குழந்தை பருவத்தில் இருந்தே மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அக்டோபர் 10: உலக மனநல நாள்!
Mental Health Day
Mental Health Day
Published on

உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் நாளில் உலக மனநல நாள் (World Mental Health Day) கடைப்பிடிக்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் இந்நாள் முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150-க்கும் அதிகமான நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது.

மன நலம் என்பது உளவியல் நல்வாழ்வின் நிலையையும், மன நோய் இல்லாத நிலையையும் குறிக்கிறது. இது ஒருவரின் உள நிலையானது, அவரது உணர்ச்சி, நடத்தை என்ற நிலைகளைச் சார்ந்து, திருப்திகரமான மட்டத்தில், சமன் நிலையில் செயற்படுவதைக் குறிக்கிறது. உளநலம் சிக்கலுடையது. இதனுடைய பொருளையும் செயலையும் பற்றிக் கருத்து வேறுபாடுகள், உளவியல் அறிஞர்களிடையே நிலவுகிறது. உடல் நலத்திற்கு உள்ள நலத்தைப் பெறுவதற்குத் தடையாக, மூளைத் திசு நோய்களும், ஆளுமை வளர்ச்சியைத் தடுக்கும் காரணங்களும் உள்ளன. மேலும், வேறு சில கராணிகளும் உள நலத்திற்குத் தடைகளாக அமைகின்றன.

1860 ஆம் ஆண்டில் வில்லியம் எம். கானல் (William M. Connel) என்பவர் 'வாழ்க்கையில் சுகப்படுவதெப்படி? அல்லது உடல் உள நலம்' என்ற பெயருள்ள நூலை வெளியிட்டார். அதன் பிறகு, 1907 ஆம் ஆண்டு, கிளிப்போர்டு பீர்ஸ் (Clifford Beers) என்பவருக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டது. தனது உள நோய் நீங்கி நலம் பெற்ற பின்னர், தம் வாழ்நாளை உள நோய்களைக் குணமாக்கும் முறைகளை ஆராய்ந்தார். பல்வேறு அனுபவங்களை ஒருங்கிணைத்து, 'தன்னைத்தானே கண்டறிந்த உளம்' (A mind that found itself) என்ற நூலினை அவர் வெளியிட்டார். இதுவே உள நலத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் இது குறித்த புரிந்துணர்வு, உலகம் முழுவதும் பரவியுள்ளது.

அமெரிக்காவில் 1908 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாளன்று உளச்சுகாதாரத்திற்கென முதல் குழுவை ஏற்படுத்தியது. பின்னர், அது தேசியக் குழுவாக மாறி, இது குறித்த விழிப்புணர்வைப் பரப்பியது. 1919 ஆம் ஆண்டு, பன்னாட்டுக் குழு நிறுவப்பட்டது. இந்த பன்னாட்டுக் குழுவின் முதற்கூட்டம், 1930 ஆம் ஆண்டில் வாசிங்டனில் கூடியது. இக்கூடலில், 53 நாடுகளில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.

புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களைப் பெற்றுள்ள நோயாளிகளை விட, மன நோய்களைப் பெற்றுள்ள நோயாளிகள் அதிகம் என அறியப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து அமெரிக்கர்களில், 26 சதவிகிதத்திற்கும் அதிகமான நபர்கள், மன நோய்களால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின் படி, 2010 ஆம் ஆண்டில் உலகளாவிய மனநோய்க்கான செலவைக் கிட்டத்தட்ட 2.5 டிரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இச்செலவு 2030 ஆம் ஆண்டில், 6 டிரில்லியன் டாலர்களை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில், கிட்டத்தட்ட பாதி பேர், மன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலகச்சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வெற்றி எங்கள் கையிலே!
Mental Health Day

