
‘கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்’ என்பார்கள். ஒரு வீட்டைக் கட்டுவதுடன் நமது பணி முடிவதில்லை. அதன் அழகை மேம்படுத்துவதில்தான் நமது கவனம் அனைத்தும் இருக்கும். எதைச் செய்தால் நம் வீடு மற்ற வீடுகளில் இருந்து தனித்துவமாகத் தெரியும் என்ற தேடுதலை அதிகமாக்குவார்கள்.
இந்த நவீன வடிவமைப்புக்கான தேடுதல்களில் முக்கியமானதாக இருப்பது வால் பேப்பர் எனப்படும் சுவரொட்டிகளும் அடங்கும். டைனிங் ஹால் முதல் மெயின் ஹால் வரை அவரவர் ரசனைக்கேற்ப ஒட்டும் வால் பேப்பர்கள் அந்த இடத்திற்கு தனிப்பட்ட அழகைத் தருகிறது. பொதுவாக, இந்த வால் பேப்பர்கள் விதவிதமான வடிவங்களில் அச்சிடப்பட்டு, ரோல்களில் சுற்றி கடைகளில் விற்கப்படுகிறது. நுகர்வோருக்குப் பிடித்தமான வால் பேப்பர்களை தேர்வு செய்யப்பட்டு அதை பேஸ்டைப் பயன்படுத்தி சுவரில் சரியான அளவில் ஒட்டப்படுகிறது. வீட்டுக்கு அழகு தரும் இந்த வால் பேப்பர்களினால் பல்வேறு நன்மைகளும் ஒளிந்து இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. சில வகையான வால் பேப்பர்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வினைல் வால் பேப்பர் (Vinyl Wallpaper): இது நீடித்த, நீரினால் பாதிக்கப்படாத மற்றும் சுத்தம் செய்ய எளிதானது. இது வீட்டின் அதிக புழக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
நெய்யப்படாத வால் பேப்பர் (Non-Woven Wallpaper): இயற்கை இழைகளால் ஆன இந்த வால்பேப்பர் சுவாசிக்க ஏற்றதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது.
காகித வால் பேப்பர்கள் (Paper-Backed Wallpaper): அனைவராலும் விரும்பப்படும் உன்னதமான தேர்வு இது. ஏனெனில், இதை நிறுவ எளிதானது மற்றும் பெரும்பாலான சுவர்களுக்கு ஏற்றதாக உள்ளது.
துணி வால் பேப்பர் (Fabric Wallpaper): இது தனித்தன்மை வாய்ந்த அமைப்பு மற்றும் அரவணைப்பைத் தருகிறது. பெரும்பாலும் முறையான அமைப்புகளில் (formal settings) இது பயன்படுத்தப்படுகிறது.
புல் துணி வால் பேப்பர் (Grasscloth Wallpaper): இந்த நவீன ரக வகை வால் பேப்பர் இயற்கையான புற்களால் வடிவமைக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மற்றும் தனித்துவமான அமைப்பையும் சேர்க்கிறது.
வால் பேப்பர் ஒட்டுவதன் நன்மைகள்: ஒரு அறையை காட்சிகள் மூலம் காண்பவரை ஈர்த்து அந்த அறைக்கு அழகியலைத் தருகிறது. சுவற்றில் எதிர்பாராமல் தோன்றும் சிறிய விரிசல்கள் அல்லது சீரற்ற மேற்பரப்புகள் போன்ற சிறிய சிறிய குறைபாடுகளை இதனால் மறைக்க முடியும். வினைல் போன்ற சில வகையான வால் பேப்பர்களை சிரமம் பாராமல் வீடு கட்டும்போது பிளான் செய்து ஒட்டினால் நீண்ட காலம் நீடித்து அழகைத் தரும்.
பல வகையான வால் பேப்பர்கள் சுத்தம் செய்து பராமரிக்க எளிதானதாக இருக்கும். சில வால் பேப்பர்கள் எதிரொலியைக் குறைக்கவும் ஒலியின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். இதனால் வெளிப்புற சப்தங்கள் இன்றி அறைக்கு அமைதி கிட்டும்.
வால் பேப்பர் ஓட்டும்போது கவனிக்க வேண்டியவை:
* உங்கள் வீட்டு அமைப்பு மற்றும் வண்ணங்கள் ரசனைக்கேற்ப வால் பேப்பர் ஒட்டும் நுண்ணியப் பணிக்கு அதில் சிறந்த நிபுணருடன் ஆலோசனை செய்யுங்கள்.
* தவறாமல் செய்யும் வழக்கமான சுத்தம் மற்றும் பராமரிப்பு உங்கள் வால் பேப்பரின் ஆயுளை நீட்டிக்கும்.
* சில வால் பேப்பர்கள் மற்றவற்றை விட அகற்றுவது எளிது என்பதால் தேர்ந்தெடுக்கும்போது இதை அவசியம் கருத்தில் கொள்ளுங்கள்.
* நம்பகமான கடைகள் அல்லது ஆன்லைன் மற்றும் பிராண்ட் வலைத்தளங்களில் தேடினால் நீங்கள் விரும்பும் நவீன வால் பேப்பர்கள் கிடைக்கும்.
குழந்தைகள் படிக்கும் அறை முதல் உங்கள் படுக்கையறை வரை சரியான வகை வால் பேப்பரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் வீட்டின் அழகையும் செயல்பாட்டையும் மேம்படுத்தலாம் என்பதுடன், மனதில் உற்சாகம் மற்றும் நிம்மதியையும் பெறலாம்.