
நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசும், மாநில அரசும் பல திட்டங்களை சலுகைகளுடன் அறிவித்து, அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதனால் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள சாமானிய மக்கள் மற்றும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட குடும்பங்கள் பல வாழ்வாதாரப் பயன்களைப் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)வுக்காக விண்ணப்பிக்கத் தேவையான தகுதியைத் தீர்மானிக்க சில அளவுகோல்கள் உண்டு. யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் பயனடைய தகுதி பெற்றவர்கள் மற்றும் இத்திட்டம் குறித்த சில பயனுள்ள தகவல்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
யோஜனா (PMAY) திட்டத்திற்குத் தகுதி பெற குறிப்பிட்ட வருமான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS- Economically Weaker Section), குறைந்த வருமானக் குழு (LIG - Low Income Group) அல்லது நடுத்தர வருமானக் குழு MIG-I (Middle Income Group-I) MIG-II (Middle Income Group-II) ஆகியவற்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
குறிப்பாக EWS பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் 3 லட்ச ரூபாய் வரையும், LIG குறைந்த வருமானம் உள்ளவர்கள் 3 முதல் 6 லட்ச ரூபாய் வரையும், MIG-I நடுத்தர வருமான நபர்கள் 6 முதல் 12 லட்ச ரூபாய் வரையும், MIG-II நடுத்தர வருமானக் குழுவினர்II 12 முதல் 18 லட்ச ரூபாய் வரையும் உள்ள வருமானம் வகைப்பாட்டில் உள்ளது.
மேலும், இதற்குள் வரும் பயனாளிகள் மற்றும் அவரது எந்தவொரு குடும்ப உறுப்பினரும் இந்தியாவில் எங்கும் ஒரு பக்கா வீட்டை சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. மேலும், அவர்கள் இதற்கு முன்பு வேறு எந்த மத்திய அல்லது மாநில வீட்டு வசதித் திட்டத்தின் நன்மைகளையும் பெற்றிருக்கக் கூடாது. EWS மற்றும் LIG பிரிவுகளுக்கு பெண் உரிமை அல்லது இணை உரிமை கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் ஆதார் எண்ணை வைத்திருப்பது அவசியமாகும்.
PMAY திட்டத்திற்கு விண்ணப்பிக்க 16 முதல் 59 வயதுக்குட்பட்ட வயது வந்த ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பங்கள், உடல் தகுதி உள்ள வயது வந்த உறுப்பினர் இல்லாத மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள், பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடி குடும்பங்கள், உடல் உழைப்பு மூலம் வருமானம் ஈட்டும் சொந்த நிலமற்ற குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
pmaymis.gov.in (PMAY-நகர்ப்புறத்திற்கு) அல்லது pmayg.nic.in (PMAY-கிராமத்திற்கு) என உள்ள அதிகாரப்பூர்வ PMAY வலைத்தளத்தைப் பார்வையிடவும். உங்கள் வருமானம் மற்றும் வீட்டு நிலையின் அடிப்படையில் சரியான விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். ஆதார் எண், வருமானத் தகவல் மற்றும் வீட்டு விவரங்கள் உள்ளிட்ட அவசியமான விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை தெளிவாக நிரப்பவும்.
இந்தத் திட்டம் தரும் நன்மைகள் என்ன தெரியுமா?
கடன் வாங்கும் தகுதியானவர்களுக்கு 2.67 லட்ச ரூபாய் வரை வட்டி மானியத்துடன் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடி நிதி பரிமாற்றம், புதிய வீடுகளைக் கட்டுவதற்கு அல்லது ஏற்கெனவே உள்ளவற்றைப் புதுப்பிப்பதற்கான உதவிகளைப் பெறலாம். இதில் கவனிக்கத்தக்க அம்சமாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரரின் குடும்பத்தில் கணவன் துணையற்ற மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றனர். மேலும், விண்ணப்பதாரர் இதற்கு முன்பு மத்திய அல்லது மாநில அரசின் வீட்டுவசதித் திட்ட சலுகைகளைப் பெற்றிருக்கக்கூடாது என்பது முக்கிய விதிமுறை.