
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை புத்திசாலியாகவும், அறிவாளியாகவும் வளர வேண்டும் என்றே விரும்புகின்றனர். எனவே, குழந்தைகளின் செயல்பாடுகளையும், நடத்தைகளையும் உற்று நோக்கி, அவர்கள் புத்திசாலிகளா என்பதை அறிய பெற்றோர்கள் முயற்சி செய்கிறார்கள். குழந்தைகளிடம் இயல்பாகக் காணப்படும் சில அறிகுறிகள் அவர்கள் புத்திசாலிகளாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை உணர்த்துகின்றன.
புத்திசாலித்தனத்திற்கான அறிகுறிகள்:
1. புத்திசாலி குழந்தைகள் புதிய தகவல்களை மிக விரைவாகவும், எளிதாகவும் கற்றுக்கொள்கிறார்கள். ஒருமுறை கூறியதை வைத்தே புரிந்து கொண்டு செயல்படுவார்கள். உதாரணத்திற்கு, ஒரு புதிய விளையாட்டை அல்லது ஒரு கருத்தை மிக விரைவாக கிரகித்துக்கொள்வார்கள்.
2. இயற்கையாகவே, புத்திசாலி குழந்தைகள் எல்லாவற்றையும் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். "ஏன்?", "எப்படி?" போன்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
3. இத்தகைய குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றல் இருக்கும். முன்பு பார்த்த விஷயங்கள், படித்த கதைகள் அல்லது கேட்ட பாடல்கள் என அனைத்தையும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.
4. தமது வயதை ஒத்த குழந்தைகளை விட பெரியவர்களுடன் சரளமாக உரையாடும் திறன் பெற்றிருப்பார்கள். சரியான கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு, பெரியவர்களின் கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
5. எளிய புதிர்கள் அல்லது சவால்களை விரைவாகவும், திறமையாகவும் தீர்க்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்தையும் சரியாக சிந்தித்து புரிந்து கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும்.
6. புத்திசாலி குழந்தைகளுக்கு கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். புதுப்புது கதைகளை உருவாக்குவது, வித்தியாசமான விளையாட்டுக்களை விளையாடுவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள்.
7. மேலும் இவர்களுக்கு தனித்துவமான நகைச்சுவை உணர்வு இருக்கும். மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைக் கூட நகைச்சுவையாக வெளிப்படுத்தும் திறன் பெற்றிருப்பார்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் அனைத்தும் ஒரு குழந்தை புத்திசாலி என்பதற்கான சான்றுகளாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறனைப் பெற்றிருப்பார்கள். சில குழந்தைகள் இந்த அறிகுறிகளை வெளிக்காட்டாமல் இருக்கலாம். அதனால், அவர்கள் புத்திசாலிகள் இல்லை என்று அர்த்தம் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை ஊக்குவிப்பதும், அவர்களின் கற்றலுக்கு ஏற்ற சூழலை அமைத்து கொடுப்பதும் மிகவும் முக்கியம். மேலும், ஒரு குழந்தையின் புத்திசாலித்தனத்தை வெறும் கல்வி சார்ந்த திறன்களை மட்டும் வைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களின் சமூக உணர்வுகள், கலை ஆர்வம், விளையாட்டுத் திறன் போன்ற பிற திறன்களையும் சமமாக மதிக்க வேண்டும்.