
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள நிலையில், ஒருபுறம் மண் குளிர்ந்து விவசாயம் செழிக்கிறது. மறுபுறம், ஒரு பெரிய அச்சுறுத்தல் நம் வீடுகளின் வாசலில் காத்திருக்கிறது. ஆம், மழைநீர் புகுந்து வெள்ளக்காடாகும்போது, உயிரை காப்பாற்றிக்கொள்ள பாம்புகள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறி, மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு, குறிப்பாக வீடுகளுக்குள் நுழைகின்றன.
இந்த திடீர் அத்துமீறல் மிக ஆபத்தானது. ஏனெனில் தமிழ்நாட்டில் மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நான்கு அதிபயங்கர விஷப்பாம்புகளை நாம் இனங்கண்டு, அவற்றிடமிருந்து விலகி இருப்பது மிகவும் அவசியம்.
தமிழ்நாட்டில் மனித உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக விளங்குவது நான்கு வகை பாம்புகள் தான். அவை: கண்ணாடி விரியன், கட்டுவிரியன், நாகப்பாம்பு மற்றும் சுருட்டை விரியன். இந்த நான்கில் எந்த ஒரு பாம்பு கடித்தாலும், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்வது மட்டுமே உயிரைக் காக்கும் ஒரே வழியாகும்.
1. கண்ணாடி விரியன்: கண்ணாடி விரியன் பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக வேட்டையாடும். அதன் பிரதான உணவு எலிகள் என்பதால், வயல்வெளிகள் மற்றும் நெல் குடோன் போன்ற சமவெளிப் பகுதிகளில்தான் இவை அதிகம் காணப்படும். இது கடிப்பதற்கு முன் அதன் தோலை உரசிக் கொண்டு, 'உஸ்' என்ற ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும்.
இதன் விஷம் இரத்தத்தை உறைவதைத் தடுக்கும் அல்லது மிக வேகமாகக் கெட்டிப்பட வைக்கும் தன்மை கொண்டது. இதன் முதற்கட்ட பாதிப்பு சிறுநீரக செயலிழப்பாகவே இருக்கும். இதன் உடலின் மீது ஆங்கில எழுத்தான 'O' வடிவிலான அடையாளங்கள் இருந்தால் அது கண்ணாடி விரியன் என்பதை அறியலாம். இதை மலைப்பாம்பு குட்டி என தவறுதலாக எண்ணி நெருங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
2. கட்டுவிரியன்: கட்டுவிரியன் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடமாடக்கூடியது. இதன் அச்சுறுத்தல் கிராமப்புறங்களில் அதிகம் உள்ளது. இதன் கடி சற்று வித்தியாசமானது. கடிபட்ட ஆரம்பத்தில், இது கொசு அல்லது எறும்பு கடித்தது போல சிறிய வலியை மட்டுமே தரும்.
அலட்சியம் செய்தால், சிறிது நேரத்திலேயே வலி உடல் முழுவதும் பரவி, மரணத்தை உறுதி செய்துவிடும். கண் இமைகள் கனப்பது, பார்வை இரட்டையாவது, பேச்சு குழறுவது மற்றும் உடல் பலவீனம் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள்.
3. நாகப்பாம்பு: பெயர் நல்ல பாம்பு என்றாலும், இதன் விஷம் மிகவும் ஆபத்தானது. இது மனிதர்களுக்கு மிகவும் பழக்கமான பாம்பு. இது நெருங்கும் போது படம் எடுத்து எச்சரிக்கும். மீறி நெருங்கினால் கடித்துவிடும். இதன் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, நரம்புகளுக்கும் தசைகளுக்கும் இடையே உள்ள தொடர்பைத் துண்டிக்கும்.
இதனால் சுவாசிக்க முடியாமல் உயிர் இழப்பு ஏற்படும். நாகப்பாம்பின் தலையின் பின்புறம் ஆங்கில 'U' வடிவிலான அடையாளம் இருக்கும். இதுவே அதை, படம் எடுக்கத் தெரியாத சாரைப் பாம்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய அடையாளமாகும்.
4. சுருட்டை விரியன்: நான்கு பாம்புகளில் உருவத்தில் மிகச்சிறியதாக இருந்தாலும், இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி மரணங்களில் கணிசமானவை சுருட்டை விரியன் கடிப்பதாலேயே நிகழ்கின்றன. மலை அடிவாரங்களிலும், விவசாய நிலங்களிலும் காணப்படும் இவை மிகவும் ஆக்ரோஷமானவை.
இதன் விஷம் ரத்தம் உறைவதைத் தடுத்து, கடிப்பட்ட இடத்தில் இரத்தம் தொடர்ந்து வெளியேறச் செய்யும். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காவிட்டால், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு மரணம் நிகழும். சுருட்டை விரியன் மனிதர்களைப் பார்த்தவுடன் ஓடி ஒளியாமல், 'உஸ்' என்ற ஒலி எழுப்பித் தாக்கத் தயாராகும். இது ஓலைப் பாம்பின் செயல்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது.
பாம்புகளின் வகைகளை அடையாளம் காண்பதை விட, அவை இருக்கும் இடத்தை விட்டு பாதுகாப்பான தூரத்துக்கு விலகிச் செல்வதே மிகச் சிறந்த புத்திசாலித்தனம் ஆகும். விழிப்புணர்வுடன் இருந்தால், மழைக்காலத்தின் இந்த ஆபத்திலிருந்து நாம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்.