
எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் வாழ்க்கையில் அநேகம் உண்டு. அவற்றைப் பற்றி வீட்டில் பெரியோர்கள் எப்பொழுதும் ஏதாவது சில அனுபவ அட்வைஸ் களை உதிர்த்து கொண்டே இருப்பார்கள். அது வளரும் இளம் தலைமுறையினருக்கு கோபத்தை கூட உண்டாக்கும். இதனால் சொல்லும் பேச்சையும் கேட்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களை திருத்துவது எப்படி என்பதை காண்போம்.
என் உறவினர் பெண் ஒருவர் எப்பொழுதும் தங்க நகை வாங்கினால் கூட அதை கையிலே பிடித்திருப்பார் .ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள் என்று கூறினாலும் கேட்கவே மாட்டார். அதேபோல் எவ்வளவு விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும் பணம் உட்பட கையிலேயே தான் வைத்திருப்பார். ஒருமுறை அவர் ஒரு இன்டர்வியூக்கு செல்லும் பொழுது சர்டிபிகேட் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி ஒரு கையிலேயே பிடித்திருந்திருக்கிறார்.
அவைகளை பஸ்ஸில் வைத்துக் கொண்டு பயணம் செய்த பொழுது சிறிது நேரம் கண் அயர்ந்து விட்டார் .காற்றில் அடித்துக் கொண்டு பறந்து போய் வெளியில் கிடந்திருக்கிறது. இதை கவனித்த பாட்டி இந்த பெண்ணை தட்டி எழுப்பி உன்கையில் பிடித்திருந்த பேப்பர் எல்லாம் பறந்து விட்டது என்று கூற, அந்தப் பெண் பதறி அடித்துக் கொண்டு கீழ் இறங்கி பார்த்து இருக்கிறாள். அக்கம் பக்கத்தில் ஒரே கூட்ட நெரிசல். அடுத்தடுத்து பேருந்துகள் வருவதும் போவதுமாக இருக்க அவளுக்கு தேடுவதற்கும் சிரமமாக இருந்திருக்கிறது. என்றாலும் எப்படியோ ஒரு வழியாக தேடிப் பிடித்து கையில் எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக சென்று சேர்ந்திருக்கிறாள்.
ஒரு வழியாக இன்டர்வியூ முடித்து வீட்டிற்கு வந்தவள் யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவில்லை. சொன்னால் திட்டு கிடைக்கும் என்பது நன்றாகத் தெரியும். ஆதலால் அமைதியாக இருந்து விட்டார். பின்னர் தேர்வில் இன்டர்வியூரில் செலக்ட் ஆகி வேலைக்குச் சென்று கொண்டு இருந்திருக்கிறாள். அப்பொழுது பஸ்ஸில் ஏற போனவளுக்கு ஒரே ஆச்சரியம். அவள் பக்கத்து இருக்கையில் அதே பாட்டி அமர்ந்திருக்கிறார். அதைப் பார்த்ததும் அந்த பெண்ணுக்கு ஒரே சந்தோஷம் வர கையில் வைத்திருந்த பணம் 500 ரூபாயை எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டார்.
பாட்டி ஒன்றும் புரியாமல் விழிக்க அன்று நடந்த விவரத்தை கூறி நன்றி சொல்லி வீடு திரும்பினார். அதிலிருந்து எந்த பொருளையும் கையில் பிடித்து இருப்பதை விட்டுவிட்டு, பையில் போட்டு அமைதியாக அதை தோளில் மாட்டிக் கொண்டு எடுத்துச் செல்கிறார். இப்படி பட்டால் தான் சிலருக்கு அனுபவம் வரும் போலும். அவளின் இந்த புதிய மாற்றத்தை கண்ட வீட்டினர் வேலைக்கு போனவுடன் உனக்கு ஞானம் பிறந்திருக்கிறது இப்படியே இரு என்று வாழ்த்தினார்கள். ஆதலால், இதுபோல் விஷயங்களை எடுத்துக் கூறி கேட்கவில்லை என்றால் அவர் வழிக்கே விட்டுத் திருப்புவது தான் சரியாக இருக்கும் போலும்.
இன்னொரு பெண் முதன்முதலாக பாவாடைக்கு நாடா போட முயற்சித்தவர். அவற்றை கைகளாலேயே பாவாடை துளையில் வைத்து நகர்த்தி கொண்டே வந்து முடித்தார். அதற்கு மிகவும் நீண்ட நேரம் ஆனது. அவளின் அம்மா எத்தனை முறை சொன்னாலும் அந்த டிப்ஸை கேட்கவே இல்லை. அவளின் எண்ணப் படியே நீண்ட நேரம் ஆனாலும் செய்து முடித்தார். பிறகு அவளின் தாயார் வேறொரு பாவாடையை எடுத்து ஒரு பென்சிலின் முனையில் பாவாடை நாடாவினை நன்றாக முடிந்து அதை பாவாடைக்குள் வைத்து சரசரவென்று இழுத்த 2 நிமிடத்தில் வேலை முடிந்தது. அதைப் பார்த்த பின்பு தான் அந்த பெண் அம்மாவின் செயலையே நம்ப ஆரம்பித்தாள். பிறகு அதன் வழி நடந்தாள்.
படுத்துக்கிட்டும் போத்திக்கலாம். போத்தி கிட்டும் படுத்துக்கலாம் என்று ஒரு பாடல் வரி உண்டு. அதுபோல் ஒரு கதை இது. ஒருமுறை உறவினர் வீட்டில் சென்று இருந்த பொழுது நிறைய கெஸ்ட் வந்திருந்ததால் அவசர அவசரமாக சமைத்தவர் அவரின் மகளை அழைத்து டைனிங் டேபிளில் துடைத்து விட்டு சமைத்த பொருட்களை எடுத்து வைக்க கூறினார். ஆனால் அந்த பெண்ணோ சமைத்த பொருட்களை எல்லாம் டைனிங் டேபிள் வைத்துவிட்டு அதை நகர்த்தி நகர்த்தி துணியால் துடைத்து வந்தார். அப்பொழுது அதில் சூடாக இருந்த சாம்பார் அப்படியே தட்டி கொட்டி விட்டது.
அதன் பிறகு அவர் டைனிங் டேபிளில் நன்றாக துடைத்த பிறகு சமையல் உணவுப் பொருட்களை எடுத்து வைப்பதை வழக்கம் ஆக்கிக் கொண்டார். இதெல்லாம் சின்ன சின்ன செயல்கள்தான் என்றாலும், அவற்றினை சரியாக நேர்த்தியாக செய்தால் எளிதாகவும் விரைவாகவும் செய்து விடலாம். இதனால் பொருள் காலம் எதுவும் வீணாகாது. அதை விடுத்து மாற்றி உல்டாவாக செய்யும் பொழுது இது போன்ற சங்கடங்களை அனுபவிக்க நேர்கிறது.
ஆதலால் எதையும் பெரியவர்கள் கூறும் கருத்துக்களையும் கேட்டுக் கொண்டு தன் ஆலோசனைக்கும் தகுந்தார் போல வேலையை செய்ய தொடங்குவது வெற்றியில் முடியும் என்பது உறுதி. வீட்டை நிர்வகிக்க இதுபோன்ற அடிப்படையான செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகத்தான் இருக்கிறது. ஆதலால் யார் எதை சொன்னாலும் அதையும் சற்று காது கொடுத்து கேட்போம். அது கவனக்குறைவைத் தடுக்கும்.