
சமீபத்தில் செய்திகளில் வெளியான ஒரு காணொளிப் பதிவு அனைவரையும் நடுநடுங்க வைத்துவிட்டது. சாலையின் ஓரத்தில் நின்றிருந்த ஒரு வேனின் கதவு எதிர்பாராத விதமாக திடீரென திறக்க, சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பயணி அந்த வேன் கதவில் மோதி நிலைதடுமாறி அருகில் வந்து கொண்டிருந்த லாரியின் அடியில் சிக்கிய அந்தக் காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்தது. பொறுப்பற்ற சிலரின் இதுபோன்ற செயல்களால் அப்பாவிகள் உயிர் பலியாவது எந்த விதத்தில் நியாயம்? சாலை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து அதற்கேற்ப அடுத்தவருக்கும் தொந்தரவு தராத வகையில் பயணம் செய்வது நாகரிகமானது என்பதை ஏன் இவர்கள் உணர மறுக்கிறார்கள்? பாதுகாப்பான சாலை பயணத்திற்கு ஏற்ற சில அனுபவ எச்சரிக்கை குறிப்புகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வேன், கார் போன்றவற்றில் பயணிப்பவர்கள் கதவை இரு பக்கமும் பார்த்து யாரும் வரவில்லை என்றால் மட்டுமே திறக்க வேண்டும். சிக்னலில் நிற்கும்போது கதவைத் திறப்பது அருகில் நிற்பவருக்கு ஆபத்தாக முடியும்.
காரை ரிவர்ஸ் எடுக்கும்போதும் வெகு கவனமாக பின்னால் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் எடுக்க வேண்டும். முடிந்தால் காருக்குள் இருக்கும் ஒரு நபர் இறங்கி ஓட்டுனரை எச்சரிக்கை செய்யலாம். ஏனெனில், நிற்கும் காரின் அடியில் வாயில்லா ஜீவன்களும், சமயங்களில் சிறு குழந்தைகளும் கூட கார் பின்புறம் விளையாடும் வாய்ப்பு உண்டு.
இருசக்கர வாகனமோ அல்லது காரோ முன்னாள் சைக்கிளில் செல்பவர்களாக இருந்தால் தயவு செய்து நிதானமாக செல்லுங்கள். ஏனெனில், கார் செல்லும் அளவுக்கு சைக்கிள் வேகமாக செல்லாது. சாலை விதிகளுக்கு உட்பட்டு முதலில் நடந்து செல்பவர்களுக்கும் அடுத்து சைக்கிளில் செல்பவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து பயணம் செய்வது நல்லது.
அதேபோல், பேருந்து இயக்கும் ஓட்டுநர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பயணிகள் அனைவரும் இறங்கும் முன்பு வண்டியை எடுப்பதும், வேகத்தடை மீது வண்டியை வேகமாக ஓட்டுவதும் பலர் கீழே விழுந்து அடிபடுவதற்கும், ஏன் சில சமயங்களில் உயிர் பலியாகும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.
வாகனங்களிலும் எச்சரிக்கை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, இடது அல்லது வலது புறம் திரும்புவதைக் குறிக்கும் இன்டிகேட்டரை சரியாக இயக்குவது முக்கியம். இதனால் பின்னால் வரும் வண்டிகள் எச்சரிக்கையாக செல்ல வசதியாக இருக்கும். பெரும்பாலோர் இதை கவனத்தில் கொள்வதே இல்லை. சிலரோ, திரும்பும் இடம் வெகு அருகில் வரும்போதே அதை இயக்குகின்றனர். இதுவும் தவறே.
இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் தங்கள் சுடிதார் சால்கள் மற்றும் புடைவை தலைப்புகளை காற்றில் பறக்காதபடி முடிச்சு போட்டுக்கொள்வது நல்லது. இதனால் சுடிதார் சால்கள் வண்டியில் சிக்கி விபத்து நேரிடுவதைத் தவிர்க்கலாம்.
இருசக்கரத்தில் குழந்தைகளை தங்களுடன் அழைத்துச் செல்பவர்கள் விளையாட்டு நோக்கில் அவர்களை நிற்க வைத்துச் செல்வதும் அல்லது வண்டியின் பின்னால் பின்னோக்கி அமர்ந்து செல்வதும் மிகவும் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். ஏதேனும் எதிர்பாராத நேரத்தில் கற்களோ அல்லது வேகத்தடைகளோ வந்தால் விபத்து ஏற்பட்டால் குழந்தைகள் முதலில் கீழே விழுந்து அடிபடும் அபாயம் உள்ளது.
உயிர் ஒரு பொக்கிஷம். போனால் வராதது. ஒரு உயிர் மறையும்போது அதனுடன் எத்தனை கனவுகள் மறைகின்றன? எத்தனை உறவுகள் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக வண்டிகளை இயக்குவதும் பயணிப்பதும் இன்றைய அவசர உலகில் அவசியமாகிறது.