
வீட்டின் மூலைகள், ஜன்னல்கள், கதவுகள் மற்றும் கூரை சுவர்களில் குளவிகள் கூடு கட்டுவதை நாம் பலமுறை பார்த்திருப்போம். இந்தக் குளவி கொட்டினால் கடுமையான எரிச்சல், வீக்கம் மற்றும் சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படக்கூடும். அந்த வகையில் எளிமையாக குளவிக் கூட்டினை அகற்றும் முறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சோப்பு நீர்: சாதாரண சோப்பு அல்லது திரவ சோப்பை ஒரு வாளி தண்ணீரில் சிறிதளவு கலந்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். பின்பு அதை குளவிக் கூடு இருக்கும் இடத்தில் தெளித்தால் சோப்பு நீர் குளவிகளின் இறக்கைகளில் ஒட்டிக்கொண்டு அவற்றால் பறக்க முடியாது. இதனால் யாருக்கும் தீங்கு நேராததோடு, எளிதாக குளவிக் கூட்டை அகற்றி விடலாம்.
புதினா எண்ணெய்: புதினா எண்ணெயின் வாசனையை குளவிகள் பெரும்பாலும் விரும்புவதில்லை என்பதால் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் புதினா எண்ணெயை தண்ணீரில் கலந்து குளவிக் கூட்டைச் சுற்றி தெளிக்கவும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் குளவிக் கூட்டை எளிதாக அகற்றி விடலாம். ஆனால், இதனை நீங்கள் தெளிக்கும்போது, கண்ணாடி அணிந்து, வாயை சரியாக மூடிக்கொண்டு தெளிக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
புகை குளவிக்குப் பகை: புகை போடுவதால் வீட்டிலிருந்து குளவிகளை எளிதாக அகற்றி விடலாம். புகை போடுவதற்கு முதலில் உலர்ந்த மரம் அல்லது அட்டை பெட்டிகளை தேன்கூட்டின் கீழ் வைத்து வேப்பமர இலைகளை அவற்றின் மீது வைக்கவும். பின்பு தீக்குச்சி உதவியுடன் குளவி கூட்டின் கீழே வைக்கப்பட்டுள்ள அட்டைப்பெட்டியில் பற்ற வைத்து அங்கிருந்து நகர்ந்து பாதுகாப்பான இடத்தில் நிற்கவும். குளவிக்கூட்டை புகை அடைந்தவுடன் குளவிகள் கூட்டில் இருந்து வெளியேறி ஓடத் தொடங்கும். சில மணி நேரத்தில் அனைத்து குளவிகளும் கூட்டை விட்டு வெளியேறி வெகு தூரம் சென்று விடும்.
வினிகர் மற்றும் எலுமிச்சை: ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வினிகர் மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவு கலந்து வைக்கவும். இந்தக் கலவை குளவிகளுக்கு விஷம் போன்றது என்பதால் வினிகர் மற்றும் எலுமிச்சை கலவையை குளவிக்கூடு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தெளித்தவுடன் அதன் வாசனையால் உடனடியாக அந்த இடத்தை விட்டு குளவிகள் வெளியேறி ஓடிவிடும்.
பகல் நேரங்களில் குளவிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதால் இரவு நேரத்தை தேர்வு செய்து டார்ச்சின் வெளிச்சத்தில் கைகள் மற்றும் கால்களை மறைக்கும் ஆடைகள், கையுறைகள் மற்றும் கண்ணாடிகளை அணிந்து கவனமாக குளவிகளை அகற்ற வேண்டும். கூடு அளவில் பெரியதாக இருந்தால் உள்ளூர் நகராட்சி குழு அல்லது பூச்சி கட்டுப்பாட்டின் உதவியை பெறுவதே சிறந்தது.