
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5-வது விக்கெட்டை இழந்த பிறகு மேற்கொண்டு 376 ரன்கள் சேர்த்துள்ளது. இது ஒரு சாதனையாகும். இதற்கு முன்பு இந்த வகையில் இந்திய அணி 370 ரன்கள் எடுத்ததே (2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமின்றி கேப்டன் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இரட்டை சதம் அடித்து பிரமாதப்படுத்தியுள்ள சுப்மன் கில் ஒரே நாளில் ஏராளமான சாதனைகளை படைத்தார். இந்த போட்டியில் சுப்மன் கில் 387 பந்துகளில் 269 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சுப்மன் கில் செய்த சாதனைகள் பின்வருமாறு:
* இந்த டெஸ்டில் சுப்மன் கில் 30 பவுண்டரி, 3 சிக்சருடன் 269 ரன்கள் சேர்த்து கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் எடுத்த இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர் 221 ரன்கள் (ஓவல், 1979-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 46 ஆண்டு சாதனையை முறியடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற மகத்தான பெருமையை சுனில் கவாஸ்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார். இதற்கு அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் (217 ரன், ஓவல், 2002) உள்ளார்.
* இங்கிலாந்து மண்ணில் 250 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது வெளிநாட்டு கேப்டன் கில் ஆவார். இந்திய கேப்டன்களில் இதுவரை பட்டோடி, சுனில் கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர், தோனி, விராட் கோலி (7 முறை) ஆகியோர் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை அடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சுப்மன் கில் இணைந்துள்ளார்.
* 2019-ம் ஆண்டு புனேயில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விராட் கோலி 254 ரன்கள் எடுத்ததே கேப்டனாக இந்தியரின் அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையும் கில் மூலம் காலியானது.
* இரட்டை செஞ்சுரி போட்ட இந்தியாவின் 2-வது இளம் கேப்டன் என்ற பெருமைக்கும் கில் சொந்தக்காரர் ஆனார். கில்லின் தற்போதைய வயது 25 ஆண்டு 298 நாட்கள். 1964-ம் ஆண்டு டெல்லியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய கேப்டனாக மன்சூர் அலிகான் பட்டோடி இரட்டை சதம் அடித்த போது அவரது வயது 23 ஆண்டு 39 நாள். அவர் தான் இரட்டை சதத்தின் இந்திய இளம் கேப்டனாக இன்னும் தொடருகிறார்.
* வெளிநாட்டு மண்ணில் இரட்டை சதம் நொறுக்கிய 2-வது இந்திய கேப்டனாக கில் அறியப்படுகிறார். ஏற்கனவே விராட் கோலி 2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்டில் கேப்டனாக 200 ரன்கள் குவித்து இருந்தார். அதே சமயம் ‘செனா’ (தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற அரிய சாதனையையும் கில் வசப்படுத்தியுள்ளார்.