
உங்களுடைய செல்லப்பிராணிக்கு கோடையின் வெப்பம் கடினமாக தோன்றலாம்.. வெயிலின் தாக்கத்தை அவற்றால் சில சமயங்களில் தாங்கி கொள்ள இயலாது. செல்லப் பிராணிகள் பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கவும், வெப்பமான நாட்களைக் கடந்து செல்லவும் நம்மை தான் முழுவதுமாக நம்பியுள்ளன.
நீர்ச்சத்து இழப்பு, பசியின்மை, வீட்டில் எப்போதும் குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுப்பது இவற்றை எல்லாம் நீங்கள் செல்லப்பிராணியிடம் கோடைக் காலத்தில் கவனித்திருக்கிறீர்களா? இவை எல்லாம் அது வெப்பத்தை சமாளிக்கக் கூடிய தெளிவான அறிகுறிகளாகும். நீங்களும் உங்களுடைய செல்லப்பிராணிக்கு உங்களால் முடிந்த உதவியையும் கண்டிப்பாக செய்ய வேண்டிய நேரம் இது.
அதிகரித்து வரும் வெப்பநிலையில் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அதிக வெப்பநிலையைக் கையாள வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளன. இந்த கோடையில் அவற்றை மிகவும் வசதியாக வைத்திருக்க உதவும் சில எளிய வழிகள்:
குளிர்ச்சியாக இருக்கும் தருணத்தில் செல்லப் பிராணிகளை நடைபயிற்சிக்கு எடுத்தசெல்லுங்கள்:
உங்கள் செல்லப்பிராணியை வெயில் காலத்தில் அதிகாலையிலோ, மாலையில் வெயில் குறைந்தவுடனோ அல்லது இரவிலோ நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். இது சூடான நடைபாதைகளில் செல்லப்பிராணிகள் நடக்கும்போது ஏற்படும் வலிமிகுந்த பாத தீக்காயங்களைத் தடுக்க உதவும். கோடை காலத்தில் வெளியில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்வது எப்போதும் நல்லது
அவற்றை நீரேற்றமாக வைத்திருங்கள்:
உங்கள் நாய் அல்லது பூனையின் தண்ணீர் பாத்திரத்தில் எப்போதும் நிறைய நீரை ஊற்றி வைக்கவும். அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்களை அவற்றிற்கு ஊட்டுவதும் நீரேற்றத்தை ஆதரிக்க உதவும்.
பழச்சாறுகள், மோர் (உப்பு இல்லாமல்), செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற உணவு, கோழி மற்றும் காய்கறி குழம்புகளை தாராளமாக கொடுக்கலாம். இந்த உணவுகள் அவற்றை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
உண்ணி மற்றும் ஈக்களிடமிருந்து அவற்றை பாதுகாத்து காக்கவும்:
கோடை காலம் என்பது குறிப்பாக நாய்கள் மற்றும் பூனைகளுக்கு, பூச்சிகள் மற்றும் உண்ணிகளால் பாதிப்பு ஏற்படும் காலம்.
ஈக்கள் மற்றும் உண்ணிகளை தவிர்க்க பல மருந்துகள் உள்ளன. ஆகவே நீங்கள் ஒரு கால்நடை மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி கொடுக்கவும். உங்கள் செல்லப்பிராணியின் உடல்நிலைக்கேற்ற ஷாம்புகளை மருத்துவரின் ஆலோசனைப் படி உபயோகிக்கவும்.
இதைத் தவிர ஈக்களும் உண்ணிகளும் அண்டாமலிருக்க செல்லப் பிராணிகளுக்கு தினமும் நன்றாக குளிப்பாட்டி விட வேண்டும். கோடை காலத்தில் அவைகளுக்கு முடி உதிர்வதை தடுக்க நீங்கள் brush ஆல் அவைகளின் சருமத்தை தடவி விடவும்.
மூடிய காரில் அவர்களை ஒருபோதும் தனியாக விடாதீர்கள்:
உங்கள் செல்லப்பிராணி காரில் உள்ளே இருக்கும்போது, காரின் ஜன்னல் காற்று சுழற்சிக்காக எப்போதும் சற்று திறந்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். காற்றோட்டம் அல்லது சரியான ஏர் கண்டிஷனிங் இல்லாமல், செல்லப்பிராணிகளுக்கு வெப்ப பக்கவாதம், நீரிழப்பு போன்றவை ஏற்பட நேரிடும்.
மிகவும் அவசியமில்லாத பட்சத்தில், கோடைக்காலத்தில் செல்லப்பிராணிகளை காரில் அழைத்துச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
பறவை பராமரிப்பு:
நாய்கள் மற்றும் பூனைகளுடன் ஒப்பிடும்போது பறவைகளுக்கு சற்று வித்தியாசமான பராமரிப்பு தேவைப்படுகிறது, குறிப்பாக கோடையில். வெப்பநிலையில் ஏற்படும் சிறிய மாற்றத்திற்கும் பறவைகள் எளிதில் பாதிக்கப்படும்.
பறவைகளை அதிகாலை சூரிய ஒளியில் வெளியே விடுவது நல்லது. இருப்பினும், கோடையில் நாள் முழுவதும், அவற்றை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தால் மிகவும் நல்லது.
அவற்றின் உணவிலோ அல்லது தண்ணீரிலோ புரோபயாடிக்குகளைச் சேர்த்தால் வெயிலை சமாளிக்க ஏதுவாக இருக்கும்.
கோடைக்காலம் நமக்கே சவாலாக இருக்கும்போது நம்முடைய செல்லபிராணிகளுக்கு இன்னும் மிகப்பெரிய சவாலாக இருக்கலாம், ஆகவே இந்த சில எளிய நடைமுறைகளை நீங்கள் பின்பற்றினால் அவைகள் வெப்பத்தை சமாளிக்க அவற்றிற்கு உபயோகமாக இருக்கும்.