பலருக்கும் அறுபது வயதானதும் தங்கள் வாழ்க்கையே முடிந்துபோனது போல ஒரு எண்ணம் மனதில் எழுந்து விடுகிறது. இந்த எண்ணம் தவறானது என்பதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும். அறுபது வயது வாழ்ந்த உங்களுடைய அனுபவம் ஒரு பல்கலைக்கழகத்திற்கு நிகரானது. இந்த உலகம் நமக்கானது என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். நமக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடிவந்து உதவ பலர் காத்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் நம்ப வேண்டும். பொது இடத்தில் யாராவது மயங்கி விழுந்தாலோ அல்லது அடிபட்டாலோ உடனே அவருக்கு உதவ முன்பின் தெரியாத எத்தனை பேர் ஓடிவருகிறார்கள் என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம். நாம் நாலு பேர்களுக்கு உதவுவதைப் போல நமக்கு ஒரு ஆபத்து என்றால் உதவ நாலு பேர் முன்வர மாட்டார்களா என்ன?
அறுபது வயதைக் கடந்தவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
தினந்தோறும் காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சியினை கட்டாயம் செய்ய வேண்டும். நடைபயிற்சிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் உங்கள் நண்பர் ஒருவருடன் செல்லுங்கள். கட்டாயம் கேன்வாஷ் ஷீ அணிந்து கொள்ளுங்கள். கையில் சிறிய வாட்டர் பாட்டில் ஒன்றையும் கொண்டு செல்லுங்கள். தங்க நகைகளை அணிவதைத் தவிர்த்து விடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு ஆபத்தையே ஏற்படுத்தும்.
வெளியே செல்லும்போது உங்கள் பாக்கெட்டில் உங்கள் பெயர், விலாசம், உங்கள் மொபைல் எண், உங்கள் மகன் அல்லது மகள் மொபைல் எண்ணை குறிப்பிட்டு ஒரு சிறிய விசிட்டிங் கார்டைப் போலத் தயார் செய்து உங்கள் சிறிய புகைப்படத்தை பின்புறம் ஒட்டி லேமினேட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாலாவது நபரிடம் உங்கள் குடும்ப விஷயங்களைப் பற்றியோ உங்களுக்கு இருக்கும் சொத்துக்களைப் பற்றியோ பகிராதீர்கள்.
யாருக்கும் அறிவுரைகளைக் கூறவே கூறாதீர்கள். உங்கள் அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் யாரும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் நீங்களாக முன்வந்து எந்த கருத்தையும் கூறாதீர்கள். எல்லோரும் உங்களிடம் பாசமாக நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்த எண்ணம் உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தையே தரும். ஆனால், நீங்கள் முடிந்தவரை எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் சொல்வதை உங்கள் மகன் அல்லது மகள் மற்றும் குடும்பத்தினர் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நினைக்காதீர்கள். ஒரு விஷயத்தில் குடும்பத்தினர் சொல்லும் கருத்துக்களையும் யோசித்துப் பாருங்கள். எது சரி என்று உங்கள் மனதில்படுகிறதோ அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மகனோ, மகளோ உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுவார்கள் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் வளர்த்துக் கொள்ளாதீர்கள். தற்கால வாழ்க்கையில் இந்த எண்ணம் ஏமாற்றத்தையே தரும். அவரவர் வாழ்க்கை அவர்களுக்கு.
திருமணமான உங்கள் மகன் அல்லது மகள் விஷயத்தில் நீங்கள் அனாவசியமாகத் தலையிடாதீர்கள். உங்கள் உதவியை அவர்கள் கோரும்போது அந்த உதவியை முழுமனதோடு செய்யுங்கள். தினந்தோறும் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுங்கள். சிலர் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் ஞாபக மறதியினால் மாத்திரைகளை சாப்பிட்டதாக எண்ணி பல நாட்கள் சாப்பிடாமல் இருந்து விடுவார்கள். இதனால் பல சிக்கல்கள் ஏற்படும். இந்த விஷயத்தில் உங்கள் மகன் அல்லது மகளிடம் சொல்லி மாத்திரையை சாப்பிட உங்களை அவ்வப்போது ஞாபகப்படுத்தச் சொல்லுங்கள்.
வயதானவர்கள் சந்திக்கும் ஒரு தலையாய பிரச்னை பாத்ரூமில் வழுக்கி விழுவது. உங்கள் பாத்ரூமில் வழுக்காத டைல்ஸ்களைப் பதியுங்கள். மேலும் உள்ளே நுழையும் போது மிகுந்த கவனத்துடன் மெதுவாகச் செல்லுங்கள். பொதுவாக பாத்ரூம் பெரியதாக இல்லாமல் சிறியதாக இருப்பது நல்லது. டாய்லெட்டில் இரண்டொரு இடத்தில் கைப்பிடிகளைப் பொருத்தி வையுங்கள். சமயத்தில் இது கை கொடுக்கும்.
பொது இடங்களில் எதிர்பாராதவிதமாக உங்களுக்கு மயக்கம் போன்ற உடல்நலக் குறைவு ஏற்படின் உங்களுக்கு நெருக்கமானவர்களை அழைக்க உங்கள் மொபைல் போனின் பின்புறத்தில் Emergency Contact Number என்று குறிப்பிட்டு உறவினரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை டைப் செய்து ஒட்டி வையுங்கள். பொதுவாக, மொபைல் பேட்டர்ன் மூலம் லாக் செய்யப்பட்டிருப்பதால் மூன்றாவது நபர் அதைத்திறந்து உங்களுக்கு நெருக்கமானவர்களை அழைப்பதில் சிரமம் ஏற்படும்.
எப்போதும் புன்னகையோடு வாழப் பழகுங்கள். புன்னகை உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை பிறருடைய மனதில் ஏற்படுத்தும். உங்களுக்கு பல வகைகளில் அது உதவக்கூடும்.