
அழுது கடக்க வேண்டிய சூழ்நிலையை கூட புன்னகையுடன் கடப்பதே மனவலிமை. அவமானங்களை நினைத்து அழத் தேவையில்லைை . நம் அழகான வாழ்க்கைக்கு அடித்தளமே நமக்கு ஏற்படும் அவமானங்கள்தான். யார் தூற்றினாலும், மதித்தாலும், மிதித்தாலும் தயங்கி நின்றுவிடாமல் முன்னேறுவதே மனவலிமை.
எல்லா பயணங்களும் நாம் நினைத்த இடத்திற்கு கொண்டு போய் சேர்ப்பதில்லை. வழி தவறிப்போகும் சில பயணங்கள்தான் நம் வாழ்க்கைக்கு மனவலிமையை கற்றுத்தரும். நிரந்தரமற்ற இவ்வுலகில் காயங்களுக்கு நியாயங்களைைத் தேடாமல் கடந்து போக கற்றுக்கொள்ள வேண்டும்.
எருமை மாட்டு மேல் மழை பெய்வது போல் சில சமயம் வாழ கற்றுக் கொள்வதுதான் சிறப்பு. பிறர் சொல்வதை நாம் காது கொடுத்து கேட்பது நமக்கு தலைவலியைதான் பரிசாக கொடுக்கும். அவமானம் என்பது மரியாதை எதிர்பார்த்தபோது நம்முடைய ஏதேனும் ஒரு இயலாமையை நான்கு பேர் முன்பு யாராவது சுட்டிக் காட்டும்போது உண்டாகும் உணர்வு.
பிற மனிதர்களுக்கு உதவ நினைக்கும்போது ஏற்படும் அவமானம் நமக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது. ஆனால் நம் சுயநலத்திற்காக யாரைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்படும்போது நமக்கு அவமானம் உண்டானால் நம்மை மாற்றிக் கொள்வதுதான் சிறப்பு.
அவமானங்கள்தான் அழகான வாழ்க்கைக்கு அடித்தளம். வாழ்வில் அவமானப்படும்பொழுதுதான் நிமிர்ந்து நிற்கக்கூடிய தைரியம் பிறக்கும். யார் நம்மை அவமானப்படுத்துகிறார்களோ அவர்கள் முன் வாழ்ந்து காட்டுவதுதான் சிறப்பு. வாழ்க்கையில் பட்ட அவமானங்களை வெற்றிப் படிகளாக மாற்றிக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.
பெரும்பாலும் உறவுகள், நட்புகள் மூலமாகத்தான் அவமானங்கள் ஏற்படுகின்றன. அதனால் மனம் பாதிப்படையாமல் இருக்க பழகவேண்டும். எதிர் தரப்பினரும் இப்படி அவமதிப்பதால் அதிக பாதிப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது என்பதை உணர்ந்து தவிர்க்க வேண்டும்.
சிலர் மென்மையான மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்களால் அவமானத்தை எதிர்கொள்ளும் திறன் அவ்வளவாக இருக்காது. இதற்கு அவர்கள் வளர்க்கப்பட்ட விதமும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் எதனால் இந்த அவமானம் என்பதை யோசித்து அதனை தவிர்க்க முயலவேண்டும்.
அத்துடன் மனதளவிலும் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலர் பிறரால் அவமானப்படும் பொழுது உடனுக்குடன் எதிர்வினை ஆற்றுவார்கள். இதனால் பயன் ஒன்றும் இல்லை. அதற்கு பதில் அவமானங்களை வாழ்வின் உயரங்களைத் தொடும் படிகளாய் மாற்றும் மாயாஜாலம் அறிந்திருக்க வேண்டும்.
பெரும்பாலான அவமானங்களை புறக்கணித்தாலே சரியாகிவிடும். இன்னும் சில அவமானங்களோ நம்மை நாமே மிகையாக நினைத்துக் கொண்டிருக்கையில், அது உண்மையில்லை என்று நிரூபிக்கப்படும் பொழுது ஏற்படக்கூடியவை. அவற்றை நாம் 'நமது உயரம் இவ்வளவுதான்' என்ற பிரக்ஞையுடன் எதிர்கொள்ளலாம்.
அத்துடன் அவமானங்களை அனுபவமாக பார்க்க ஆரம்பித்து விட்டால் நாம் நினைக்கும் உயர்ந்த நிலையை அடைந்து விடலாம். இவ்வுலகில் சாதித்தவர்கள் அனைவருமே அவமானங்களை சந்தித்தவர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் யாரையும் அவமதிக்காதீர்கள். அத்துடன் நம் வாழ்வில் நாம் எதிர்க்கொள்ளும் அவமானங்களை முன்னேற்றும் படிக்கற்களாக மாற்றிக் கொள்ளுங்கள்!