
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இன்று (ஜூலை 27, நான்காவது ஞாயிற்றுக்கிழமை) தேசிய பெற்றோர்கள் தினம். குழந்தை வளர்ப்புக் கலையின் நவீன யுக்திகள் குறித்து அமெரிக்க உளவியல் நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இந்தப் பதிவில் காண்போம்!
உங்கள் குழந்தைகளை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம் குழந்தைகள் அறிவாளிகளாக, சிறந்தவர்களாக உருவாக வேண்டும் என்பதில் மிகவும் அவசரப்படுகின்றோம். இந்த விரைவும், அவசரமும் சில சமயங்களில் விபரீத விளைவுகளை உருவாக்கக் கூடும். எனவே, இந்த விஷயத்தில் அவசரப்படாமல், குழந்தைகளை குழந்தைகளாகவே நினைத்து அதற்கு ஏற்ற வகையில் திறன்களையும், மதிப்பீடுகளையும் கற்றுத் தர வேண்டும்.
நம்மால் சிறு வயதில் செய்ய இயலாதவற்றை குழந்தைகள் மீது திணிக்கும் போக்கு கூடாது. முதலில் நவீன காலத்திற்கு ஏற்ப நம்மை நாமே மெருகேற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் நிறைய படிக்க வேண்டும், நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் அப்டேட்ஸாக இருந்தால்தான் உங்கள் குழந்தைகளை நல்லபடியாக கையாள முடியும்.
நாம் நம் குழந்தைகளோடு கூட்டணி அமைக்க வேண்டும். அதாவது அவர்களை தனியே விட்டு விடாமல் அவர்களது விளையாட்டுகள், கேளிக்கைகள் மற்றும் பயிற்சிகளிலும் நாம் பங்கேற்க வேண்டும்.
எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒப்பிடக் கூடாது. ஒரே மனிதனே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழல்களில் பலவிதமான மனநிலை உள்ளவனாக இருக்கும்போது, இரு குழந்தைகளை ஒப்பிடுவது இன்றைய சூழலில் அறிவின்மை செயலாகும்.
பல்வேறு விதமான சூழ்நிலைகளை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அதாவது, குழந்தைகளை விளையாட்டு, கலை, இலக்கியம், இயற்கை, விஞ்ஞானம் என மாறுபட்ட சூழ்நிலைகளில் ஈடுபடவிடும்போதுதான் அவர்களின் சுய விருப்பமும், ஆற்றலும் தெரியவரும்.
தங்களது குழந்தைகள் அறிவாளிகளாக விளங்க அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது, கூடுதல் நேரம் படிக்க வைக்க டியூஷன் அனுப்புவது, யோகா பயிற்சி அனுப்புவது, சத்தான உணவுகளைத் தருவது என பெற்றோர்கள் விதவிதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இவற்றை விட, வீட்டில் ஒரு சிறு நூலகம் இருந்தாலே போதும், குழந்தைகளின் ஆர்வம் இயல்பாகவே கல்வியின் பக்கம் திரும்பி விடும் என்கிறார்கள் அமெரிக்காவின் நெவாடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். நூலகம் இருக்கும் வீடுகளில் குழந்தைகளின் 3 வயதிலேயே புத்தகங்களின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களின் கல்வித் தரமும் சராசரியாக உயர்ந்தது.
குழந்தைகள் சேட்டை செய்கின்றன என்பதற்காக சில பெற்றோர்கள் அடிக்கடி அவர்களின் பின்புறத்தில் அடிக்கிறார்கள். அப்படி அடி வாங்கும் குழந்தைகள் பிற்காலத்தில் பயங்கர கோபக்காரர்களாக மாறுவார்கள் என்கிறார்கள் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் துலேன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அந்த ஆய்வில் அடிக்கடி பின்புறத்தில் அடி வாங்கும் குழந்தைகள், மற்ற குழந்தைகளை விட இரண்டு மடங்கு கோபக்காரர்களாக, ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை கொண்டவர்களாக, வம்புச் சண்டைக்கு போகின்றவர்களாக பிற்காலத்தில் மாறுவார்கள் என்பது தெரியவந்தது.
உங்கள் குழந்தைகள் சின்னச் சின்ன வீட்டு வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். குழந்தைகளை அன்றாட வீட்டுப் பணிகளில் இருந்து விலக்கி வைப்பது பெரும் தவறு. இதனால் அவர்களது பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறைபடும் என்கிறார்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
மூன்று வயது வரை பெற்றோர்களால் தட்டிக்கொடுத்து பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் பின்நாளில் சமுதாய ரீதியாக பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது ஜாமா சைக்காலஜி ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தக் குழந்தைகள் 14 வயதில் ஆரோக்கியத்துடனும், புத்திசாலிகளாகவும் இருப்பதும் தெரிய வந்துள்ளது.