

ஸ்லீப்பர் பஸ் என்பது நீண்ட தூர பயணங்களுக்கு வசதியான, தூங்கும் வசதிகளுடன் கூடிய பேருந்தாகும். இவை பயணிகளுக்கு தகுந்த வகையில் இருக்கைகள், தனித்தனி படுக்கை வசதிகளை வழங்குகின்றன. விமான பயணத்திற்கு மாற்றாக, ஹோட்டல் செலவுகளைத் தவிர்க்க செலவு குறைந்த மற்றும் வசதியான பயணத்திற்கு ஸ்லீப்பர் பஸ்கள் சிறந்த தேர்வாக இருக்கின்றன. விமான பயணத்துடன் ஒப்பிடுகையில் ஸ்லீப்பர் பஸ்கள் மலிவானவை. இணைய தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் எளிதாக ஆன்லைனில் ஸ்லீப்பர் பஸ் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். இரவு நேரப் பயணங்களுக்கு ஸ்லீப்பர் பஸ்கள் ஒரு சிறந்த விருப்பமாக உள்ளது. ஆனால், ஸ்லீப்பர் பஸ்களில் பல பிரச்னைகள், வசதி குறைபாடுகள் மற்றும் அசௌரியங்களும் உள்ளன.
1. பாதுகாப்பு அபாயங்கள்: விபத்துக்கள் ஏற்படும்பொழுது தப்பிப்பதில் சிரமங்கள் உண்டாகிறது. விபத்து ஏற்பட்டால் படுத்திருக்கும் நிலையில் தப்பிப்பது என்பது கடினம். பஸ்ஸின் உயரமான அமைப்பு மற்றும் குறுகிய வழிகள் அவசர காலங்களில் வெளியேறுவதை தாமதப்படுத்துகிறது. அவசர காலங்களில் தப்பிக்க ஜன்னல் கம்பிகள் தடையாக உள்ளன.
2. வசதி குறைபாடுகள்: சில பஸ்களின் உள்ளே நுழைவது கடினம். ஏனெனில், அவை மிகவும் உயரமானவையாக உள்ளன. அத்துடன் பயணிகளுக்கான இடம் குறைவாக உள்ளது. இது நீண்ட தூரப் பயணங்களை அசௌகரியமாக்குகிறது.
3. பராமரிப்பு சிக்கல்கள்: சில குறிப்பிட்ட பஸ்களைத் தவிர மற்றவை எல்லாம் சரியான பராமரிப்பு இல்லாததால் நீண்ட தூரப் பயணங்களுக்கு வசதியானதாக இல்லை.
4. பயணத்தில் ஏற்படும் அசௌகரியங்கள்: குறுகிய நுழைவாயில் பயணிகளை கோழிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டது போல் உணர வைக்கிறது. சில நேரங்களில் பஸ் கதவுகள் மூடி இருக்கும்பொழுது உள்ளே பயணிப்பது ஒரு சிறைக்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஸ்லீப்பர் பஸ்களில் பொதுவாக இடப்பற்றாக்குறை இருப்பதுடன், மேலே உள்ள பெர்த்களில் ஏறுவதும் கடினமாக இருக்கிறது.
5. டாய்லெட் வசதி: முக்கியமாக டாய்லெட் வசதியுள்ள இடங்களில் பேருந்துகளை நிறைய பஸ்கள் நிறுத்துவதில்லை. இதனால் மக்கள் பெருமளவில் அவதிப்படுகிறார்கள். சில பஸ்களிலோ மூன்று நான்கு மணி நேரங்கள் கழித்து நிறுத்துகிறார்கள். இதனால் பாத்ரூம் போக முடியாமல் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் ஸ்லீப்பர் பஸ்ஸில் ஏற வேண்டிய அவசியம் இருந்தால் பஸ் பயணத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே தண்ணீர் குடிப்பதை நிறுத்தி விடுபவர்கள் அநேகம் பேர்.
6. சுகாதாரமின்மை: பெரும்பாலான பஸ்களில் அவர்கள் தரும் பெட்ஷீட், தலையணை போன்றவை சுத்தமாக இருப்பதில்லை. இதனால் பஸ்சை தேர்ந்தெடுத்து டிக்கெட் முன்பதிவு செய்வதே பெரிய சேலஞ்சிங்கான வேலையாக உள்ளது. சில பஸ்களில் டாய்லெட் வசதி உள்ளது. ஆனால், கதவைத் திறந்து மூடும் பொழுதெல்லாம் அந்த நெடி ஏசி பஸ் முழுவதும் பரவி வயிற்றை குமட்டுகிறது. சுத்தமாக பராமரிப்பது இல்லை. ஸ்லீப்பர் பஸ்ஸில் பயணிக்க நிறைய பணம் வாங்குகிறார்கள். ஆனால், கால் லிட்டர் பாட்டில் குடிநீர் தருவது எப்படிப் போதும் என்று சிந்திப்பதில்லை.
7. இதற்கான சில தீர்வுகள்: ஏசி ஸ்லீப்பர் பஸ்களில் சஸ்பென்ஷன் மற்றும் டயர்கள் போன்ற வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். பேருந்து நிறுவனங்கள் சரியான முறையில் பராமரிப்பு ஒப்பந்தங்களை நிர்வகிப்பதன் மூலம் பேருந்துகளின் தரத்தை மேம்படுத்த முடியும். தொலைதூரப் பயணங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நிறுத்த வேண்டும் என்று அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். பயணிகளுக்கு நல்ல உணவகம் நல்ல கழிப்பிட வசதி உள்ள இடத்தில் நிறுத்த வேண்டும்.