
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பெளர்ணமி தினத்தன்று ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது சகோதர சகோதரிகளுக்கு இடையில் அன்பினை வலுப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இன்றைய நாளில் சகோதரிகள் "தங்கள் சகோதரன் அல்லது சகோதரனாக கருதப்படுபவன் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துடன் இருக்க வேண்டும் " என்று இறைவனை வேண்டி , கையில் ஒரு மங்கலக் கயிறை கட்டுவார்கள்.
கயிறு கட்டும் சகோதரிகளுக்கு இனிப்புகள், அன்பளிப்புகள் ஆகியவற்றை தந்து சகோதரர்கள் மகிழ்வார்கள். ரக்ஷாபந்தன் அன்று உங்கள் சகோதரரின் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட நிறத்தில் கயிறு கட்டினால், அவருக்கு நல்ல காலம் பிறக்கும் என்று நம்பப்படுகிறது. எந்த ராசிக்கு என்ன நிறத்தில் கயிறு கட்டலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷம்:
செவ்வாய் கிரகத்தின் ஆளுமையில் உள்ள மேஷ ராசி சகோதரர்களுக்கு சிவப்பு , அடர் சிவப்பு, மெரூன் நிறங்களில் கயிறு கட்டலாம். இது அவர்களுக்கு தைரியம், வலிமை மற்றும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.
ரிஷபம்:
சுக்கிரனின் அருள் பார்வைக் கொண்ட ரிஷப ராசி சகோதரர்களுக்கு வெளிர் பச்சை, அடர் பச்சை, மரகதம் ஆகிய நிறங்களில் உள்ள கயிறு கட்டலாம். இதனால் அவர்களுக்கு அழகும், செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மிதுனம்:
புதன் கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட மிதுன ராசி சகோதரர்களுக்கு மஞ்சள் நிறத்தில் கயிறு கட்டலாம். இது அவர்களுக்கு அறிவு மற்றும் அன்பினை மிகுதியாக வழங்குகிறது.
கடகம்:
சந்திரனால் ஆளப்படும் கடக ராசி சகோதரர்களுக்கு வெள்ளை அல்லது வெள்ளி நிறத்தில் ராக்கி கயிறு கட்டினால், அவர்களுக்கு அது அமைதி மற்றும் நிம்மதியை கொண்டு வரும்.
சிம்மம்:
சிம்ம ராசி சூரியனால் ஆளப்படுகிறது. இவர் தலைமை, சக்தி , பெருமையை அளிக்கிறார். இவர்களுக்கு ஆரஞ்சு மற்றும் தங்க நிறத்தில் கயிறு கட்டினால் சூரியனின் அருள் கிடைக்கும்.
கன்னி :
புதன் கிரகத்தின் ஆளுமை நிறைந்த கன்னி ராசியை சேர்ந்த சகோதரர்களுக்கு பச்சை மற்றும் பழுப்பு நிறத்தில் கயிறு கட்டினால், புதனின் அருளால் அவர்களின் வாழ்க்கைகள் அமைதியும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படும்.
துலாம் :
சுக்கிரனின் அருள் பார்வைக் கொண்ட துலாம் ராசி கொண்ட சகோதரர்களுக்கு வெளிர்நீலம் அல்லது இளஞ்சிவப்பு வண்ணக் கயிறை கட்டினால் , அவர்களுக்கு சுக்கிரனின் அருளினால் அதிர்ஷ்டம் ஏற்படும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசியை செவ்வாய் கிரகம் ஆட்சி செய்கிறது. செவ்வாய் கிரகம் அறிவு மற்றும் சக்தியை தர வல்லது. இந்த ராசியை கொண்ட சகோதரர்களுக்கு செவ்வாயின் ஆசியைப் பெற, அடர் மெரூன் அல்லது அடர் சிவப்பு நிற ராக்கியை கட்டுவது நன்மை தரும்.
தனுசு:
தனுசு ராசி குருபகவானின் ஆளுமை நிறைந்தது. அதனால் தனுசு ராசியை சேர்ந்த சகோதரர்களுக்கு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் கயிறு கட்டுவது அவர்களின் அதிர்ஷ்டத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது நல்ல அறிவு மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
மகரம் :
சனி பகவானால் ஆட்சி செய்யப்படும் மகர ராசியை சேர்ந்த சகோதரர்களுக்கு நீலம் அல்லது கருப்பு வண்ணத்தில் ராக்கி கயிறு கட்டுவது அவரது வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தரும்.
கும்பம்:
சனி மற்றும் ராகு பகவானால் ஆளப்படும் கும்ப ராசியை சேர்ந்த சகோதரர்களுக்கு நீலம் மற்றும் சாம்பல் வண்ணத்தில் கயிறு கட்டினால் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும் நல்ல மனநிலையையும் தரும்.
மீனம்:
குரு மற்றும் சனி பகவான் ஆளுமை நிறைந்த மீன ராசியை சேர்ந்த சகோதரர்களுக்கு வெளிர் நீலம் அல்லது ஊதா வண்ணத்தில் கயிறு கட்டுவது இறைவனின் அருளை பெற்று தரும் அவர்களின் ஆற்றலையும் மேம்படுத்தும்.