

ஐம்பது வயதுக்கு மேல் டைவர்ஸ் விரும்பும் பெண்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, திருமணத்தில் திருப்தியின்மையும், தனிப்பட்ட மகிழ்ச்சியை வேண்டுவதும், சுதந்திர உணர்வை பெறுவதற்கும் என பல காரணங்கள் உள்ளன. இது தற்பொழுது தமிழகத்திலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
1. தனிப்பட்ட மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்புகள்: குடும்பத்திற்காக உழைப்பதும், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதும் என ஓடிக்கொண்டே இருந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தங்களுடைய சொந்த மகிழ்ச்சியை பற்றி சிந்திக்கிறார்கள். திருமணத்தில் அன்பு, மரியாதை, புரிந்து கொள்ளுதல் போன்றவை குறைந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஓடிக்கொண்டே இருப்பதால் அவர்களுக்காக என்று தனியாக நேரம் ஒதுக்குவதோ, பொழுதுபோக்குவதோ இல்லாமல் போய்விடுவதால் தங்களுடைய எதிர்பார்ப்புகள் தோல்வி அடைவதைக் காண முடியாமல் துணையைப் பிரிந்து சுயத்தைத் தேட விரும்புகிறார்கள்.
2. பொருளாதார சுதந்திரம்: இன்று பெண்கள் வேலைக்குச் சென்று பொருளாதார ரீதியாக வலுப்பெற்றுள்ளதால் எதற்காகவும் யாரையும் எதிர்பார்க்கும் நிலையில் இல்லாததால் இந்த முடிவுக்கு வருகிறார்கள். தங்கள் வாழ்க்கையை தாங்களே கவனித்துக் கொள்ளும் திறன் மிகுந்திருப்பதால் குடும்பத்தை பராமரிப்பது என்பதை தேவையற்ற சுமையாகக் கருதுகிறார்கள்.
3. சமூக மாற்றங்கள்: விவாகரத்து குறித்த சமூகத்தின் பார்வை இன்றைய காலகட்டத்தில் நிறையவே மாறியுள்ளது. முன்பிருந்த அழுத்தம் இப்பொழுது இல்லை. திருமணம் என்பது சமத்துவமான கூட்டாண்மை என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, பெண்கள் தங்கள் வாழ்க்கையை தங்கள் விருப்பப்படி வாழ நினைக்கிறார்கள். பெண்களின் மாறிவரும் தேவைகள், சமூக மாற்றங்கள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் காரணமாக துணையைப் பிரிந்து சுயத்தைத் தேட விரும்புகிறார்கள்.
4. உறவில் திருப்தியின்மை: நீண்ட கால உறவில் ஏற்படும் சலிப்பு, புரிதல் இல்லாமை, உடல் நலப் பிரச்னைகள் போன்ற காரணங்களால் உறவில் திருப்தி ஏற்படுவதில்லை. துணையை சுமையாகக் கருதி குடும்ப பாரத்தை சுமக்க விரும்பாமல் இந்த முடிவுக்கு ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருமே வந்து விடுகிறார்கள். குழந்தைகள் வளர்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பிறகு தாங்கள் விரும்பியபடி சுதந்திரமாக வாழ முடிவு எடுக்கிறார்கள். இந்தப் போக்கின் காரணமாக தனியாக வாழும்பொழுது கிடைக்கும் சுதந்திரம் பல பெண்களை ஈர்ப்பதால் இந்த முடிவுக்கு வருகிறார்கள்.
5. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற எண்ணம்: சமரசம் செய்ய முடியாத ஆழமான கருத்து வேறுபாடுகள் பிரிவுக்கு வழி வகுக்கின்றன. இனிவரும் காலத்தையாவது மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம், துணையுடன் சேர்ந்து வாழ முடியாவிட்டால் பிரிந்து செல்வது ஒரு சிறந்த வழியாக தோன்றுவதால் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இது இளைய வயதில் நடக்கும் விவாகரத்தை விட மாறுபட்ட காரணங்களால் நிகழ்கிறது. வாழ்வில் அர்த்தமுள்ள உரையாடல்கள் இல்லாததும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இல்லாமல் இருப்பது போன்ற உணர்வும், அத்துடன் இருவரும் உணர்வுபூர்வமாகப் பிரிந்து விட்டதாக எண்ணுவதுமே இதற்கு முக்கியக் காரணமாகும்.
6. நம்பிக்கையின்மை: துணையின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மையால் கூட துணையைப் பிரிந்து சுயத்தை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பொறுப்பான காலங்களில் தாங்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் அனுபவிக்க நினைத்து இம்மாதிரி செயல்படலாம். இதற்கு அவர்களின் மனமுதிர்ச்சியும் ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. இவர்கள் தாங்கள் கடமையாக நினைத்துக் கொண்டிருக்கும் சில பொறுப்புகளை நிறைவேற்றியதும் தனித்தனியே பிரிந்து வாழ விரும்புகின்றனர்.
இருப்பினும், இம்மாதிரி முடிவு எடுப்பதற்கு முன்பு சிறிது யோசிப்பது நல்லது. வாழ்க்கையின் பிற்பகுதியில் பிரிவதனால் இயலாமை, தள்ளாமை போன்ற நிலை வரும்பொழுது ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதும், அனுசரணையாக இருப்பதும் இல்லாமல் போய்விடும். தனிமையை அதிகம் உணர ஆரம்பிப்பார்கள். இவற்றையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.