சமீபத்தில் படித்த செய்தி நெஞ்சை உலுக்கியது. ‘சென்னை வடபழனி பகுதியில் வீடு புகுந்து திருடிய, பதினைந்து வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் பிடிபட்டனர்’ என்ற அந்தச் செய்தி அந்தப் பிஞ்சு உள்ளங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய தீயொழுக்கப் பரிமாணத்தைக் காட்டியது.
சிறுவர்களுக்குத் திருடவேண்டிய அவசியம்தான் என்ன? அந்த வயதில் அவர்களுடைய அபரிமித தேவைகள் என்னவாக இருக்கும்? அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் எல்லாம் அந்தந்தக் குடும்பத்து வருமான எல்லைக்குட்பட்டு அவர்களுக்குக் கிடைக்காமலா போய்விட்டது?
பொதுவாக அந்த வயதில் தன்னை முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொள்ள சிறுவர்கள் விரும்புவது இயல்புதான். இதனால்தான் இன்றும் பேருந்து படிக்கட்டுகளில் பள்ளி மாணவர்கள் தொற்றிக்கொண்டு பயணம் செய்கிறார்கள். தங்களுடைய அந்த வீரத்தை சக மாணவர்களும், சாலையில் போவோரும், பேருந்தில் பயணிப்போரும் பராட்டுவதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ‘பார்த்து, பார்த்து, ஜாக்கிரதை, விழுந்திடப் போறே,’ என்ற பதற்றக் குரல்கள் எல்லாம் அந்தப் பாராட்டின் ஒலியாகவே அவர்கள் பாவிக்கிறார்கள்.
ஆனால் வீடு புகுந்து திருடுவதை அப்படி வீரம் காட்டும் ஒரு செயலாகக் கருத முடியுமா? இப்போதைக்குத் தப்பித்து விட்டாலும் எப்போது வேண்டுமானாலும் பிடிபடலாம் என்ற அச்ச உணர்வு அந்த இளம் மனசுக்குள் தோன்றாமலா இருக்கும்? இந்த ஒழுங்கீனமான செயலுக்கு பின்னணி அல்லது காரணம் என்னவாக இருக்க முடியும்?
ஜீவனம் நடத்துவதற்காகக் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் இவர்களைப் போன்ற அப்பாவி சிறுவர்களை பின்னிருந்து இயக்கலாம். இவர்களுக்கு அப்படித் திருடுவதில் உள்ள சாகச சந்தோஷத்தை ஒரு போதையாக ஏற்றியிருக்கலாம். அதைவிட, சிக்கிக் கொண்டால் அவர்களை பலிகடாக்களாக ஆக்கிவிட்டுத் தாம் தப்பித்துக்கொள்ளும் உத்தியாகவும் இருக்கலாம்.
சமுதாயத்தில் மறைமுகமாக நடக்கக் கூடிய ஒரு நிகழ்வாக இது இருக்கலாம். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பல சிறுவர்கள் வேறுவழியின்றி இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பிருக்கிறது. பிறருடைய தூண்டுதலாலோ, நிர்ப்பந்தத்தாலோ, தவிர்க்க முடியாத அவசியத்தாலோ இவ்வாறு கொள்ளை மட்டுமல்லாமல், கொலை என்ற கொடிய குற்றத்தையும் இவர்கள் புரிகிறார்கள்.
இதுபோன்ற குற்றங்களில் பிடிபடும் சிறுவர்கள், அக்குற்றங்கள் நிரூபிக்கக்கப்படும் பட்சத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். சிறை முதலான தண்டனைகளுக்கு அவர்களை உட்படுத்தக்கூடாது என்பதால், அவர்களை சீர்திருத்தும் நோக்கத்தோடு அந்தப் பள்ளிகளில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
ஒரு கட்டத்தில் இவர்கள் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுதலையாகும் தருணத்தில், அதாவது, பதினெட்டு வயது நிரம்பியவர் என்ற காரணத்தால் வெளியே வரும் சந்தர்ப்பத்தில், இவர்களை சமூகம் கள்ளப் பார்வையாகவே பார்க்கிறது. அவர்கள் நிரந்தரமாக ஒழுக்கமற்றவர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறது. மீண்டும் இயல்பான வாழ்க்கை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தாம் சீர்திருந்தி வந்திருப்பதையும், மனம் மாறி புனர்ஜன்மம் எடுத்திருப்பதையும் புரிந்துகொள்ளாத தம் குடும்பம், சுற்றம், உற்றார், உறவினர், நண்பர் என்று எல்லோர் மீதும் இந்தச் சிறுவர்களுக்குக் கோபம் பிறக்கிறது.
அந்தக் கோபம் பழிவாங்கும் போக்கை இவர்களுக்குள் வளர்த்துவிடுகிறது. அது மீண்டும் குற்றங்கள் புரிவதாகவோ, வன்முறையைக் கையாள்வதாகவோ எதிர்மறை திசைக்குத் திரும்புகிறது.
எந்தக் காரணத்துக்காகவோ பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்ட சிறுவர்கள், பெற்றோரால் அதிக வருமானத்தை எப்படியாவது சம்பாதித்து வரும்படி விரட்டப்படும் குழந்தைகள், பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர் இல்லாத இளம் பிஞ்சுகள் என்று பாலக சமுதாயத்தின் சில வித்துகள் களை பயிர்களாக, விஷப் பயிர்களாக வளர்கின்றன.
பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பத்தில், கல்வி நிலையங்களில், வெளியிடங்களில், சமுதாயத்தில், அரசு தரப்பில் ஆக்கபூர்வமான மனநிலையை வளர்க்கும் சூழல் உருவாக வேண்டும். இந்தப் பொறுப்பை பெரியவர்கள் அனைவருமே உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். இத்தகைய சிறுவர்கள் எல்லோரும் குற்ற மனவியலைத் துறக்க பெரியவர்கள்தான் நற்றுணையாக நிற்றல் வேண்டும்.