
பொதுவாக நாம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கும் போதோ அல்லது பதப்படுத்தப்பட்ட சில உணவுப் பொருட்களையோ அல்லது சில மருந்துகளை வாங்கும் போதோ கவனித்திருக்கலாம். பேக்கின் உள்ளே ஒரு சிறிய பாக்கெட் இருக்கும். அதன் உள்ளே crystal போன்று துகழ்கள் இருக்கும். அந்த பாக்கெட்டின் மேலே do not eat, dangerous, throw away என்று அச்சடிக்க பட்டிருக்கும். அந்த பாக்கெட்டில் உள்ள பொருளுக்கு தான் சிலிக்கா ஜெல் என்று பெயர்.
ஏன் அந்த சிலிக்கா ஜெல்லை பொருட்களை பேக் செய்யும் போது வைக்கிறார்கள்?
சிலிக்கா ஜெல் என்பது சிலிக்கான் டை ஆக்சைட்டின் ஒரு வடிவமாகும். அதன் வேதியியல் கலவை மற்றும் அதிக மேற்பரப்பு பகுதி தண்ணீரை எளிதில் உறிஞ்ச அனுமதிக்கிறது, இது ஒரு பயனுள்ள உலர்த்தும் முகவராக அமைகிறது. ஈரப்பதத்தைக் குறைக்க சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் மாத்திரை பாட்டில்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது மாத்திரைகளைப் பாதுகாக்க உதவுகிறது.
இது பொதுவாக மணிகள், துகள்கள் அல்லது படிகங்களாக ஊடுருவக்கூடிய பையில் அல்லது குறைவாக அடிக்கடி ஒரு உருளை வடிவ கேனிஸ்டரில் கிடைக்கிறது. இது வெள்ளை நிறத்தில் இருக்கும்.
காலணிகள், ஆடைகள், மின்னணு உபகரணங்கள், கேமராக்கள், பாக்கெட் புத்தகங்கள், மற்றும் பிற பொருட்களிலும் இது இருக்கும். இது மொபைல் வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் மீது ஈரப்பதம் படியாமல் தடுக்கிறது. நம்முடைய பொருள் கொரியரில் வரும் போது பார்சல் மழையில் நனைந்தால் கூட மொபைலில் தண்ணீர் புகாதபடி இது ஈரத்தை உறிஞ்சி விடும். அதைப் போல உணவு பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பும் போது அந்த பொருட்களில் ஈரப்பதம் வராமலிருக்கவும், பூஞ்சை பிடிக்காமலும், கெட்டு போகாமல் இருக்கவும் இதை வைக்கிறார்கள்.
இந்த சிலிக்கா ஜெல்லானது தானாகவும் கெட்டுப் போகாது, அதே போல பிற பொருட்கள் கெட்டுப்போவதையும் தடுக்கும். பருவமழை காலத்தில் இந்த சிலிக்கா ஜெல் பயனுள்ளதாக இருக்கும். இந்த சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாமல் சேர்த்து வைத்து கொண்டீர்களேயானால் பல விதங்களில் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
சிலிக்கா ஜெல்லின் பயன்கள்:
மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக வீட்டின் கிச்சனில் உள்ள சில பொருட்கள் நமுத்து போகும். இந்த மாதிரியான நேரங்களில் மளிகை பொருட்கள் இருக்கும் பெட்டியில் சிலிக்கா ஜெல் பாக்கெட் போட்டு வைக்கலாம். இது பொருட்களை ஈரப்பதம் ஆகாமல் தடுக்கும். ஆனால் பொருட்களின் பாக்கெட் கிழிந்தோ அல்லது பிரித்தோ இருக்கக் கூடாது. முழுவதும் சீலாகி இருக்கும் பொருட்களில் தான் போட வேண்டும். அதே சமயத்தில் சிலிக்கா ஜெல் பாக்கெட்டும் கிழியாமல் இருக்க வேண்டும்.
வீட்டில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் இருக்கும் பாக்ஸில் இந்த சிலிக்கா ஜெல் பாக்கெட்டை போட்டு வைத்தால், நகைகள் கருக்காமல் பளபளவென இருக்கும்.
மழைக்காலத்தில் செல்போன், வாட்ச் ஆகியவை சில சமயங்களில் நனைந்துவிடும். அவற்றை உடனடியாக பயன்படுத்தாமல் 15 நிமிடங்களுக்கு அவற்றின் மீது சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை சுற்றி வைக்கவும். மொத்த ஈரத்தையும் அது உறிஞ்சி விடும்.
வீட்டில் மரத்திலான அலமாரி இருந்தால் அதில் இரண்டு மூன்று சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைத்தால் அலமாரியில் வீசும் துர்நாற்றம் சென்று விடும். மழை நாட்களில் termites வருவதையும் தடுக்கும்.
செருப்பு மற்றும் ஷூ போன்றவைகளை அடுக்கி வைக்கும் ஸ்டாண்டுகளில் போட்டு வைத்தால், அதிலிருந்து வரும் துர்நாற்றம் போய் விடும். ஷூ விலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
வீட்டில் நாம் பயன்படுத்தும் டூல்ஸ் பாக்ஸில் போட்டு வைக்கலாம். டூல்ஸ் பாக்ஸில் உள்ள இரும்பு பொருட்கள் அடிக்கடி துருப்பிடித்து விடுவதுண்டு. இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை போட்டு வைக்கலாம். இவைகள் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்வதால், இரும்பு பொருட்கள் துருப்பிடிக்காமல் பத்திரமாக இருக்கும்.
சிலிக்கா ஜெல் ரொம்பவே உபயோகமான பொருளாக இருந்தாலும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமையலறையில் உள்ள பொருட்களின் பாக்கெட் அல்லது உணவுப் பொருட்களின் பாக்கெட் பிரித்து இருக்கும் போது எக்காரணத்தை கொண்டும் இதை போடக் கூடாது. இரண்டாவதாக இதை குழந்தைகளின் கையில் படுமாறு வைக்க கூடாது. நம்முடைய செல்ல பிராணிகளுக்கும் எட்டாதவாறு தான் இதை வைக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட இன்னுமொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால் எக்காரணத்தைக் கொண்டும் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை பிரிக்கக் கூடாது. ஒரு முறை அந்த பாக்கெட் கிழியும் நிலைக்கு வந்து விட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும் என்பதை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.