மதிப்பெண் மட்டுமே முக்கியமா? குழந்தைகளை பாராட்டும் மாபெரும் ரகசியம்!

தவறான பாராட்டு தலைக்கனத்தை தரும்; சரியான பாராட்டு எதிர்காலத்தை மாற்றும்!
குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்புAI image
Updated on

வெற்றியை விட முயற்சியைக் கொண்டாடும் குழந்தை வளர்ப்பு:

“என் பையன் எதுவுமே சரியா செய்ய மாட்டான்…சொதப்பல் திலகம்”

“அவளுக்கு படிப்பைத் தவிர வேற எதிலும் ஆர்வம் இல்லை…சோம்பேறி”

“அவனோட தம்பியைப் பாரு… எவ்வளவு நல்லா படிக்கிறான்! நீயும் தான் இருக்கியே”

இப்படிப்பட்ட வார்த்தைகள் பல வீடுகளில் தினமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

ஆனால், “ நீ இன்று ரொம்ப அழகாக முயற்சி செய்திருக்கிறாய்.”

“உன்னால் இது முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”

“தவறு செய்தாலும் பரவாயில்லை… மறுபடியும் முயற்சி பண்ணலாம்.” என்ற பாராட்டு வார்த்தைகள் எத்தனை வீடுகளில் கேட்கின்றன?

குழந்தைகளை வளர்ப்பதில் உணவு, கல்வி, உடல்நலம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு சரியான நேரத்தில் சொல்லப்படும் பாராட்டும், ஊக்கமும் மிகவும் முக்கியமானது.

பாராட்டு என்பது குழந்தையின் மனதிற்கு நாம் கொடுக்கும் ஒரு ஊட்டச்சத்து. அது தன்னம்பிக்கையை வளர்க்கும். முயற்சியை அதிகரிக்கும்.

தோல்வியிலிருந்து மீண்டு வர கற்றுக்கொடுக்கும். ஆனால் பாராட்டுவதற்கும் ஒரு கலை இருக்கிறது.

“நீயே உலகத்திலேயே சிறந்தவன்” என்று அடிக்கடி செயற்கையாக பாராட்ட வேண்டாம். அது குழந்தைக்கு தவறான எதிர்பார்ப்பை உருவாக்கலாம்.

அதற்கு பதிலாக, “ இந்த ஓவியத்திற்காக நீ நிறைய நேரம் செலவழித்திருக்கிறாய்.”

“கணக்கில் நேற்று விட இன்று முன்னேற்றம் தெரிகிறது.”

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்புAI image

“தம்பிக்கு உதவியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.” என்று முயற்சி, ஒழுக்கம், அன்பு, பொறுப்பு போன்ற நல்ல பண்புகளைப் பாராட்ட வேண்டும்.

ஒரு குழந்தை தேர்வில் 100 மதிப்பெண் பெற்றதற்காக மட்டுமல்ல. தோல்விக்குப் பிறகும் மனம் தளராமல் மீண்டும் படிக்க ஆரம்பித்ததற்காகவும் பாராட்டப்பட வேண்டும்.

வெற்றி பெற்றதற்காக மட்டுமல்ல. நேர்மையாக நடந்து கொண்டதற்காகவும் பாராட்டப்பட வேண்டும். விளையாட்டில் முதல் பரிசு பெற்றதற்காக மட்டுமல்ல. தன் நண்பரை ஊக்கப்படுத்தியதற்காகவும் பாராட்டப்பட வேண்டும்.

சில பெற்றோர்கள், “அதிகமாகப் பாராட்டினால் குழந்தை தலைக்கனம் ஆகிவிடும்.” என்று நினைக்கிறார்கள்.

ஓரளவுக்கு உண்மை என்றே வைத்துக் கொள்வோம், அதே நேரம் உண்மையான, அளவான, நேர்மையான பாராட்டு குழந்தையை ஊக்கப்படுத்த வல்லது மறுக்க முடியுமா? மாறாக, இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற ஊக்கத்தை உருவாக்கும். அதே நேரத்தில் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பாராட்டுவதை தவிர்க்க வேண்டும்.

“உன் அக்காவைப் போல படி.”

“அடுத்த வீட்டுப் பையனைப் பாரு.” என்ற வார்த்தைகள் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், பொறாமையையும் விதைக்கக்கூடும்.

இதையும் படியுங்கள்:
நந்தவனத்து பூக்கள்: குழந்தைகளை வளர்க்கும் கலையும்... பெற்றோரின் கடமையும்!
குழந்தை வளர்ப்பு

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. ஒருவரின் திறமையை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.

குழந்தைகள் நம்முடைய விமர்சனத்தை மறந்துவிடலாம். ஆனால் நாம் சொன்ன ஒரு உண்மையான பாராட்டு அவர்களின் மனதில் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும்.

ஒரு சிறிய பாராட்டு, ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையை உருவாக்கலாம். ஒரு நல்ல வார்த்தை, ஒரு புதிய முயற்சிக்குத் தூண்டுதலாக அமையலாம்.

ஒரு புன்னகையுடன் சொல்லப்படும் “நல்லா செய்திருக்கே, அருமை!”

என்ற ஒரு வாக்கியம்.

இதையும் படியுங்கள்:
தம்பதியரின் அந்தரங்கத்தில் மற்றவர்கள் எப்போது நுழையலாம்? தவிர்க்க வேண்டிய எல்லைகள்!
குழந்தை வளர்ப்பு

ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய சக்தி கொண்டது. எனவே,குழந்தைகளை மதிப்பெண்களுக்காக மட்டும் பாராட்டாதீர்கள்…அவர்களின் முயற்சிக்காகப் பாராட்டுங்கள்.

வெற்றிக்காக மட்டும் பாராட்டாதீர்கள்…நல்ல குணங்களுக்காகப் பாராட்டுங்கள். ஏனெனில், ஒரு குழந்தை முதலில் நம்புவது தனது பெற்றோரின் வார்த்தைகளைத்தான். அந்த வார்த்தைகள் ஊக்கமாக இருந்தால், அவர்களின் எதிர்காலமும் உயரமாக இருக்கும்.

"அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க” - தம் பிள்ளைகளை ஊக்கப் படுத்துவார்.

உங்கள் குழந்தைகள் தோல்விகளால் மனச்சோர்வு அடையாமல், நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் தங்கள் இலக்குகளை அடையத் தேவையான மனவலிமையைப் பெறுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com