
பொதுவாக, குழந்தைகள் சிறு வயதில் இருந்தே அவர்கள் செய்யும் சேட்டை, குறும்பு அனைத்தையும் கண்டு ரசிக்கவும், அவ்வப்போது அவர்களோடு அன்புடன் உரையாடுவது, தூக்கிக் கொஞ்சுவது, ஏதாவது வித்தியாசமாக செய்தால் அவர்களைப் பாராட்டுவது என்று அவர்களுடன் தொடர்பிலேயே இருந்தால் வளரும் பருவத்தில் குழந்தைகள் அதிகமாக குறும்பு செய்ய மாட்டார்கள். எதையும் இயல்பாக செய்யக் கற்றுக் கொள்வார்கள். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்திவில் காண்போம்.
1. குழந்தைகள் அதிகமாக கவனிப்பது பெற்றோரைத்தான். பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ அதையே திருப்பி செய்ய முயல்வதுதான் குழந்தைகளின் இயல்பு. ஆதலால், குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை. நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சொல்வதை செய்யாமல் விட்டால் ஏமாற்றம் அடைவார்கள். அதோடு, பெற்றோர்கள் சொன்னதை செய்யாமல் விட்டு விடுவார்களோ என்று அடுத்தடுத்து நம்பிக்கை இழக்கத் துணிவார்கள்.
பிறகு, அவர்களும் நம்மைப் பார்த்து பெற்றோரே சொன்னதை செய்யாமல் விட்டுவிட்டார்கள். நாமும் அப்படி இருந்தால் என்ன? என்று அதையே இயல்பாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். ஆதலால் சொல் ஒன்று செயல் ஒன்றாக இல்லாமல் நல்ல வழிகாட்டியாக, முன் உதாரணமாக இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
2. குழந்தைகளுக்கு சிறு வயது முதலே தட்டில் சாப்பாட்டை போட்டு அவர்களாகவே சாப்பிடப் பழக்க வேண்டும். அதேபோல், நிறைய சாப்பாட்டை சிந்தினாலும் திட்டாமல் அவற்றை சரி செய்யவும். மேலும் சின்ன சின்ன வேலைகளைச் செய்ய சொல்ல வேண்டும். தப்பும் தவறுமாக அவர்கள் பழகினாலும் அவர்களாகவே எது ஒன்றையும் முடிவெடுத்து செய்வதற்கு ஊக்கப்படுத்தினால் குழந்தைகளுக்கு பொறுப்பு மற்றும் தன்னம்பிக்கை வளரும்.
3. குழந்தைகளுடன் குடும்பமாக அமர்ந்து பேசுவது, சாப்பிடுவது, அவ்வப்போது வெளியே சென்று வருவது, உற்றார் உறவினர், நட்பு, அக்கம்பக்கத்து விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வது, அனைவரையும் அறிமுகப்படுத்தி வைப்பது, உறவு முறை சொல்லி அழைக்கச் சொல்வது போன்றவற்றை சிறு வயது முதலே கற்றுக் கொடுத்து விட்டால் எத்தனை பேர் வீட்டுக்கு வந்தாலும் அனைவரையும் அவர்கள் இன்முகத்துடன் வரவேற்பார்கள். இதனால் குடும்பப் பிணைப்பும் வலுவாகும். சமூகத்தையும் குழந்தைகள் புரிந்துகொள்வார்கள்.
4. பெற்றோர்களாகிய நாம் ஏதாவது தவறு செய்தால் தயக்கமில்லாமல் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதில் எந்தவித தவறும் இல்லை. இப்படி மன்னிப்பு கேட்பதால் அவர்களுக்கும் தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பழக்கம் வரும். இதுவே மற்றவர்களிடமும் நல்ல பண்பை வளர்க்கும். மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டார்கள். இதனால் கர்வம், ஆணவம் எதுவும் தலைதூக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், நாம் சாதிக்காமல் விட்டதை குழந்தைகள் சாதித்துக் காட்ட வேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் இருக்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை. அவர்களின் விருப்பம் அறிந்து அவர்கள் ஈடுபடும் துறையில் இருக்கும் நிறை குறைகளை எடுத்துக் கூறி பாராட்டி அவர்கள் இஷ்டப்படியே அதைத் தொடர விடுங்கள். இதனால் அவர்கள் உச்சம் தொடுவார்கள். அவர்களின் விருப்பங்களைச் சார்ந்தே அவர்களின் எதிர்காலம் அமையட்டும்.
5. நவரசங்களும் நிறைந்ததுதான் குழந்தைகளின் உணர்வு. ஆதலால் அவர்களின் முகம் வாட்டமாக இருந்தால் அன்பாக விசாரித்து அவர்களின் வருத்தத்தைப் போக்க வேண்டியது பெற்றோரின் கடமை. ஒவ்வொரு உணர்வுகளையும் கவனித்து அந்தந்த உணர்வுகளுக்கு வேண்டிய அட்வைஸை கொடுக்க வேண்டும். இதனால் கோபம், பயம், சிரிப்பு என்று அனைத்தையும் அவ்வப்பொழுது சமாளித்து அவர்கள் இயல்பாக இருக்கப் பழகுவார்கள். இது பின் நாட்களில் அவர்கள் டென்ஷன் இல்லாமல் வளர உதவி செய்யும். இதனால் பல நோய்கள் அண்டாமல் இருக்க வழி வகுக்கும். அப்படியே சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் உடனே விடைபெறும்.
6. திறமையை பாராட்டுவது, வெற்றிகளைத் தட்டிக் கொடுப்பது, பயத்தைப் போக்கி பாதுகாப்பு உணர்வை கொடுப்பது, அவர்கள் எதைக் கூற வந்தாலும் குறுக்கிடாமல் கேட்பது, அவர்களின் ரசனைக்கு மதிப்பு கொடுப்பது போன்றவைதான் அவர்களுக்கு பெற்றோரின் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள். ஆதலால் அவர்களின் உணர்வை மதிப்போம்; அவர்களை இயல்பாக வளர விடுவோம்.