
சில குழந்தைகள் எட்டு மாதத்திலேயே எடுத்தடி வைத்து நடந்து விடும். 10 மாதத்தில், ‘அம்மா’ என்று அழைத்து விடும். உணவு உண்பதில் இருந்து தீவிரம் காட்டும். ஆனால், சில குழந்தைகள் நடை பயில்வதில் இருந்து பேசுவது, எதையும் எதிலும் வித்தியாசம் கண்டுபிடிப்பது அனைத்திலும் சற்று தாமதப்படுவார்கள். அப்பொழுது பெற்றோர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
இரட்டைக் குழந்தைகளே ஆனாலும், ஒரே மாதிரி இருவருக்கும் சாப்பாடு கொடுத்து வளர்த்தாலும் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்று முறையில் இருவருக்கும் சாப்பாடு ஊட்டி வளர்த்தாலும், ஒரே நேரத்தில் இருவரும் ஒரே மாதிரியாக நடந்துகொள்ள மாட்டார்கள்.
ஒரு குழந்தை பதினான்கு, பதினைந்தாவது மாதத்திலேயே படிகளில் ஏறி, இறங்கி, உருண்டு விழுந்து விளையாடத் தொடங்கிவிடும். உறவுமுறையை நாம் எப்படி சொல்லிக் கொடுக்கிறோமோ அப்படியே அழைக்க ஆரம்பித்து விடுவார்கள். பசிக்கிறது என்றால் அம்மாவிடம் சாப்பாட்டு மேஜைக்கு அழைத்து வருவார்கள். விளையாட்டு பொருட்களுடன் சுறுசுறுப்பாக விளையாடி எதையும் விரைவாக செய்து முடிப்பார்கள். புது முகங்களைப் பார்த்ததும் முகம் பார்த்து சிரித்து வெறுப்பில்லாமல் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.
இன்னும் சில குழந்தைகள் எல்லாவற்றையும் தாமதமாகத்தான் செய்வார்கள். இப்படித் தாமதம் ஆன வளர்ச்சியால் எந்தவித பாதிப்பும் இல்லை. செய்யத் தொடங்கும்பொழுது சரியாகச் செய்கிறார்களா என்பதைத்தான் நாம் தினசரி கவனிக்க வேண்டும். நாம் பேசுவதை உற்று நோக்குகிறார்களா? கண் பார்த்து சிரிக்கிறார்களா? என்பதை நன்றாக கவனிக்க வேண்டும். இவற்றில் எதையும் சரிவர செய்யவில்லை என்றால் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.
தவழும் குழந்தைகள் எதையும் தொடும், எடுக்கும், எறியும், எதையும் துணிந்து செய்யும். பாம்பைக் கண்டால் கூட எட்டிப் பிடிக்க முயல்வார்கள். ‘இளம் கன்று பயமறியாது’ என்பது இதைத்தான். துணிவு அவர்களுக்கு அதிகம். கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள். சுயக்கட்டுப்பாடு என்பது அந்தப் பருவத்தில் தெரியாது. எதைப் பார்த்தாலும் கைதட்டி விளையாடுவார்கள். சத்தம் போட்டு சிரித்து குரல் எழுப்புவார்கள்.
குழந்தைகள் தவழ ஆரம்பித்து விட்டால் வீட்டில் அதிகம் ஃபர்னிச்சர் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும். பிள்ளை நடமாடக்கூடியதாக, பிள்ளைக்கு சாதகமாக ஏற்ற மாதிரி வீட்டுப் பொருட்களை நாம் மாற்றி வைத்து விட வேண்டும். வளர்ந்தவர்களுக்கும், முதியோர்களுக்கும் எப்படி சௌகரியம் தேவைப்படுகிறதோ அதே சௌகரியமும், பாதுகாப்பும் குழந்தைகளுக்கு அதிகம் தேவை. அப்பொழுதுதான் அவர்கள் ஓடியாடி விளையாட பிரச்னை இல்லாமல் இருக்கும்.
இப்பொழுதெல்லாம் சிலர் குழந்தையை முதன் முதலாக தவழ்ந்தபொழுது, உட்கார்ந்தபோது, எழுந்து நின்றபோது, நடந்தபோது, உணவைத் தானாக தட்டில் இருந்து எடுத்து உண்ட பொழுது என்று வீடியோ எடுத்து வைத்து காண்பிக்கிறார்கள். இதை குழந்தைகள் வளர்ந்த பின்பு பார்த்து ரசிக்கிறார்கள். நான் இப்படித்தான் வளர்ந்தேனா என்று கேட்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கிறது.
குறிப்பாக, குழந்தைகளுக்கு எதெல்லாம் கூடாது என்று பெற்றோர்கள் நினைக்கின்றார்களோ அவற்றை தந்திரமாக விலக்கி வைத்து விட வேண்டும். பெற்றோரின் உதவி பிள்ளைக்கு அதிகம் தேவைப்படுவது இந்தப் பருவத்தில்தான். விதிகள், முறைகள், கட்டுப்பாடுகள் உங்களுக்குச் சுலபமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு அப்படி இல்லை.
குழந்தைகள் என்ன செய்யும், எந்தெந்த இடத்தில் எல்லாம் போய் திரும்பும், என்பதை மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் சொல்லி வைத்து விட வேண்டும். இது அப்படியே அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விடும். பிறகு அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதேபோல், தட்டில் இருந்து உணவை எடுத்து உண்ணும்போது உற்சாகம் காட்டுங்கள். அதை விடுத்து சாப்பாட்டை நிலத்தில் சிந்தும்போது மட்டும் குறையாகப் பேசினால் அவர்களுக்குக் குழப்பமும், கோபமும் ஏற்படும். குழந்தைகள் தானாக ஒரு செயலை செய்யும்பொழுது ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தால் அவர்களுக்கு இது நல்லது என்று புரிய ஆரம்பிக்கும்.
அதேபோல், வீட்டிற்கு விருந்தினர் வந்துவிட்டால் புது முகங்களைப் பார்த்து நிறைய குழந்தைகள் தொடர்ந்து அழுவார்கள். அப்பொழுது அவர்களுடன் நாம் உரையாடுவது, கொஞ்சி மகிழ்வது, சாப்பாட்டு நேரம், தூங்க வைக்கும் நேரம் எல்லாம் மாறிவிடும். அதனால் அவர்கள் சலிப்படைந்து அழுவார்கள். இவை எல்லாவற்றையும் நாம் கவனத்தில் கொண்டு குழந்தைய வளர்க்க வேண்டியது தவழும் பருவத்திலிருந்தே அவசியமான செயல். இதை எல்லாம் நாம் பொறுமையாகக் கையாண்டால் குழந்தை வளர்ப்பில் சிரமம் இருக்காது.