
உங்கள் வீடு மற்றும் குடும்பத்தாரின் பாதுகாப்பிற்காக வீட்டில் ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவுடன், அந்த நாயிடம் நீங்கள் எதிர்பார்க்கும் குணாதிசயங்களையும் முடிவு செய்துவிடுவது அவசியம். அதாவது, அது நம் வீட்டுக் குழந்தைகளிடமும், வீட்டிலிருக்கும் மற்ற செல்லப் பிராணிகளிடமும் ஒத்திசைந்து போகும் விதம், அந்நியர்களைப் பார்த்தவுடன் அந்த நாய் வெளிப்படுத்தும் எதிர்வினைகள் போன்றவற்றையும் மனதிற்கொண்டு செயல்படுவது சிறப்பாகும். வீட்டுக் காவலுக்கு சிறந்த 6 வகை நாய்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepard): இந்த வகை நாய் மென்மையான குணம் கொண்டது. அதேநேரம் மிக தைரியமானது. வீட்டைக் காப்பதில் அபார திறமை கொண்டது. வீட்டில் உள்ளவர்களிடம் அன்பாகப் பழகக்கூடியது. முறையாகப் பயிற்சியளிக்கையில், நன்கு கவனிக்கவும், கற்றுக்கொள்ளவும், கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும் செய்யும். இந்த வகையை தேர்ந்தெடுக்கும் முன்பு அதன் பெற்றோரைப் பார்த்து, ஆரோக்கியத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
2. பாக்ஸர் (Boxer): இதை ஒரு சிறந்த பாதுகாவலனாக நினைக்கத் தூண்டுவது இதன் அச்சம் கொள்ளச் செய்யும் தோற்றமும் பயமுறுத்தும் பார்வையுமேயாகும். அறிமுகமில்லாத வெளி நபர்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களின் உள் மனது நோக்கங்களை துல்லியமாக தனது மோப்ப சக்தியால் அறிந்து கொள்வதில் இதற்கு இணையாக வேறெந்த நாயையும் குறிப்பிட முடியாது. பாக்ஸர் ஒரு சிறந்த பாதுகாப்பாளன், நண்பன் மற்றும் எந்த நேரமும் துறுதுறுவென ஏதாவதொரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதில் விருப்பமுள்ள நாய்.
3. டாபர்மேன் (Doberman): டாபர்மேன் ஒரு விசுவாசமான, பயமறியாத, புத்திசாலியான, ஒரு விளையாட்டு வீரனின் சக்தியின் அளவுக்கு இணையான சக்தி, சுற்றுப்புற நிகழ்வுகளை கூர்ந்து நோக்கி செயலாற்றும் திறன் மற்றும் விழிப்புணர்வு கொண்ட நாய். அனுபவம் மிக்க சிறந்த பயிற்சியாளர் மூலம் தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் இதை ஒரு சிறப்பான பாதுகாவலனாகவும், தோழனாகவும் மாற்ற முடியும்.
4. ராட்வைலர் (Rottweiler): ராட்வைலர் தன்னை வளர்ப்போரிடம் மிகுந்த விசுவாசம் கொண்டது. அந்நியர்களின் வருகையை இதன் உள்ளுணர்வு இதற்கு உணர்த்திவிடும். உடனடியாக ஆக்ரோஷமான தாக்குதலுக்குத் தயாராகிவிடும் குணம் கொண்டது. மிகுந்த புத்திசாலித்தனமும் கீழ்படியும் குணமும் இதற்கு உண்டு. எனவே, நமது தேவைக்கேற்ப, குட்டியிலிருந்தே இதற்கு பயிற்சியளித்து வந்தால் இதை ஒரு சிறந்த பாதுகாப்பாளனாகவும் சமூகப் பண்புள்ள நாயாகவும் உருவாக்க முடியும்.
5. புல் மஸ்ட்டிஃப் (Bull Mastiff): இயற்கையிலேயே இது காவலுக்கு சிறந்த நாயாகவும், வளர்ப்பவரின் குடும்பத்தாருடன் மென்மையாக அன்பாகப் பழகக் கூடியதாகவும் உள்ளது. வீட்டில் உள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் நேரும்போது அவர்களின் பாதுகாப்பிற்காக ஆக்ரோஷமான செயல்பாடுகளை மேற்கொள்ளத் தயங்காது. வழக்கத்திற்கு மாறாக வீட்டில் எதுவும் நிகழும்போது பயங்கரமாகக் குரைத்து உரிமையாளருக்கு விழிப்புணர்வை உண்டுபண்ணும். நண்பர்களையும் அறிமுகமற்றவர்களையும் வேறுபடுத்திப் பார்க்க குட்டியிலிருந்தே இதற்குப் பயிற்சி அளிக்கலாம்.
6. கோம்பை (Kombai): கோம்பை நாய் தென் இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டது. வீரம் செறிந்தது. இயற்கையிலேயே விழிப்புணர்வு, தைரியம் மற்றும் காவல் காக்கும் திறன் கொண்டது. வேட்டைக்கு செல்லும்போது பயன்படுத்தப்பட்டு வந்த கோம்பை நாய், பிறகு வீட்டுக் காவலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.