
தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதேவேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவதுமான செயலை, ‘கொட்டாவி (Yawn) என்கின்றனர். இத்துடன் கை, கால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் அல்லது நெட்டி முறித்தல் என்று சொல்கின்றனர்.
பெரும்பாலும், தூக்கத்துக்கு முன்னும் பின்னுமோ, கடுமையான வேலைக்குப் பின்போ, பிறரிடம் இருந்து தொற்றியோ கொட்டாவி விடுதல் ஏற்படுகிறது. இது வழக்கமாக அயர்வு, இறுக்கம், தூக்க உணர்வு, சலிப்பு, பசி ஆகியவற்றோடு இணைந்த நிகழ்வாகும். மனிதர்களில் அடிக்கடி மற்றவரிடம் இருந்தும் கொட்டாவி தொற்றிக் கொண்டு வருகிறது. எனவே, கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட. அதாவது, வேறு ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்த உடனோ, கொட்டாவியைப் பற்றிப் படிக்கும்போதோ கொட்டாவி விடுவதைப் பற்றி எண்ணிப் பார்க்கும்போதோ கூட ஒருவருக்கு கொட்டாவி ