
வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே வருகிறது. எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறோம். ஆனால் பெரும்பாலான மனிதர்களிடம் நல்ல பண்புகள் குறைந்துகொண்டே வருகிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும், விரைவான வாழ்க்கை முறையாலும் நிறைய உயர்ந்த பண்புகள் புறக்கணிக்கப்படுகின்றன.
பொறுமை:
நம்மிடம் மறந்துபோன பண்புகள் நிறைய உள்ளன. குறிப்பாக காது கொடுத்து கேட்கும் தன்மை இன்றைய தலைமுறையில் முற்றிலும் மறைந்தே போனது. ஒருவர் கூறுவதை பொறுமையாக காது கொடுத்து கேட்கவோ, நின்று நிதானமாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கவனித்து பதில் அளிக்கவோ இன்றைய தலைமுறையினர் தயாராக இல்லை. எங்கும் எதிலும் அவசரப்படுவதும், தாங்கள் நினைத்தது உடனே நடந்து விட வேண்டும் என்ற அதிக எதிர்பார்ப்பும் இன்றைய தலைமுறையினர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
கருணை மற்றும் சகிப்புத்தன்மை:
பிறரிடம் அன்பு கொள்வதும், பரிவு காட்டுவதும், சகிப்புத்தன்மையுடன் திகழ்வதும் மறந்துபோன பண்புகளாகி வருகின்றன. பிறரை மதிக்கும் உயர்ந்த குணமும், அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதும் போன்ற உயர்ந்த பண்புகள் மறக்கப்படுகின்றன. வயதுக்கு தகுந்த மரியாதை கொடுப்பது, நிதானமாகவும் அமைதியாகவும் எதிர்வினையாற்றுவது போன்ற உயர்ந்த பண்புகள் காணாமல்போய் வருகின்றன.
நேர்மை:
சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான குணமான நேர்மை என்பது இன்றைய காலகட்டத்தில் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. நினைத்ததை எப்படியும், எந்த விலை கொடுத்தும் சாதித்துவிட வேண்டும் என்கிற குணம் மேலோங்கி நிற்கிறது. நம்மை சிறந்த மனிதர்களாக மாற்ற, ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க நேர்மை என்பது மிகவும் அவசியம்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் யாரை எப்படி ஏமாற்றலாம், எப்படி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கலாம் என்ற சிந்தனையே போய்க்கொண்டிருக்கிறது. நம் வசதிக்காக பொய் சொல்வதும், செய்த தவறுகளை மறைக்கவும் சரளமாக பொய் சொல்லிப் பழகுகிறோம்.
உதவும் மனப்பான்மை:
பிறருக்கு உதவி செய்யும் குணம் குறைந்துகொண்டே வருகிறது. பொருள் சேர்க்க அதன் பின்னால் ஓடுவதும், வெற்றியை நோக்கி அலைவதும், நம் குடும்பங்களையும் நண்பர்களையும் புறக்கணிக்க வைப்பதுடன் உதவும் மனப்பான்மையும் வெகுவாக குறைத்துள்ளது. சுயநலமே முக்கியத்துவம் பெறும் இன்றைய காலகட்டத்தில், அடுத்தவர்கள் மீது அக்கறை செலுத்துவதும், கஷ்டப்படுபவர்களை கை தூக்கிவிடும் உதவும் மனப்பான்மையும் காணாமல் போய் வருகிறது.
உறவுகளைப் பேணுதல்:
சுயநலமே முக்கியத்துவம் பெறும் இக்காலகட்டத்தில், அடுத்தவர்கள் மீது அக்கறை செலுத்தும் பண்பு குறைந்து வருகிறது. டிஜிட்டல் உலகில் தனிமை அதிகரித்து வருவதால், உண்மையான அன்பு, ஆதரவு மற்றும் மனித உறவுகள் குறைந்துகொண்டே வருகின்றன. உறவுகளை பேணிப் பாதுகாப்பது என்பதே மறைந்து வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகப்படியான பயன்பாடு, நம் சுயநல பண்புகளை அதிகரிக்கிறது. இந்த கலாச்சாரம் மனிதர்களை பொருள் சார்ந்த வாழ்க்கைப் பாதையில் அழைத்துச் செல்வதால் மனிதப் பண்புகளை புறக்கணிக்க செய்கிறது.
மன்னிக்கும் மனப்பான்மை:
மன்னிக்கும் மனப்பான்மை என்பது நமக்கு தீங்கிழைத்தவர்களைக் கூட வெறுக்காமல், அவர்களை பெருந்தன்மையுடன் மன்னித்து, அவர்களின் தவறை பொருட்படுத்தாமல் உறவை மேம்படுத்தும் ஒரு உயரிய குணமாகும். இந்த மனப்பான்மை உடல், மன மற்றும் சமூக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மன அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் உறவுகளை வலுப்படுத்தி சமூக இணக்கத்தையும் வளர்க்கக்கூடிய இந்த உயரிய பண்பை இன்றைய இளம் தலைமுறையினரிடம் காண்பது என்பது மிகவும் அரிதாகி வருகிறது.