நமது வீடுகளில் தண்ணீர் குடிக்கவோ அல்லது உணவுகளைச் சேமித்து வைக்கவோ பிளாஸ்டிக் பாட்டில்களையும் டப்பாக்களையும் தினமும் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் வாங்கும் அந்த பிளாஸ்டிக் பொருட்களின் அடியில் ஒரு முக்கோணக் குறியீடு இருப்பதையும் அதற்குள் ஒரு எண் இருப்பதையும் பலரும் கவனிப்பதே இல்லை.
இந்த அடையாளக் குறியீடுகள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. இந்த எண்களைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டால் நாமும் நமது குடும்பமும் ஆரோக்கியமாக வாழலாம்.
பயன்படுத்த உகந்த வகைகள்!
நீங்கள் வாங்கும் பாட்டிலின் அடியில் 1, 2, 4 மற்றும் 5 ஆகிய எண்கள் இருந்தால் அவற்றை நீங்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம். எண் 1 என குறிப்பிடப்பட்டிருந்தால் அவை தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களாகும். இவற்றை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிய வேண்டும். எண் 2 மிகவும் பாதுகாப்பான மற்றும் தடிமனான பிளாஸ்டிக். இதில் பால் கேன்கள் மற்றும் ஜூஸ் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. உணவுப் பொருட்களை அடைக்க எண் 4 பயன்படுத்தப்படுகிறது.
எல்லாவற்றையும் விட எண் 5 மிகவும் சிறந்த, பாதுகாப்பான குறியீடாகும். இது அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டதால் சூடான உணவுகளை வைக்கவும், மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தவும் மிகவும் உகந்தது. தயிர் டப்பாக்கள் மற்றும் மருந்து பாட்டில்கள் இந்த வகையில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்கள் உள்ள பிளாஸ்டிக் குறியீடு பாத்திரங்களை நாம் தினசரி வாழ்வில் பயமின்றிப் பயன்படுத்தலாம்.
தவிர்க்க வேண்டிய எண்கள்!
குறியீடு 3, 6 மற்றும் 7 ஆகிய எண்கள் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எண் 3 வகை பிளாஸ்டிக்குகள் பெரும்பாலும் குழாய்கள் மற்றும் உணவுப் பொட்டலங்களைச் சுற்றும் தாள்களில் இருக்கும். இதில் தாலேட்ஸ் (Phthalates) என்ற ஆபத்தான வேதிப்பொருள் இருப்பதால் ஹார்மோன் குறைபாடுகள் வர வாய்ப்புள்ளது.
எண் 6 தெர்மாகோல் மற்றும் டீ கப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் சூடான திரவங்களை ஊற்றும்போது புற்றுநோயை உண்டாக்கும் ஸ்டைரீன் (Styrene) நச்சு வெளியாகலாம்.
எண் 7 உள்ள பெரிய தண்ணீர் கேன்களில் BPA என்ற வேதிப்பொருள் இருக்கலாம். இது குழந்தைகளுக்கு மிகப் பெரிய கெடுதலை உருவாக்கும். எனவே 'BPA-Free' என்று குறிப்பிடாத எண் 7 பிளாஸ்டிக்குகளை அறவே தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற பிளாஸ்டிக் குறியீடு உள்ள பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நாளடைவில் உடலில் தேவையற்ற உபாதைகள் மற்றும் பெரிய அளவிலான நோய்கள் உருவாகும்.
பாதுகாப்பான பயன்பாட்டு முறைகள்!
பிளாஸ்டிக் பாட்டில்களைச் சுத்தம் செய்ய எக்காரணம் கொண்டும் கொதிக்கும் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் பாட்டிலில் உள்ள நச்சு வேதிப்பொருட்கள் எளிதில் வெளியேறி நாம் குடிக்கும் தண்ணீரில் கலந்துவிடும். இதற்குப் பதிலாகச் சாதாரண, மிதமான வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்துவதே சிறந்தது. வெயிலிலோ அல்லது சூடாக இருக்கும் காருக்குள்ளோ பிளாஸ்டிக் பாட்டில்களை வைப்பதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
முடிந்தவரை உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் சேமித்து வைக்க பிளாஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனமாகும். இதற்கு மாற்றாக எவர்சில்வர், காப்பர் அல்லது கண்ணாடி பாத்திரங்களைப் பயன்படுத்துவது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இனி நீங்கள் கடைகளுக்குச் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கும்போது அந்தப் பொருளின் அடியில் உள்ள முக்கோண எண்ணைப் பார்த்து வாங்குவதை ஒரு நல்ல பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்.