ஆசியாவை தாயகமாகக் கொண்ட கொத்தமல்லியின் விதையும், தழையும் நமது உணவில் பெரும் பங்கு வகிக்கின்றன. கி. மு 10 ம் நூற்றாண்டில் இருந்தே கொத்தமல்லி புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் தான் இது அதிகம் விளைகிறது. மற்ற நாடுகளை விட இந்திய கொத்தமல்லிக்குத் தான் மவுசு அதிகம்.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, கே, ஏ, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை உள்ளன. இந்த ஊட்டச்சத்து நிறைந்த மூலிகை உங்கள் அன்றாட உணவு தேவைகளை சிரமமின்றி பூர்த்தி செய்ய உதவும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தும்.
பச்சை கொத்தமல்லி உணவில் நறுமணத்தை அதிகரிக்கிறது. அதோடு வாயுவை போக்க, பித்தத்தை தணிக்க, உடல் சூட்டை குறைக்க , நஞ்சை முறிக்க, போதையை தீர்க்க , ரத்த அழுத்தத்தை குணப்படுத்த, இதய பலத்தை பெருக்க நல்ல மருந்தாகும். நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி1, சி ,ஈ என பல வைட்டமின் சத்துக்கள் மேலும், இரும்புச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களின் அஞ்சறை பெட்டியாக கொத்தமல்லி இருக்கிறது
கொத்தமல்லி ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு அஜீரணம், வாயு, அமிலத்தன்மை, எரியும் உணர்வு மற்றும் வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கலாம். இதுமட்டுமின்றி வேகமாக அதிகரிக்கும் உடல் எடையையும் இது கட்டுப்படுத்தும்.
கொத்தமல்லி வெறுமனே ருசிக்காகவும், மணத்திற்காகவும் மட்டுமே உணவில் சேர்க்கப்படும் பொருள் அல்ல. அது புட் பாய்சன் தவிர்க்க உதவும் பொருளும் கூட. கொத்தமல்லி இலையில் 'டோடேசெனால்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இது உணவு ஃபுட் பாய்சானவதற்கு காரணமான 'சால்மோநெல்ன்' என்ற கிருமியை கொன்று விடுகிறது என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
'குர்செடின்' மற்றும் 'டோகோபெரோல்' போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொத்தமல்லி இலைகளில் காணப்படுகின்றன. இதன் உதவியுடன் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம். மார்பக புற்றுநோயைக் கட்டுப்படுத்த கொத்தமல்லி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். காரணம் இதில் அதிகம் காணப்படும் 'அபிஜெனின்' என்ற இராசயனம் தான் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
இது தவிர கொத்தமல்லி இலைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மற்றும் நரம்பியல் மண்டலத்தையும் வலுப்படுத்தும்.
கொத்தமல்லி இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கிறது. இது உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளில் காணப்படும் சாற்றின் உதவியுடன், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்துவது மிகவும் எளிதானது.
மூக்கடைப்பு மற்றும் மூக்கு சம்பந்தப்பட்ட பல தொல்லைகளுக்கு கொத்தமல்லி தழையை துவையலாக செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட தொல்லைகள் சீர்படும்.
கொத்தமல்லி சிறுநீரக நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கொத்தமல்லியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் சிறுநீரக செயல்பாட்டிற்கு பயன்படுகிறன. சிறுநீரக கற்கள் உட்பட அனைத்து சிறுநீரக பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
கொத்தமல்லி உடலைக் குளிர்ச்சியாக்கும், உடல் வெப்பத்தை சமநிலைபடுத்தும். எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சாறு கலந்து பருகி வந்தால் வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்.
மாதவிலக்கு ஒழுங்கின்மை உடைய பெண்கள் தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது. கொத்தமல்லியை சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பை வலுப்படும், சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தும்.
கொத்தமல்லித் தழையைக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வதக்கி உடையாத புண்களின் மீது பற்றிட, பழுத்து, உடைந்து புண்ணும் ஆறிப்போகும்
தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோகியமான வாழ்வை வாழலாம். இத்தகைய ஆரோக்கிய சத்துகள் நிறைந்த கொத்தமல்லியை எளிதில், வீட்டுத் தோட்டம் மற்றும் சிறு தொட்டியில் கூட வளர்க்க முடியும்.