ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதி, கடைசி நிமிடத்தில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வினோதமான நாளைக் கொண்டாட பல காரணங்கள் இருக்கின்றன. கடைசி நிமிட ஷாப்பர்ஸ் தினம் முதன்மையாக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. சமூக ஊடகங்கள் மற்றும் பாப் கலாசாரம் மூலம் இது அங்கீகாரம் பெற்றுள்ளது. கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் இந்த மரபு உள்ளது. ஆனாலும், அமெரிக்காவில் இது முதல் இடம் பெற்றுள்ளது.
கடைசி நிமிட ஷாப்பிங் தினம் என்றால் என்ன?
கிறிஸ்துமஸுக்கு, முதல் நாள், அதாவது பண்டிகைக்குக் கடைசி நிமிடத்தில் ஷாப்பிங் செய்யத் துடிக்கும் நபர்களுக்கான நாள் இது. நவீன நுகர்வோர் கலாசாரத்தின் ஒரு வழிமுறையாகும். 19ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான ஷாப்பிங் பாரம்பரியம் வணிகமயமாக்கலுடன் வடிவம் பெறத் தொடங்கியது. அதற்கு முன்பு வரை மக்கள், தம் அன்புக்குரியவர்களுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட பரிசுகளை வழங்குவது வழக்கம். பின்னர் கடையில் பரிசுப் பொருட்களை வாங்கும் பழக்கத்திற்கு மாறினர்.
கடைசி நிமிட ஷாப்பிங் காரணங்கள்: பலர் தங்கள் கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கை கடைசி நிமிடம் வரை தாமதப்படுத்துகிறார்கள். சிலர் பிஸியான வேலை காரணமாக கடைசி நிமிடத்தில் ஷாப்பிங் செய்ய வருகிறார்கள். பொருட்களை, ஆடைகளை விற்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் இந்த நாள் அமைந்திருக்கிறது. சில நபர்கள் சலசலப்பான கடைசி நிமிட ஷாப்பிங்கின் சவாலிலும் மகிழ்ச்சி காண்கிறார்கள்.
கூடுதலாக அவர்களைப் போலவே ஷாப்பிங்கை தள்ளிப் போடுபவர்களுக்கு இடையே ஒரு தோழமை உணர்வை வளர்க்கிறது. இந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய பணியை வேடிக்கையான சமூக நிகழ்வாக மாற்றுகிறது. இந்த நாளில் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
சில்லறை விற்பனையாளர்கள் கடைசி நிமிடத்தில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகளையும், சலுகைகளையும் வழங்கத் தொடங்கினர். இந்த நாள் பொருட்கள் வாங்குபவர்களை, தாமதப்படுத்துபவர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலையை உற்சாகமான பண்டிகை நிகழ்வாக மாற்றுகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கிலும் நிறைய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு மக்கள் அதிகமான பொருட்களை இந்த நாளில் வாங்கிக் குவிக்கிறார்கள். சிலர் இரவில் தாமதமாக நெரிசலான ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்குவதை ஒரு திரில்லான அனுபவமாக நினைக்கிறார்கள்.
கடைசி நிமிட ஷாப்பிங் அனுபவம், விடுமுறை காலத்தில் உற்சாகத்தையும் ஒரு சாகச உணர்வையும் சேர்க்கிறது. மேலும், கடைசி நொடியில் சரியான பரிசைக் கண்டுபிடிப்பதில் பரபரப்பும் உற்சாகமும் தொற்றிக்கொள்ளும். பெரும்பாலும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் இணைந்து ஷாப்பிங் செய்வார்கள்.
எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிடவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற போக்கை, மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. மேலும், இந்த நாளில் பரிசுகளை வாங்கினாலும் அன்புடனும் அக்கறையுடனும் தேர்ந்தெடுக்கும் மகிழ்ச்சியை வலியுறுத்தும் வகையில் இருப்பதால் இந்தக் கடைசி நிமிட ஷாப்பிங் அனுபவத்தை நிறைய அமெரிக்க மக்கள் விரும்பத் தொடங்கி விட்டார்கள்.