

பொதுவாக நாம் நம் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் மற்றும் பல வகை உலோகங்களாலான சாமான்களாக இருக்கும்.
சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும், உணவை சேமித்து வைக்கவும் உபயோகப்படுத்தும் பாத்திரங்கள் மண், வெள்ளி மற்றும் கண்ணாடியிலான சாமான்களாக இருப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என கூறப்படுகிறது.
வீடுகளில் பயன்படுத்துவதற்காக கடைகளிலிருந்து வாங்கி வரும் மளிகை சாமான்கள், வாசனை திரவியங்கள், தேன், எண்ணெய், ஜாம், ஊறுகாய், சாஸ், ட்ரை ஃபுரூட்ஸ் போன்ற பொருட்களில் சில பொருட்கள் கண்ணாடி பாட்டில் அல்லது ஜார்களில் அடைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
அவற்றில் உள்ள பொருட்களை உபயோகித்த பின் அந்த பாட்டில் மற்றும் ஜார்கள் உபயோகமின்றி குப்பைக் கூடைக்குள் வீசி எறியப்படும். அவ்வாறு அவைகளை தூக்கி வீசாமல், கொஞ்சம் பணமும் நேரமும் செலவழித்தால், அவை நம் வீட்டை அலங்கரிக்கும் அழகுப் பொருளாக மாறி நம் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அது எவ்வாறு என்பதை இப்போது பார்க்கலாம்.
1. முதலாவதாக, கண்ணாடி பாட்டில்களை பூச் ஜாடிகளாக மாற்றி வீட்டின் உட்புற அழகை மெருகேற்றலாம். அதற்கு முதலில் பாட்டிலை நன்கு பள பளவென்ற தோற்றம் தரும்படி சுத்தப்படுத்த வேண்டும். பாட்டிலின் வெளிப்புறம் ஒட்டப்பட்டிருக்கும் லேபிள் மற்றும் ஸ்டிக்கர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
பின் ஃபிரஷ்ஷான வண்ண வண்ண மலர் கொத்துகளை கொண்டு வந்து அதனுள் நிரப்பி, டீ டேபிள், சோபா அருகில் உள்ள சைடு ஸ்டூல், மேஜை மற்றும் ஜன்னல் ஓர இடங்களில் வைத்து அழகு படுத்தலாம். ஃபிரஷ்ஷான பூக்கள் கிடைக்காத நேரத்தில் நீண்ட தண்டுடன் கூடிய பிளாஸ்டிக் பூங்கொத்துக்களைக்கொண்டு பாட்டில் / ஜாடியை நிரப்பி வைக்கலாம்.
2. சுத்தமான காலி பாட்டில் ஒன்றை எடுத்து அதனுள் பேட்டரியினால் இயங்கக் கூடிய நவீனமான அழகிய சிறு சிறு LED மின் விளக்குகளாலான சரம் ஒன்றை வைத்து விடலாம். பின் அதை படுக்கையறை ஓரத்து சைடு ஸ்டூல், பால்கனி, புத்தக அலமாரி மூலை ஓர ஷெல்ஃப் போன்ற இடங்களில் வைத்து அழகுபடுத்தலாம். தீபாவளி, பிறந்தநாள் போன்ற சிறப்பான தினங்களில், தேவையான எண்ணிக்கையில் fairy light பயன்படுத்தி அழகான சூழலை உருவாக்கலாம்.
3. சுத்தமான காலி பாட்டில் அல்லது ஜாடிகளின் வெளிப்புறத்தை, உங்கள் அறையின் அமைப்பு மற்றும் சுவர்களில் அடிக்கப்பட்டுள்ள பெயின்டின் நிறத்திற்கு ஒத்துப்போகும் வகையில் அக்ரிலிக் பெயின்ட் அடித்து நன்கு உலர வைத்துவிடுங்கள். பின் அதை டைனிங் டேபிள் மத்தியில் அல்லது அலமாரியில் உள்ள பொருட்களின் நடுவில் அலங்காரப் பொருளாய் வைத்துப் பார்த்து ரசிக்கலாம்.
4. கொஞ்சம் பெரிய அளவிலான பாட்டில்களில் பாதி அளவு கூளாங்கற்களோடு மண் கலந்து போட்டு, அதில் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்து வளரக் கூடிய சிறு சிறு செடிகளை வளர்க்கலாம். கண்ணாடி பாட்டில்களின் அடியில் அதிகப் படியான நீர் வெளியேற ஓட்டை போட முடியாது என்பதால், அவ்வப்போது நீரை கொஞ்சம் கொஞ்சம் தெளித்து செடிகளை வளர்க்கலாம்.
நீங்களும் இனி காலியான கண்ணாடி பாட்டில்களை குப்பைக் கூடையில் வீசி விடாமல் மேற்கூறிய முறைகளில் உபயோகித்து பயன்பெறலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களின் பாராட்டையும் பெறலாம். சமயங்களில் இது சம்பந்தமாக நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வெல்லலாம்.
குப்பைக்குச் செல்ல வேண்டிய கண்ணாடி பாட்டில்கள் மற்றும் ஜார்களைக் கொண்டு, அதிக செலவின்றி உங்கள் வீட்டின் தோற்றத்தையும் மனநிலையையும் புத்துணர்ச்சியாக்கும் நடைமுறை யோசனைகளை வாசகர் பெறுகிறார்.