தாத்தா காலத்து 'ரெட்ரோ வார்ட்ரோப்': நவீன வீடுகளுக்கு ஏன் இதுதான் பெஸ்ட் முதலீடு?

தலைமுறைகள் கடந்தும் உழைக்கும் இயற்கை மர அலமாரிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள்.
வார்ட்ரோப்
வார்ட்ரோப்Gemini image
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

வீட்டின் அழகை நிர்ணயிப்பதில் மரச்சாமான்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. குறிப்பாக, ஆடைகளையும் உடைமைகளையும் பாதுகாத்து வைக்கும் மர அலமாரிகள் வீட்டிற்கு மேலும் அழகூட்டக்கூடியவை. இன்றைக்கு நவீனமாகப் பல வடிவங்களில் அலமாரிகள் வந்தாலும், பலரின் விருப்பமாக இருப்பது ‘ரெட்ரோ வார்ட்ரோப்’ எனப்படும் பழங்கால பாணி அலமாரிகளே ஆகும்.

‘ரெட்ரோ வார்ட்ரோப்’ என்றால் என்ன?

1950 முதல் 1980 வரை புழக்கத்தில் இருந்த பாரம்பரிய வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அலமாரிகளே ‘ரெட்ரோ வார்ட்ரோப்’ ஆகும். நமது தாத்தா-பாட்டி காலத்தில் பயன்படுத்திய மர அலமாரிகளின் கம்பீரமான தோற்றத்தையும், அக்கால டிசைன்களையும் நவீன வசதிகளோடு இணைத்து உருவாக்குவதே இதன் சிறப்பம்சமாகும்.

சிறப்பம்சங்கள்:

உறுதி:

ரெட்ரோ பாணி அலமாரிகள் பெரும்பாலும் தேக்கு, ஈட்டி, தேவதாரு அல்லது பிற தரமான மரங்களால் செய்யப்படுகின்றன. நவீன முறையில் அழுத்தப்பட்ட மரப் பலகைகளால் (MDF) செய்யப்படும் அலமாரிகளை விட, இந்த ரெட்ரோ அலமாரிகள் தலைமுறைகள் கடந்து உழைக்கக்கூடியவை; பூச்சிகள் மற்றும் ஈரப்பதத்தைத் தாங்கும் திறன் கொண்டவை.

தனித்துவமான வேலைப்பாடு:

இவற்றின் கதவுகள் மற்றும் விளிம்புகளில் காணப்படும் நுட்பமான மரச் செதுக்கல்கள், வளைவுகள் மற்றும் நேர்த்தியான வேலைப்பாடுகள் மிகவும் தனித்துவமானவை. இத்தகைய சிறப்பம்சங்களை நவீன அலமாரிகளில் காண்பது அரிது.

எழில்மிகு வண்ணமும் கம்பீரமும்:

இயற்கையான உட் ஃபினிஷ், அடர் பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற அழகிய வண்ணங்களில் இவை மிளிர்கின்றன. பித்தளை மற்றும் வெண்கலத்தால் ஆன கைப்பிடிகள், பழமையான பூட்டுகள் போன்றவை இந்த அலமாரிகளுக்கு ஒரு தனித்துவமான கம்பீரத்தையும் எழிலையும் தருகின்றன.

அசத்தல் வேலைப்பாடுகள்:

ரெட்ரோ அலமாரிகளின் கதவுகளில் வெறும் மரச் செதுக்கல்கள் மட்டுமின்றி, பழங்கால மாடலில் வெட்டப்பட்ட கண்ணாடிகள் அல்லது பிரம்பால் நெய்யப்பட்ட டிசைன்கள் இடம் பெற்றிருக்கும். இவை அலமாரிக்கு கூடுதல் அழகைத் தரும்.

