
நீங்கள் சமையல் அறையில் பயன்படுத்தும் சில கத்திகளில் துளை இருப்பதை கவனித்திருப்பீர்கள். அது வெறும் அழகுக்காக போடப்பட்டது அல்ல. அது கத்தியின் செயல்பாட்டை மேம்படுத்தும் மிக முக்கியமான அம்சமாகும். இந்தப் பதிவில் சமையலறைக் கத்திகளில் துளைகள் இருப்பதற்கான பல்வேறு காரணங்களைப் பார்க்கலாம்.
கத்தியில் துளைகள் இருப்பதால் அதன் ஒட்டுமொத்த எடை குறைவாக இருக்கும். இது கத்தியைக் கையாள்வதை எளிதாக்கி நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் கை சோர்வடையாமல் இருக்க உதவும். குறிப்பாக, பெரிய கத்திகளில் இந்த எடைக் குறைப்பு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
துளைகள் கத்தியின் எடையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இப்படிப்பட்ட கத்தியைப் பயன்படுத்துவது மிகவும் துல்லியமாக இருப்பதால், காய்கறி, உணவை வெட்டும்போது சரியான கட்டுப்பாட்டை கொடுக்கும்.
கத்தியின் மேற்பரப்பில் உணவு ஒட்டாமல் தடுக்க துளைகள் உதவுகின்றன. குறிப்பாக ஈரமான, ஒட்டும் உணவுகளை நறுக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும். துளைகள் வழியாக உணவுக்கும் கத்திக்கும் இடையேயான உராய்வு குறைந்து ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.
கத்தியில் இருக்கும் துளை அதை சுவற்றில் மாட்டி வைக்க உதவுகிறது. மேலும் மற்ற சாதனங்களை இத்துடன் இணைத்து பயன்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்த துளைகள் வெப்பத்தைக் கடத்துவதை குறைக்கின்றன. நீண்ட நேரம் உணவுகளை நறுக்கும்போது, கத்தி அதிக வெப்பமடையாமல் இது பாதுகாக்கிறது.
வெவ்வேறு வகையான கத்திகளில் வெவ்வேறு அளவுகளில் துளைகள் இருக்கும். சமையல்காரர்கள் பயன்படுத்தும் பெரிய கத்திகளில் பெரிய ஓட்டைகள் இருக்கும். இது கத்திகளை வகைபிரித்துப் பார்க்கவும் உதவுகிறது.
கத்திகளைப் பயன்படுத்தும் முறை: கத்திகளை சரியாகப் பயன்படுத்துவதற்கு சில முறைகள் உள்ளன. முதலில் கத்தியை பிடிக்கும் முறை மிகவும் முக்கியமானது. அது கத்தியின் செயல்திறனை முற்றிலுமாக பாதிக்கும். ஒவ்வொரு கத்தியும் வெவ்வேறு வகையான உணவுகளை வெட்ட பயன்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் வெட்டும் விஷயங்களுக்கு ஏற்ப கத்திகளைத் தேர்வு செய்ய வேண்டும். கத்திகளை பயன்படுத்திய உடனே சுத்தம் செய்து வைப்பது அவசியம். அவை எப்போதும் கூர்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். கத்திகள் அனைத்தையும் குழந்தைகள் எடுக்க முடியாத இடத்தில் வைப்பது நல்லது.