
குழந்தைகள் உள்ள வீட்டின் சுவர்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு கிரையான், வண்ண பென்சில், ஸ்கெட்ச் போன்றவற்றால் சுவர்களில் எழுதியும் படம் வரைந்தும் கறைகளை உண்டாக்கி இருப்பார்கள். அதற்காக அவ்வப்போது வீட்டில் பெயிண்ட் அடிக்க முடியாது. அந்த வகையில் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இதுபோன்ற கறைகள் உள்ள சுவர்களை புதியது போல மாற்றும் வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கண்ணாடி தூய்மை செய்யும் பொருள்: கண்ணாடியினை தூய்மை செய்யும் லிக்யூட் மூலம் சுவர்களில் உள்ள கிரையான் அடையாளங்களை நீக்கலாம். கண்ணாடியினை தூய்மை செய்யும் லிக்யூடினை ஒரு சுத்தமான துணியில் தெளித்து பின்னர் துணியால் கறைகள் உள்ள இடங்களில் மெதுவாக துடைக்கவும். பிடிவாதமான கறைகளுக்கு நேரடியாக லிக்யூட்டினை கறைகளின் மீது தெளித்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை துடைத்தால் கீறல்களை எளிதாக அகற்றலாம். பின்பு உலர்ந்த துணியால் துடைத்து விடலாம். கண்ணாடி தூய்மை செய்யும் லிக்யூடில் உள்ள ஆல்கஹால் மற்றும் அமோனியா கறைகளை முழுவதுமாக நீக்கி பளிச்சென்று ஆக்கிவிடும்.
2. பற்பசை: சுவர்களில் உள்ள கறைகளை நீக்க பற்பசையை சிறிது எடுத்து கறைகளின் மீது தடவி பழைய ப்ரஷ்ஷை கொண்டு தேய்த்து பின்பு ஒரு நிமிடம் கழித்து துணியால் துடைத்தால், சுவரில் உள்ள வண்ணப் பூச்சுகள் நீங்காமல் கறைகள் மறைந்து விடும். பற்பசையில் உள்ள லேசான சிராய்ப்பு துகள்கள் மற்றும் ஆல்கஹால் கறைகளை சுத்தம் செய்கிறது.
3. பாத்திரம் கழுவும் லிக்யூட்: பாத்திரம் கழுவும் திரவத்தை வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் கலக்கவும். இந்த கரைசலில் ஒரு துணியை நனைத்து கறை உள்ள பகுதிகளில் கவனமாக துடைத்தால், இது சுவர்களில் உள்ள கறைகளைப் போக்கி புதியது போலக் காட்டும்.
4. துணி துவைக்கும் பவுடர்: துணி துவைக்கும் சோப்புப் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து கறை படிந்த இடத்தில் தடவி ஒரு துணியைக் கொண்டு தேய்த்தால் கறைகள் நீங்கும். சுவர்களில் உள்ள சிறிய கறைகளையும் துணி துவைக்கும் பவுடர் நீக்கும்.
5. பேக்கிங் சோடா: சிறிது பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு கரைசலை உருவாக்கி, கறை படிந்த இடத்தில் தடவி சில நிமிடங்கள் அப்படியே வைத்து பின்னர் ஒரு லேசான துணியால் துடைக்க சுவரில் உள்ள கரையான் கறைகள் முழுவதுமாக நீங்கிவிடும்.
சுவரில் உள்ள கறைகளை சுத்தம் செய்வதற்கு முன்பாக ஒரு சிறிய தெளிவற்ற இடத்தில் மேற்கூறிய பொருட்களைக் கொண்டு சோதனை செய்து, குறிப்பாக பழைய வண்ணப் பூச்சின் மீது தேய்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எப்போதும் சுத்தம் செய்வதற்கு மைக்ரோ பைபர் துணியைப் பயன்படுத்துவது சிறந்தது.