

புது வீட்டிற்கு குடி புகும்போதோ அல்லது புது மணப்பெண் புகுந்த வீட்டிற்குள் நுழையும் போதோ ஏன் முதலில் வலது காலை எடுத்து வைத்து செல்லவேண்டும்?
இந்த கேள்வியானது பொதுவாகவே நம் எல்லோருடைய மனதிலும் எழும்பி இருக்கும். ஏன் இடது காலை எடுத்து வைக்காமல் வலது காலையே எடுத்து வைக்கிறோம்? அதற்கான காரணம் என்ன? இதற்கான காரணத்தை நாம் மூட நம்பிக்கையுடன் இணைக்காமல், அறிவியல் ரீதியாக சற்று சிந்தித்து பார்க்கவேண்டும்.
உலகில் கிட்டத்தட்ட 90 சதவிகித மக்கள் வலது கை பழக்கம் உடையவர்கள். அவர்களில் பெரும்பாலோர் தன்னுடைய வலது காலால்தான் முதல் அடியை எடுத்து வைப்பார்கள். ஒரு சிலரே இடது காலை முதலில் நகர்த்தி நடப்பது வழக்கம். வலதுகாலின் வலிமையை அதிகமாக உணர்ந்தவர்கள், இடது காலை முதலில் நகர்த்தும் பட்சத்தில் அவர்களுடைய நடையில் தடுமாற்றம் ஏற்படலாம். இன்னும் சொல்லப்போனால், இடது கை பழக்கம் உள்ளவர்கள் கூட, வலது காலைதான் முன்வைத்து நடப்பது வழக்கம்.
இதை மனதில் வைத்து தான், புது மணப்பெண் முதலில் தன்னுடைய புகுந்த வீட்டிற்குள் நுழையும்போது தடுமாற்றம் ஏற்படாமல் தடுக்கவே, வலது காலை முன் வைத்து நுழையும் வழக்கம் ஏற்பட்டது. எல்லோருமே தங்களுடைய ஒவ்வொரு ஆரம்ப நிலை அல்லது புதிய வாழ்க்கைகான முதல் படியை எப்போதும் மகிழ்ச்சியுடன் தாண்டவே நினைப்பார்கள். அப்படி தாண்டினால் அது அவர்களுடைய நல்வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்ற ஒரு நம்பிக்கையின் காரணமாகத்தான் இவ்வாறான ஒரு பழக்கத்தை நம் முன்னோர்கள் பழக்கத்தில் இன்றளவும் வைத்திருக்கிறார்கள்.
இந்த பழக்கமானது ஆலயம், சுபநிகழ்ச்சிகள் என பல்வேறு இடங்களிலும் கடைபிடிக்கபடுகிறது. இதற்கான விளக்கத்தை இன்னும் சற்று அறிவியல் ரீதியாகவும் பார்க்கலாமா...
Right is always Right என்ற காரணத்தினால்தான் ஆங்கிலேயர்கள் “வலது” என்பதற்கும், “சரி” என்பதற்கும் ஒரே சொல்லை அதாவது right என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். அறிவியல் பூர்வமாக பார்த்தால், வலது பக்க அவயங்களை இடது பக்க மூளையும், இடது பக்க அவயங்களை வலது பக்க மூளையும் இயக்குகின்றன. மேலும் வலது பக்க மூளை எதையும் உணர்வு பூர்வமாக சிந்திக்கும், ஆனால் இடது பக்க மூளையோ அறிவு பூர்வமாக சிந்திக்கும். ஆகவேதான் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அறிவு பூர்வமாக இருக்கவேண்டும் என்பதற்காக இடது மூளையால் இயக்கப்படும் வலது காலை முன் வைக்கிறோம்.
நமது பாரம்பரியத்தின்படி எதையும் வலது கையால் கொடுத்து வலது கையால்தான் பெறுகிறோம். அப்படித்தான் செய்யவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியதிலும் இந்த அறிவியல் காரணம் தான் அடங்கி இருக்கிறது. அதைப்போல், ஆலயத்தை வலப்புறமாக சுற்ற வேண்டும் என்பதைதான் “வலம்” வருதல் என்று நாம் அழைக்கிறோம்.
இதைத் தவிர, நம் மனித உடலமைப்பின் படி நாம் முதலில் வலது காலை வைத்து தொடங்கிய நடை பெரும்பாலும் வலது காலிலேயே தொடரும். ஆகவே, நம்முடைய உடலின் பாரமானது இடது புறமே வரும். இவ்வாறு வரும் போது, நாம் விடும் சுவாசத்திற்கு தடையில்லாமல் இருக்கும்.
நம்முடைய ஆரோக்கியமானது வலது நாசியில் கொள்ளும் சுவாசத்தால் மேம்படும் என்பது நிரூபணமான உண்மை. அது மட்டுமில்லாமல் புது இடம் என்பதால் நோய் கிருமிகள் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், வலதுபுற சுவாசம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என்பதையும் கருத்தில் கொண்டுதான் இந்த பழக்கம் வந்ததாகவும் கருதப்படுகிறது.