

Pomegranate Peeling Tips: "தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்" என்று சொல்வார்கள். ஆனால், அந்த ஆப்பிளை விடப் பல மடங்கு சத்துக்கள் நிறைந்தது நம் மாதுளை. ரத்தத்தை ஊற வைப்பதில் இருந்து இதயத்தைப் பாதுகாப்பது வரை இதன் நன்மைகள் ஏராளம். ஆனால், என்னதான் இது உடம்புக்கு நல்லது என்றாலும், இதைச் சாப்பிடுவதற்கு நாம் யோசிப்பதற்கு ஒரே காரணம், அதை உரிக்கும்போது ஏற்படும் சிரமம்தான்.
ஆப்பிளைக் கழுவி அப்படியே கடித்துச் சாப்பிடலாம். ஆனால், மாதுளையை உரிக்க உட்கார்ந்தால், கை முழுக்க சிவப்பு சாயம், உடைையில் கறை, பாதி பழம் நசுங்கி ஜூஸ் ஆகிவிடும். இந்தத் தொல்லைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? இனி மாதுளை உரிப்பதை ஒரு பெரிய வேலையாக நினைக்கவே மாட்டீர்கள். அப்படி ஒரு சுலபமான வழியைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
ஏன் இவ்வளவு சிரமம்?
பொதுவாகப் பழங்களின் தோல் மென்மையாக இருக்கும். ஆனால், மாதுளை அப்படியல்ல. வெளியே கெட்டியான தோல், உள்ளே பஞ்சு போன்ற வெள்ளைத் தோல், அதற்குள் மிக மென்மையான முத்துக்கள். நாம் தோலைப் பிய்க்க அழுத்தம் கொடுக்கும்போது, உள்ளே இருக்கும் மென்மையான முத்துக்கள் நசுங்கிவிடுகின்றன. இதுதான் ஜூஸ் வெளியேறக் காரணம்.
கரண்டி டெக்னிக்: கத்தி வேண்டாம், கை வலிக்க வேண்டாம். உங்கள் சமையலறையில் இருக்கும் ஒரு கனமான கரண்டி இருந்தாலே போதும். மாதுளையைச் சேதாரம் இல்லாமல் முழுமையாக உரித்துவிடலாம்.
முதலில், மாதுளை பழத்தை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். பழத்தின் நடுவில் கத்தியால் ஒரு ரவுண்டு வெட்டி, பழத்தை இரண்டு பாதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இப்போதுதான் நம் ஹீரோவான கரண்டி உள்ளே வருகிறது.
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வெட்டி வைத்த மாதுளையின் ஒரு பாதியை எடுத்து, வெட்டிய பக்கம் பாத்திரத்தைப் பார்த்தவாறு கையில் பிடித்துக்கொள்ளுங்கள். இப்போது, பழத்தின் பின்பக்கம் பகுதியில் கரண்டியால் 'டப் டப்' என்று தட்டுங்கள்.
நீங்கள் தட்டத் தட்ட, உள்ளே இருக்கும் முத்துக்கள் ஒவ்வொன்றாகப் பாத்திரத்தில் உதிர ஆரம்பிக்கும். பழம் நசுங்காது, ஜூஸ் வெளியேறாது, கையில் கறையும் படாது. முத்துக்கள் மட்டும் தனியாக, அழகாக வந்து விழும்.
இன்னொரு முறை: கரண்டி இல்லாமலும் இன்னொரு முறையில் செய்யலாம். மாதுளையின் உச்சியில் இருக்கும் அந்தப் பூ போன்ற காம்புப் பகுதியை மட்டும் வட்டமாக வெட்டி எடுத்துவிடுங்கள். இப்போது பார்த்தால், உள்ளே வெள்ளை நிற கோடுகள் தெரியும். அந்தக் கோடுகளுக்கு நேராகக் கத்தியால் லேசாகக் கீறிவிடுங்கள். பிறகு ஆரஞ்சுப் பழத்தை உரிப்பது போலப் பிரித்தால், பூ போல விரிந்துவிடும். அதன்பிறகு முத்துக்களை உதிர்ப்பது மிகவும் சுலபம்.
இனிமேல், மாதுளை வாங்கினாலே இந்தக் 'கரண்டி டெக்னிக்' நினைவுக்கு வந்துவிடும். இதனால் நேரம் மிச்சமாவதுடன், பழத்தின் முழுச் சத்தும் வீணாகாமல் நமக்குக் கிடைக்கும். இன்றே உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.