இதனால் சுயமரியாதைகளிலும், உறவுமுறைகளிலும், அன்றாட வாழ்க்கைக்கான செயல்படும் திறன்களிலும் தாக்கம் ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை மாறுபடுகிறது. ஒரு தனிநபரின் உணர்ச்சி நிலைகளானது, அந்தத் தனி நபரின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் வல்லமை கொண்டது. ஒருவரின் மோசமான மனநிலைகளானது, அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும், தாக்கி, சில முக்கியத் தேவைகளில் இடர்களையும், தடைகளையும் உண்டாக்கி, முன்னேற்றத்தைத் தடுக்கும். குறிப்பாக, போதைப்பொருள் பயன்பாடுகளுக்கு அவர்களை உட்புகுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தம்முடைய பூகோள, சமூகச் சூழ்நிலைகளோடு ஒன்றி வாழும் இயல்புடையவர்களை, உளம் நலமுள்ளவர்களாகக் கருதலாம். தத்துவ, சமூக நிலைகளில் ஒருவருடைய நடத்தை முறைகள், பொருத்தமாக அமைகின்றன என்பதைப் பொறுத்து, ஒவ்வொருவரது மனநலம் முடிவு செய்யப்படுகிறது. ஒருவர் தமது ஆளுமையினால், தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையோடு இயைந்து வாழும் போது ஏற்படும் பிரச்சினைகளை, நன்கு அறிந்து, ஆய்ந்து, தெளிந்து, சுய அறிவோடு, அளவிட்டுப் பார்க்கும் திறனைப் பெற்றிருப்பர். எந்த ஒரு இடையூறுகளை வெல்ல வேண்டுமாயின், அவைகளுக்குரிய காரணங்களைத் தொடக்கத்திலேயே சீர் செய்து விட வேண்டும். சீர் செய்வதற்கான ஊக்கிகளுடன் (Motives) இணைந்து, நிலையான அல்லது திட்டமான மனநிலையை அடைய வேண்டும். இவைகளே, ஒவ்வொரு மனிதனிடமும் இருக்க வேண்டிய, வாழ்க்கை அடிப்படைத் திறனாகும்.

இதையும் படியுங்கள்:
சந்தோஷத்தை வெளியிலே தேடறீங்களா? அப்போ இந்த கதையைக் கொஞ்சம் படிங்க!
Mental Health Day

'உன்னை நீயேக் கட்டுப்படுத்துவதற்காக உன்னை நீயே அறிந்து கொள்' என்பதையே உளச்சுகாதாரம் கற்பிக்கிறது. வில்லியம் ஸ்டெக்கல் என்ற அறிஞர், "தன்னைத்தானேத் தெரிந்து கொள்வதே, நோய் நீக்கத்தின் தொடக்கமும் முடிவும் ஆகும்" என்கிறார்.

இளமையிலேயே நல்ல பழக்க வழக்கங்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களால் திறமையும், முயற்சிச் சிக்கனமும், துன்ப நீக்கமும், வாழ்க்கைச் சிக்கல்களை நீக்குதல் திறனும், ஆற்றலும் இளவயதில் எளிமையாக உண்டாக்கலாம். அமெரிக்காவில் பல இலட்சம் தொடக்கப் பள்ளி மாணவர்கள், உடல் அல்லது உளக்குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர். இந்தியாவிலும் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களிடையேத் தற்கொலை செய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. மண வாழ்க்கையில் பிணக்குக்களும், விவாகரத்துக்களும் ஏற்படுவதற்குக் காரணம், விட்டுக் கொடுக்கும் உளப்பான்மையின்மையும், ஒழுக்கக் குறைபாடுகளும் என அறியப் படுகிறது. விட்டுக் கொடுக்கும் உள்ளப்பான்மையும் சூழ்நிலைக்கேற்ப இயைந்து நடக்கும் திறமையும் இருந்தால், பிணக்குக்களும் வேறுபாடுகளுமே சமுதாயத்தில் தோன்றாது அல்லது குறையும் எனலாம்.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு நாளையும் புன்னகையோடு தொடங்குங்கள்!
Mental Health Day

எனவே, நல் இயல்புகளைக் குழந்தைப் பருவத்திலிருந்தேக் கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நல்லியல்புகள் படியும்படி செய்ய வல்லவர்களாய் இருக்க வேண்டும். சமூக, அறிவு, உள்ளக் கிளர்ச்சிக் குறைபாடுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதை அறிந்திட வேண்டும். அப்படியில்லையெனில், குழந்தைகளிடம் அத்தகையக் குறைபாடுகள் பெருகுவதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தடுக்க முடியாது. பெற்றோர்களும் ஆசிரியர்களும், குழந்தைகளின் உள நலத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று யுனெஸ்கோ அமைப்பும் தனது ஆய்வேட்டில் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com