வார்ட்ரோப்
வார்ட்ரோப்Gemini image

விசாலமான இடவசதி:

ரெட்ரோ அலமாரிகள் உயரமாக மட்டுமின்றி, அகலமான இடவசதியுடன் வடிவமைக்கப்படுகின்றன. ஆடைகளைத் தொங்கவிடுவதற்கான தனிப் பகுதி, நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பூட்டி வைக்கப் பாதுகாப்பான மர இழுப்பறைகள் ஒப்பனைப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் வைக்குமிடம் என அனைத்தும் விசாலமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அடுப்பு பக்கத்துல இந்த அழுக்கு இருக்கா? பூச்சி தொல்லை முதல் தீ அபாயம் வரை எச்சரிக்கை!
வார்ட்ரோப்

நறுமணம்:

செயற்கை வேதிப்பொருட்களால் செய்யப்படும் நவீன பலகைகளைவிட, இயற்கை மரங்களால் ஆன ரெட்ரோ அலமாரிகளுக்குள் துணிகள் வைக்கும்போது துர்நாற்றம் வீசாது. குறிப்பாக தேக்கு மற்றும் ஈட்டி மரங்களின் இயற்கை நறுமணம் ஆடைகளில் தங்கி, ஒரு புத்துணர்ச்சி தரும்.

சுவர்களில் பொருத்தத் தேவையில்லை:

இன்றைய நவீன வார்ட்ரோப்புகள் சுவரோடு சுவராகப் பொருத்தப்படுபவை. ஆனால், ரெட்ரோ அலமாரிகள் தனித்து நிற்கும் தன்மையுடையவை. எனவே, வீடு மாறினாலோ அல்லது அறையின் அமைப்பை மாற்ற நினைத்தாலோ, இவற்றை மிக எளிதாக வேறு இடத்திற்கு நகர்த்தி வைக்க முடியும்.

மறுசுழற்சி/ சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

பழங்கால மர அலமாரிகளை மீண்டும் புதுப்பித்து பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. மரங்களை புதிதாக வெட்டாமல், பழைய கலைப் படைப்புகளுக்கு மறுஜீவன் கொடுப்பதால் இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது.

இதையும் படியுங்கள்:
அலுமினியம் ஃபாயில் தாள்: சமையலறைக்கு மட்டுமல்ல... வாழ்க்கையை சுலபமாக்கும் 9 அற்புத வழிகள்!
வார்ட்ரோப்

பொக்கிஷமும் முதலீடும்:

இந்த ரெட்ரோ அலமாரி என்பது வெறும் பொருட்களைச் சேமிக்கப் பயன்படும் ஒரு அலமாரி மட்டுமல்ல; குடும்பத்தின் பாரம்பரியத்தைச் சுமந்து நிற்கும் ஒரு பொக்கிஷம். தாத்தா காலத்தில் வாங்கி, பேரப்பிள்ளைகள் வரை தொடரும்போது, வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இது பழைய நினைவுகளையும் பாச உணர்வையும் தரும். மேலும், காலப்போக்கில் இதன் மதிப்பு அதிகரிக்குமே தவிர குறையாது.

பராமரிப்பு முறைகள்:

இந்த அலமாரிகளின் பளபளப்பைத் தக்கவைக்க, அவ்வப்போது இயற்கையான மரப் பூச்சு அல்லது மெழுகுப் பூச்சு செய்யலாம். மென்மையான துணியைக் கொண்டு தூசிகளைத் துடைத்து வந்தாலே, இதன் இயற்கை அழகு மாறாமல் இருக்கும். ஈரப்பதம் நேரடியாகப் படாதவாறு சுவரில் இருந்து சிறிய இடைவெளி விட்டு வைப்பது நல்லது.

தலைமுறைகள் தாண்டி உழைக்கும் ரெட்ரோ மர அலமாரிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வீட்டிற்கு கம்பீரமான அழகையும், துணிகளுக்கு இயற்கை நறுமணத்தையும், நீடித்த முதலீட்டு மதிப்பையும் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com