
1. மாடி வெப்பத் தடுப்பு என்றால் என்ன? (what is Roof Heat Proofing)
வெயில் காலத்தில் மாடி வீடுகளில் எளிதாக வெப்பம் உள்ளே இறங்கி வீட்டின் தரை வரை வெப்பத்தை கடத்தும் . அதுவும் உச்சி வெயில் நேரத்தில் மொட்டை மாடியில் கால் வைக்க முடியாத அளவிற்கு வெயில் கொதிக்கும். அந்த வெப்பம் இடையில் எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் சுவர் வழியாக கடத்தப்பட்டு உள்ளே இறங்கும். அந்த நேரம் வீட்டில் மின் விசிறி ஓடினால் காற்று சூடாகவே வரும். சூடு அதிகரிப்பதால் ஏர் கண்டிஷனர் பொறுத்தி வெப்பத்தை குறைக்கலாம். ஆனால், அறை வெப்பநிலை காரணமாக நீண்ட நேரம் ஏசியின் தேவை இருக்கும் ,இதனால் மாதக் கரண்ட் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கும்.
வெப்ப காலத்தில் வீட்டில் சூடு இறங்காமல் இருக்க , மாடியின் மேல் தரையில் சில தடுப்பு அமைப்புகளை ஏற்படுத்தி வீட்டை குளுமையாக்குவார்கள். இந்த தடுப்பு அமைப்புகளுக்கு மாடி வெப்ப தடுப்பு முறை என்று பெயர். வெப்ப தடுப்பு முறைகளில் பல வகைகள் உள்ளன. பாரம்பரிய கட்டுமான காலமுறைகளில் இருந்து, இன்றைய நவீன காலத்தில் நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி வெப்பத்தை தடுக்கலாம்.
2. மாடி வெப்பத் தடுப்புக்கான வெவ்வேறு முறைகள் (Different methods for roof heat proofing)
வீட்டுக் கூரையின் மேற்புற வெப்பத்தை பல வழிகளில் குறைக்கலாம். அதில் முதன்மை வழியாக இருப்பது தட்டு ஓடுகள். மேலும் பல புதிய வெப்பத் தடுப்பு முறைகளை பற்றி அறிந்து கொள்வோம்.
தட்டு ஓடுகள் : இவை பாரம்பரிய வெப்ப தடுப்பான்களாக நீண்ட காலம் செயல் முறையில் உள்ளது. களிமண்ணில் செய்யப்பட்டு , வெப்பத்தின் மூலம் வலுவாக உருவாக்கப்பட்ட இந்த ஓடுகள் பெரும்பாலும் வெப்பத்தை தாங்கிக் வீட்டின் உள்ளே நுழைய விடாமல் தடுக்கும்.
மாடியின் மேல் உலோக ஷீட் கூரை அமைத்தல்: இந்த நடைமுறை பெரும்பாலும் கிராமப் புறங்களில் பின்பற்றப்படுகிறது. மாடியின் மேலே உலோக ஷீட் மூலம் கூரை அமைப்பதால், முதலில் வெப்பத்தை ஷீட் வாங்கிக் கொண்டு மாடியின் தரைக்கு குறைவான வெப்பத்தை கடத்தும். இந்த முறையில் வீட்டுக்கு வெப்ப தடுப்பு அமைக்கலாம். ஆனால், வீட்டுக்குள் வெப்பம் இல்லா விட்டாலும் மாடியில் வெப்பம் ஓரளவு இருக்கும் .
கூலிங் டைல்ஸ் ஓட்டுதல்: இது மொசைக் போன்ற ஒரு வகை சுண்ணாம்பு கலந்த கற்களால் ஆனது. இது தட்டு ஓட்டை விட அதிக குளிமையை வீட்டிற்கு தருகிறது. இது வீட்டைக் குளுமையாக்க சரியான தேர்வாக இருக்கிறது.
கூலிங் பெயிண்ட் பூச்சு (Weatherproof Painting): இப்போது பெரும்பாலான மக்களின் தீர்வாக இந்த கூலிங் பெயிண்ட் இருக்கிறது. இந்த முறையில் வெப்ப தடுப்பு பெயிண்டை ஒரு சில முறை மாடியின் மேற்புறம் அடிப்பதால் , வெப்பத்தை முழுமையாக வீட்டுக்குள் நுழையாமல் தடை செய்யலாம். இது வெப்பம் மட்டுமல்லாமல் , மழைநீர் கசிவையும் தடுக்கும்.
சோலார் பேனல்கள்: இது இருப்பதிலேயே அதிக புத்திசாலித்தனமான முடிவு.மாடியின் மேற்புறம் முழுமையையும் சோலார் பேனல்கள் அமைத்து வெப்பத் தடுப்பானாக பயன்படுத்தலாம். அதே நேரம் அதிலிருந்து மின்சாரம் தயாரித்து , நாம் புத்திசாலி என்றும் காட்டிக் கொள்ளலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
இந்த நுட்பம் மட்டுல்லாது, மாடியில் பந்தல் அமைத்தல் , மேற்புறத்தில் ரப்பர் ஷீட்களை ஓட்டுதல் , தெர்மக்கோல்களை ஓட்டுதல் , தென்னை மட்டைகளை பரப்புதல் மூலம் வெப்பத்தை குறைக்கலாம்.
3. மாடி வெப்பத்தடுப்பின் நன்மைகள் (Benefits of roof heat proofing)
மாடி வெப்பத் தடுப்பு முறையினால் வீட்டுக்குள் வெப்பம் இல்லாமல் குளுமையாக இருக்கலாம். வீட்டிற்குள் வெப்பம் குறைவாக இருந்தால் நீண்ட நேரம் ஏர் கண்டிஷனர் ஓட அவசியம் இருக்காது, மின்விசிறியின் வேகத்தையும் குறைத்துக் கொள்ளலாம். இதனால் பெருமளவு மின்சாரத்தேவை குறையும். வீட்டில் வசிப்பதும் சுகமான அனுபவமாக இருக்கும்.
4. மாடி வெப்பத்தடுப்பின் விலை மற்றும் ஆயுள் (Cost and durability of roof heat proofing)
தட்டு ஓடுகள்: 50 வருடங்களுக்கு குறையாமல் உழைக்கக் கூடியவை , ஒரு சதுர அடிக்கு ₹40 வரை செலவாகும்.
கூலிங் ஓடுகள் : 20 ஆண்டுகள் வரை தாக்கு பிடிக்கும் , ஒரு சதுர அடிக்கு ₹45 வரை செலவாகும்.
உலோகக் கூரைகள்: இவை பராமரிப்பின் அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும். சதுர அடிக்கு ₹130 - ₹160 வரை செலவாகும்.
கூலிங் பெயிண்ட் : இது குறுகிய காலம் மட்டும் தாக்கு பிடிக்கும். இதன் ஆயுள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை தான் நீடிக்கும். சதுர அடிக்கு ₹25 வரை செலவாகும்.
சோலார் பேனல்கள்: இவை 10 ஆண்டுகளை கடந்து இருக்கக் கூடியவை . ஒரு சதுர அடிக்கு ₹ 600 சராசரியாக செலவாகும்.