே இயலாதவர்களாக மாற்றிக் கொள்வதாகிவிடும். ஆகவே முதியவர்கள் ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று யாரிடமும் பேசாமல் இருப்பதை விட எல்லோரிடமும் நன்றாகப் பேசி உடல் நலத்தை காத்துக் கொள்ளலாம்.