உடுத்தும் துணிகளை மறக்காமல் துவைக்கத் தெரியும் சிலருக்கு; அவர்கள் உபயோகிக்கும் தலையணை உறைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகைள மட்டும் ஏன் துவைக்க மறக்கிறார்கள்? இது எப்படி அவர்களைப் பாதிக்கும்? என்னென்ன பாதிப்புகள்?
தலையணை உறைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகளை துவைக்காமல் இரண்டு வாரங்களுக்கு மேல் உபயோகித்தால் முகப்பரு, தோள் அரிப்பு, சுவாச ஒவ்வாமை, ஈரமான படுக்கையில் உருவாகும் பாக்டீரியா, பூஞ்சை(fungi) பெருக்கத்தால் பூஞ்சை தொற்றுகள் வரும்.
முக்கியமாக அழுக்கான படுக்கை பொருட்கள் தூக்கத்தின் தரத்தையும் சீர்குலைக்கும், சோர்வு, எரிச்சல்; காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் வழிவகுக்கிறது.
இந்தியாவின் வெப்பமான அல்லது ஈரப்பதமான காலநிலையில் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், போர்வைகள் போன்ற பொருட்களை 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும். இவ்வாறு துவைப்பதால் வெப்பமண்டல சூழல்களில் வரும் வியர்வை, உடலில் உருவாகும் எண்ணெய்கள், இறந்த சரும செல்கள் (dead skin cells), தூசிகள் வேகமாக பரவுவதைத் தடுக்க உதவுகிறது.
சரியாக துவைக்கும் முறை:
படுக்கை விரிப்புகளை துவைப்பதற்கான சிறந்த வழி முதலில் அதன் துணி சார்ந்த அணுகுமுறை பற்றி தெரிந்திருக்க வேண்டும். பருத்தி போர்வைகள், தலையணை உறைகளுக்கு வெதுவெதுப்பான நீருடன் (40–60°C) லேசான சோப்பு பயன்படுத்த வேண்டும். அதில் படிந்துள்ள அழுக்குகளின் மீது முன்கூட்டியே பேக்கிங் சோடா அல்லது வினிகரைப் பயன்படுத்தலாம். இதனால் அதிக நறுமணம் தரும் திரவங்களைத் தவிர்க்கலாம். பட்டு அல்லது மென்மையான துணிகளுக்குக் குளிர்ந்த நீரில் நம் கைகளாலே துவைக்கலாம். அல்லது கழுவுவதற்குமுன் அதன் பராமரிப்பு லேபிள்களைச் சரிபார்த்து வாஷிங் மெஷினில்கூட துவைக்கலாம்.
சீக்கிரம் துவைக்க வேண்டுமா? உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த தேவையான அளவோடு வாஷிங் மெஷினில் அதிக சுழல் வேகத்துடன்(fast spin) இயங்கக்கூடிய ‘Quick Wash’ ஆப்ஷனைப் பயன்படுத்துங்கள்.
வேகமாகக் காய்வதற்கு (Dry) முடிந்தவரை வெயிலில் போடுங்கள். ஏனென்றால் சூரிய ஒளி ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். வெயில் இல்லாத பட்சத்தில் உங்கள் வாஷிங் மெஷினில் dryer ஆப்ஷனைப் பயன்படுத்துங்கள்; அதோடு ‘dryer balls’ போன்ற பொருட்களை வாஷிங் மெஷினில் பயன்படுத்தி துணிகள் காயும் நேரத்தை இன்னும் குறைக்கலாம்.
நம் வாழ்வில் நாம் உபயோகிக்கும் அனைத்திற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது; இல்லையேல் நாம் அதை உபயோகிக்க மாட்டோம். அதுபோல் நம் வாழ்வில் முக்கிய அங்கமான தூங்கும் நேரத்தை நல்ல முறையில் கடைபிடிக்க, மேலே குறிப்பிட்ட இந்த விஷயத்தைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.