

ஒரு கையில் ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருக்காது." அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இடையே மனஸ்தாபம் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக, ஒரு வருட இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளிடையே அடிக்கடி நடக்கும் சண்டைகளைச் சமாளிப்பது பெற்றோருக்குப் பெரிய சவாலாக அமைகிறது.
சண்டைக்கான முக்கிய காரணங்கள்:
பெற்றோரின் கவனம் முழுமையாகத் தனக்கே கிடைக்க வேண்டும் என்றும், தன் பொம்மையை மற்றவர் தொடக் கூடாது என்றும் குழந்தைகள் நினைப்பார்கள். சிறு வயதில் பகிர்ந்துகொள்ளும் எண்ணம் வருவதில்லை. மனதிலுள்ள ஏக்கம் அல்லது கோபத்தை வார்த்தைகளால் சொல்லத் தெரியாதபோது, தம்பி/தங்கையை கடிப்பது, கிள்ளுவது, அடிப்பது போன்ற செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்துகிறார்கள்.
இருவருமே அம்மாவின் அன்பிற்காக ஏங்கிச் சண்டை போட்டுக்கொள்வார்கள். கூட்டுக்குடும்பமாக இருந்தால் கூட, ‘அம்மாவுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?’, ‘பாட்டிக்கு யார் செல்லம்?" என்கிற மறைமுகப் போட்டி இரண்டு குழந்தைகளுக்கும் இடையே எப்போதும் இருக்கும்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
1. விட்டுக்கொடுக்க கட்டாயப்படுத்தாதீர்கள்
எப்போதும் மூத்த குழந்தையிடம், ‘தம்பிக்கு/தங்கைக்கு விட்டுக்கொடு", "நீதானே பெரியவன்/பெரியவள், நீ ஏன் அவங்களை அடிச்ச? அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ" என்று சொல்லக் கூடாது. இது மூத்த குழந்தைக்குத் தம்பி/தங்கை மீது வெறுப்பையே வரவழைக்கும்.
2. கோபத்தைக் கையாளக் கற்றுக்கொடுங்கள்:
குழந்தைகள் அடிதடியில் இறங்கும்போது, இருவரையும் தண்டிக்காமல் தனித்தனியே அழைத்து அமைதிப்படுத்த வேண்டும். வீட்டில் யாரையும் அடிக்கவோ, திட்டவோ கூடாது என்பதை அன்பாகவும் உறுதியாகவும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கவேண்டும். ‘உனக்குக் கோபம் வந்தால் வாயால் சொல்லு, கையோ காலோ ஓங்கக் கூடாது’ என்று பழக்குங்கள். அடிதடியில் இறங்கும்போது குழந்தைகளைச் சிறிது நேரம் வேறு வேறு இடங்களில் தனித்தனியாக அமரவைக்க வேண்டும். அவர்களின் கோபம் தணிந்த பிறகு, அமைதியாக அன்பாகப் பேசி புரியவைக்க வேண்டும்.
3. மூத்த குழந்தைக்கு "சிறப்பு தனி நேரம்:
சில சமயங்களில் மூத்த குழந்தையின் யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை" என்ற ஏக்கமே பல சண்டைகளுக்கு மூல காரணமாக அமைகிறது.
இளைய குழந்தை தூங்கும் நேரத்தில், குறைந்தபட்சம் தினமும் 15 நிமிடங்கள் மூத்த குழந்தையோடு மட்டும் செலவிடுங்கள். கதை சொல்லலாம், சேர்ந்து விளையாடலாம் அல்லது வெறுமனே கட்டிப்பிடித்து அன்பு காட்டி முத்தமிடலாம்.
"நீ எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான்" என்பதை அந்தச் செயல்கள் மூலம் உணர்த்த வேண்டும். "இது தம்பி பொம்மை, இது உன் பொம்மை" என்று பிரிக்காமல், "இது உங்க பொம்மை, இரண்டு பேருமே சேர்ந்துதான் விளையாட வேண்டும்" என்கிற பழக்கத்தைக் கொண்டு வரவேண்டும்.
5. கூட்டுப் பொறுப்பு:
இளைய குழந்தையைக் கவனிப்பதில் மூத்த குழந்தையை ஒரு உதவியாளராக மாற்றலாம். ‘பாப்பாவுக்குத் துணி எடுத்துத் தர்றியா செல்லம்?", "தம்பியைச் சிரிக்க வைக்கிறியா?", "தம்பிக்கு விளையாடப் பொம்மை எடுத்துட்டு வா" என்று அவர்களிடம் சிறு சிறு உதவிகளைக் கேட்கலாம். அவர்கள் உதவி செய்யும்போது தாத்தா, பாட்டி, உறவினர்கள் முன்னிலையில், "பார்த்தீங்களா... இவன் எவ்வளவு சமத்தா தம்பி/தங்கச்சியப் பார்த்துக்கிறான்!" என்று பாராட்ட வேண்டும். இது மூத்த குழந்தைக்குப் பாதுகாப்பான உணர்வையும் பொறுப்புணர்வையும் தரும்.
குழந்தைகள் வளரும் பருவத்தில் சிறு சிறு மோதல்கள் ஏற்படுவது முற்றிலும் இயல்பானதுதான். அவை பகைமை உணர்ச்சியால் வெளிப்படுபவை அல்ல; தங்கள் வளர்ச்சிக்கான இயல்பான நிலையில் அன்பையும் கவனத்தையும் பெறவே அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு குழந்தைகள் மீதும் பெற்றோர் காட்டும் சமமான அன்பும், பொறுமையும், நிதானமுமே இந்தச் சிறு பிணக்குகளைத் தீர்க்கும் சிறந்த ஆயுதங்களாகும்!
குழந்தைகள் சண்டையில், மூத்த குழந்தையைக் காயப்படுத்தாமல் அன்பாகவும் உறுதியாகவும் கையாண்டு குடும்பத்தில் அமைதியைக் கொண்டுவரும் தெளிவு கிடைக்கும்.