
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று அவரவர்க்கு என வேலைகளும், கடமைகளும் உள்ளன. உடலை கவனித்துகொள்ள நேரமின்மையால் அடிக்கடி சிறுசிறு உடல் உபாதைகளால் அவதியுற நேர்கிறது. உடலில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற பல காரணிகள் நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. இவை குறையும்போது உடலில் சிறு சிறு பிரச்னை அறிகுறிகளாகக் காட்டும். இவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரி செய்ய, பிரச்னைகளை சரிசெய்து கொள்ளலாம்.
அடிக்கடி மயக்கம், சோர்வு என அவதியுற நேர்ந்தால் வைட்டமின் பி12 குறைவு ஏற்பட்டுள்ளது என உணர்ந்து கொள்ளலாம். உடல் தசைகள் பிடித்துக் கொள்ளுதல் அதனால் அசௌகரியம் ஏற்பட்டால் உடலில் மெக்னீஷியம் சத்தும், வைட்டமின் டி சத்தும் குறைகிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
மூட்டுகளில் தொடர்ச்சியாக வலி, உட்கார, நிற்க சிரமப்படுகிறீர்கள் எனில் வைட்டமின் டி, k2 பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என உணர்ந்து கொள்ளலாம். வெளுத்த சருமம், அடிக்கடி மயக்கம் என இருந்தால் உடலில் இரும்புச் சத்து, வைட்டமின் பி12 குறைகிறது எனத் தெரிந்து கொள்ளலாம்.
அடிக்கடி சளி, தும்மல் என அவதிப்பட்டால் வைட்டமின் டி குறைகிறது எனப் புரிந்து கொள்ளலாம். சரும வறட்சி, பளபளப்பின்றி இருந்தால் வைட்டமின் ஈ குறைகிறது எனத் தெரிந்து கொள்ளலாம். அடிக்கடி நோய் தொற்று, பலகீனம் என இருந்தால் வைட்டமின் சி குறைபாடு உள்ளது எனப் புரிந்து கொள்ளலாம்.
இரவில் கண் பார்வை தெளிவில்லாமல் இருந்தால் வைட்டமின் ஏ குறைகிறது என புரிந்து கொள்ளலாம். உடைகிற நகம், நகப் பளபளப்பின்மை ஏற்பட பயோட்டின், இரும்புச் சத்து குறைபாடு என அறிந்து கொள்ளலாம். உடலில் புண்ணோ, காயமோ ஏற்பட்டு ஆற நாளானால் வைட்டமின் சி, சிங்க் சத்துக்கள் குறைவாக உள்ளது என அறியலாம்.
முடி உதிர்வது, அதிகமாக முடியின் வளர்ச்சி தடைபடுகிறது எனில் பயோட்டின், வைட்டமின் பி7 பற்றாக்குறை என உணர்ந்து கொள்ளலாம். ஞாபக மறதி, நினைவில் வைத்துக்கொள்வதில் சிரமம் இருந்தால் ஒமேகா 3, பி காம்ப்ளக்ஸ் குறைபாடு உள்ளது என அறியலாம். மலச்சிக்கல், செரிமானப் பிரச்னை என்றால் நார்ச்சத்து, வைட்டமின் சி குறைகிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
விரல், கை, கால்கள் மரத்துப் போகிறது என்றால் வைட்டமின் சி, வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இருக்கலாம். வாய்ப்புண் அடிக்கடி ஏற்பட்டால் வைட்டமின் பி2, பி12 சத்து குறைகிறது எனப் புரிந்து கொள்ளலாம். எலும்புகளில் வலி, நடப்பதில் சிரமம் என இருந்தால் கால்சியம் குறைபாட்டோடு, வைட்டமின் பி3, வைட்டமின் கே2 சத்துக்கள் குறைகிறது எனப் புரிந்து கொள்ளலாம். ஹார்மோன் பிரச்னைகள் வருவதற்கு வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, வைட்டமின் டி குறைபாட்டால் உண்டாகலாம்.
மேற்கண்ட பிரச்னைகளைக் கண்டறிந்து நாம் உணவின் மூலமோ, தகுந்த மருத்துவரை அணுகுவதன் மூலமோ பிரச்னைகள் பெரிதாகாமல் காத்துக் கொள்ளலாம்.