

நாம் பேசும் வார்த்தைகள் மற்றும் நடத்தை பிறரை காயப்படுத்தலாம். அதே சமயத்தில் ஒரு நபர் தன்னைத்தானே தனது செயல்கள் மூலம் காயப்படுத்திக் கொள்ள முடியும். அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. அதீத மன்னிப்பு: தவறு செய்தால் மன்னிப்பு கேட்பது இயல்பான ஒன்று. ஆனால், சிறிய தவறுகளுக்கும் அதிகமாக மன்னிப்பு கேட்பது மற்றும் செய்யாத தவறுக்கு கூட மன்னிப்பு கேட்பது என்பது ஒருவர் தனக்குத்தானே செய்து கொள்ளும் தீங்கு ஆகும். இது அவருடைய குறைந்த சுயமரியாதையை வெளிப்படுத்துகிறது. எப்போதும் தன்னைப் பற்றிய ஒரு மட்டமான எண்ணத்தை அவர் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. அது அவரை எப்போதும் மனதளவில் ஒரு சுமை தாங்கியாக மாற்றி விடும். தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளும் தண்டனையாகவும் மாறிவிடும்.
2. அதிகமாக தூங்குவது: தேவைக்கு அதிகமாக தூங்கும் அதீத உறக்கம் நடைமுறை வாழ்க்கையின் பிரச்னைகளை, கடமைகளைத் தவிர்ப்பதை, உணர்ச்சிகளை கையாளத் தெரியாத பக்குவமின்மையைக் குறிக்கிறது. வாழ்க்கையில் சிக்கல்கள், பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்கத் தெரியாமலேயே போய்விடும். கஷ்டத்தில்தான் ஒருவர் தனது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி அவற்றை ஜெயிக்க முடியும். அவற்றைப் புறக்கணித்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தால் அவர் வாழ்க்கையில் வளர்ச்சி என்பதே இருக்காது. மன அழுத்தமும் பிரச்னைகளுமே அதிகரிக்கும்.
3. அவமானத்தை தாங்குதல்: மோசமாக நடத்துபவர்களிடம் தொடர்ந்து நட்பிலும் உறவிலும் இருப்பது ஒருவர் தனக்குத்தானே செய்து கொள்ளும் தீங்காகும். அது தன்னை அழித்துக் கொள்வதற்கு சமம். மனதின் அடியாழத்தில் பிறர் நம்மை மோசமாக நடத்துவது சரிதான், நான் அதற்கு பொருத்தமானவன்தான் என்கிற குறைந்த சுயமரியாதை உள்ளவர்கள் மட்டுமே இதுபோன்ற அவமானத்தை தாங்கிக் கொள்வார்கள்.
4. அடிக்கடி போன் பார்ப்பது: அடிக்கடி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என நோட்டிஃபிகேஷன் சத்தம் வந்தாலே போனை எடுத்துப் பார்க்கும் நபர்கள் பிறருடைய மதிப்பை எதிர்பார்ப்பார்கள். தனிமையில் வாடுபவராக இருப்பார்கள். தாங்கள் எதற்கும் லாயக்கில்லை, பிறர் தன்னை மதித்தால் மட்டுமே தன் மீது நம்பிக்கை கொள்வார்கள்.
5. விமர்சனம்: பிறருடைய விமர்சனங்களில் உண்மை இருந்தால் அவற்றை மதிக்கலாம். சாதாரணமாக அல்லது நகைச்சுவைக்காக பிறர் அளிக்கும் விமர்சனங்கள் மற்றும் மிகச் சாதாரணமாக சொல்லப்படும் கமெண்ட்கள் கூட அதிகம் பாதிக்கிறது என்றால் நீங்கள் மனதளவில் உறுதியாக இல்லை என்றே உணர்த்துகிறது. அவை உங்களது வளர்ச்சியை தடுக்கும். மனதளவில் நீங்கள் கோழைகளாக இருப்பீர்கள்.
6. ஒப்பீடு: சிலர் தன்னுடைய தோற்றம், பார்க்கும் வேலை, அந்தஸ்து, வாழ்க்கை வசதி சாதனைகள் போன்றவற்றை பிறருடன் ஒப்பீடு செய்து கொண்டே இருப்பார்கள். ஒப்பீடு என்பது இன்பத்தைக் களவாடும் திருடன் போன்றது. நம்மை பிறருடன் ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால் சொந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது. மகிழ்ச்சியின்மை, கவனக்குறைவு, பொறாமை, கசப்பு, போதாமை போன்றவையே வாழ்வில் நிறைந்திருக்கும். தன்னுடைய சொந்த இலக்கை அடைய முடியாமல் போய்விடும்.
7. தன்னுடைய கருத்தை மறுப்பது: பலரும் பிறருடைய கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், தனது ஆழ்மனம் சொல்லும் கருத்துக்களை, யோசனைகளை புறக்கணித்து அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது தனக்குத்தானே ஒருவர் செய்து கொள்ளும் துரோகம் ஆகும். ஏனென்றால், ஒருவரது உள்ளுணர்வு எனும் ஆழ்மனம் அவருக்கு நன்மையையே செய்யும். அவற்றைப் புறக்கணித்து விட்டால் தோல்வியும் ஏமாற்றமும் சோகமும் மட்டுமே வாழ்க்கையில் கிடைக்கும். எனவே, உள் மனம் சொல்வதை கவனித்துக் கேட்டு அது சரியாக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பது புத்திசாலித்தனம். தனக்குத்தானே தீங்கு தரும் இந்த ஏழு வகையான அறிகுறிகளை ஒருவர் விலக்க வேண்டும்.