எலி கடிச்சா சாதாரணமா விடாதீங்க… டாக்டர்கள் சொல்லும் அந்த 10 நிமிட ரகசியம்!

Rat Bite
Rat Bite
Published on

நகரமோ, கிராமமோ... இப்போதெல்லாம் வீடுகளில் எலித் தொல்லை ரொம்பவே அதிகமாகிவிட்டது. ராத்திரி தூங்கும்போது காலில் ஏதோ சுருக்னு வலிக்கும், எழுந்து பார்த்தா எலி கடிச்சிருக்கும். நம்மில் பலரும் "ஏதோ எலிதானே கடிச்சிருக்கு, பரவாயில்லை" என்று அதைச் சாதாரணமாகக் கழுவிவிட்டுத் தூங்கப் போய்விடுவோம். 

ஆனால், நாய் கடியை விட எலி கடி சில சமயங்களில் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 

ஏன் பயப்பட வேண்டும்?

பார்க்கத்தான் எலிக் கடி சின்ன காயமாகத் தெரியும். ஆனால், எலியின் பற்கள் மற்றும் உமிழ்நீரில் கண்ணுக்குத் தெரியாத பல ஆபத்தான பாக்டீரியாக்கள் இருக்கும். எலி கடித்தவுடன், இந்த பாக்டீரியாக்கள் நம் ரத்தத்தில் கலந்து, 'ரேட் பைட் ஃபீவர்' (Rat-Bite Fever) என்ற ஒரு வகையான காய்ச்சலை உண்டாக்கும். 

புனே போன்ற நகரங்களில் மட்டும் ஆயிரக்கணக்கில் எலி கடி கேஸ்கள் பதிவாகிறதாம். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், மூட்டு வலி, கடுமையான காய்ச்சல் வந்து, ஒரு கட்டத்தில் இதயம் மற்றும் சிறுநீரகத்தையே பாதிக்கும் அளவுக்குக் கொண்டு போய்விடும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

மருத்துவ நிபுணர்கள் சொல்லும் 'கோல்டன்' அட்வைஸ்!

எலி கடித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான வேலை - காயத்தைக் கழுவுவது. சும்மா தண்ணீர் தெளிப்பது போதாது. பைப்பைத் திறந்துவிட்டு, ஓடுகிற தண்ணீரில், சோப்புப் போட்டுத் தேய்த்து, குறைந்தது 10 முதல் 15 நிமிடங்களாவது அந்தக் காயத்தைக் கழுவ வேண்டும். 

இப்படிச் செய்வதால், காயத்தில் ஒட்டியிருக்கும் பெரும்பாலான கிருமிகள் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டுவிடும். இதுதான் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முதல் படி.

என்ன செய்யக்கூடாது?

நம்ம ஊரில் ஒரு பழக்கம் உண்டு. காயம் பட்டால் உடனே காபி தூள் வைப்பது, மஞ்சள் வைப்பது, அல்லது ஏதாவது எண்ணெயைத் தடவுவது. எலி கடிக்கு தயவு செய்து இதைச் செய்யாதீர்கள். 

காயத்தைச் சோப்புப் போட்டுக் கழுவிய பிறகு, Povidone-iodine போன்ற ஆன்டிசெப்டிக் மருந்துகளைத் தடவி, சுத்தமான துணி அல்லது பேண்டேஜ் கொண்டு மூடி வையுங்கள். ரத்தம் வந்தால், லேசாக அழுத்திப் பிடித்து நிறுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
உஷார்..!தமிழகத்தில் பரவும் எலி காய்ச்சல்...தேங்கிய மழைநீரில் நடக்காதீங்க..!!
Rat Bite

ஊசி அவசியமா?

முதலுதவி முடிந்ததும், சோம்பேறித்தனம் படாமல் உடனே டாக்டரைப் போய்ப் பாருங்கள். காயம் பெரிதாக இருந்தால், சீக்கிரம் குணமாவதற்கு டாக்டர் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளைக் கொடுப்பார். தடுப்பூசியைப் பொறுத்தவரை, கடந்த ஐந்து வருடங்களில் நீங்கள் டிடி ஊசி போடவில்லை என்றால், கட்டாயமாகப் போட்டுக்கொள்ள வேண்டும். நாய் கடிக்குப்போடுவது போல 'ரேபிஸ்' ஊசி எலிக்குத் தேவையில்லை என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், உங்கள் காயத்தின் தன்மையைப் பார்த்து மருத்துவர் முடிவு செய்வார்.

இதையும் படியுங்கள்:
உங்க கால் வெடிப்புல எலி கூட பதுங்கிக்கொள்ளும்... நெய் தடவி பாருங்க!
Rat Bite

எலி கடிதானே என்று அலட்சியமாக இருந்தால், சில நாட்களில் காயம் சிவந்து போதல், வீக்கம், சீழ் பிடித்தல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். இது ஆபத்தின் அறிகுறி. எனவே, எலி கடித்தால் பயப்படத் தேவையில்லை, ஆனால் அலட்சியமாகவும் இருக்கக்கூடாது.

 சரியான நேரத்தில் சோப்புப் போட்டுக் கழுவி, மருத்துவரை அணுகினால், எந்தப் பெரிய நோயும் வராமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com