உதவி செய்வதைவிட, உதவி கேட்பதுதான் கெத்து: இந்த சைக்காலஜி ரகசியம் தெரியுமா?

secret of psychology
secret of psychology
Published on

பொதுவாக நமக்கு யாராவது ஒருவரைப் பிடித்திருந்தால் அல்லது அவருடைய கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால் அவருக்கு பிடித்தமானவற்றை செய்து அவர்களை கவர முயற்சி செய்வோம். ஆனால் உளவியல் என்ன சொல்கிறது தெரியுமா? மற்றவர்கள் உங்களை விரும்ப வேண்டுமென்றால் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்வதைவிட நீங்கள் ஒரு சிறிய உதவியை அவர்களிடம் கேட்கவேண்டும் இதுதான் உலகப் புகழ்பெற்ற பெஞ்சமின் பிராங்கிளின் எஃபெக்ட் (Ben Franklin Effect) என்று அழைக்கப்படுகிறது

யார் இந்த பெஞ்சமின் பிராங்க்ளின்?

அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிஞரான பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு ஒரு அரசியல் எதிரி இருந்தார். அவர் பிராங்க்ளினைப் பார்த்தாலே எரிச்சலடைவார். அவரைத் தன் நண்பனாக்க பிராங்க்ளின் ஒரு வினோதமான வழியைக் கையாண்டார். அந்த நபரிடம் இருந்த ஒரு அரிய வகை புத்தகத்தை மட்டும் ஒரு வாரம் இரவல் தருமாறு கடிதம் எழுதினார். அந்த எதிரியும் புத்தகத்தை அனுப்பினார்.

ஒரு வாரம் கழித்து பிராங்க்ளின் அந்தப் புத்தகத்தைத் திருப்பித் தரும்போது, மனதார நன்றி கூறி ஒரு கடிதம் வைத்தார். அடுத்த முறை அவர்கள் நேரில் சந்தித்தபோது, அந்த எதிரி முதன்முதலாக பிராங்க்ளினிடம் மிக மரியாதையாகவும் அன்பாகவும் பேசினார். இறுதிவரை அவர்கள் நண்பர்களாகவே இருந்தனர்.

பிராங்க்ளின் சொன்னது இதுதான்: ‘உங்களுக்கு ஒருமுறை உதவி செய்தவர், நீங்கள் அவருக்குச் செய்த உதவியைவிட, மீண்டும் உங்களுக்கு உதவி செய்யவே அதிக விரும்புவார்.’

நமது மூளையில் நடக்கும் மேஜிக்:

இதன் பின்னால் ஒரு உளவியல் உண்மை இருக்கிறது. நம் மூளை எப்போதும் குழப்பத்தை விரும்புவதில்லை. நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம் என்றால், நம் மூளை நமக்குள் இப்படி ஒரு கணக்கைப் போடும்: ‘நான் ஏன் இவருக்கு உதவி செய்கிறேன்? எனக்குத்தான் இவரைப் பிடிக்காதே!’

உடனே மூளை அந்த முரண்பாட்டைச் சரிசெய்ய, ‘இல்லை.. இல்லை.. நான் இவருக்கு உதவி செய்கிறேன் என்றால், நிச்சயம் எனக்கு இவரைப் பிடித்திருக்க வேண்டும். ஆமாம், இவர் நல்லவர்தான்!’ என்று ஒரு பொய்யான காரணத்தை உருவாக்கி, அந்த நபர் மீது ஒரு நல்ல பிம்பத்தை மனதில் ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை எப்படிப் படிக்க வைப்பது? 2000 ஆண்டுகளுக்கு முன்பே பிளேட்டோ சொன்ன சைக்காலஜி ரகசியம்!
secret of psychology

இந்த உத்தியைப் பயன்படுத்துவது எப்படி?

1. ஆலோசனை கேட்பது: ‘இந்த விஷயத்தில் எனக்கு ஒரு சின்ன ஐடியா தாருங்கள்’ என்று கேட்கும்போது அவர்கள் தன்னை ஒரு நிபுணராக நினைத்துக் கொள்வார். அவருக்கு உங்கள் மீது மரியாதையும் வரும்.

2. இரவல் கேட்பது: ஒரு பேனாவோ, புத்தகமோ அல்லது சிறிய பொருளை இரவலாகக் கேட்கலாம். அல்லது கார் மெக்கானிக் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று மிகச்சிறிய உதவியை கேட்கலாம்.

3.கருத்து கேட்பது: ‘உங்களுக்கு நல்ல டிரெசிங் சென்ஸ் இருக்கு. எனக்கு இந்த இரண்டு புடவைகளில் எது நன்றாக இருக்கும். சொல்லுங்கள்’ என்று கேட்கும்போது தன்னை ஒரு முக்கிய நபராக அவர் உணர்வார்.

விளைவுகள்:

நீங்கள் எப்போதும் பிறருக்கு உதவி செய்து கொண்டே இருந்தால் நீங்கள் ஒரு பாவப்பட்ட ஆள் அல்லது சொன்னதைச் செய்யும் நபர் என்று பிறர் நினைப்பார்கள். ஆனால் ஒரு சிறிய உதவியை கேட்கும்போது நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என்று அவர்கள் கருதுவார்கள்.

எனவே அடுத்த முறை உங்கள் மேலதிகாரி அல்லது பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரர்கள் உங்களை விரும்ப வேண்டும் என்று நினைத்தால் சின்ன உதவி கேட்டுப் பாருங்கள். அந்த சின்ன உதவியே அவர்களை உங்களை நேசிக்க வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com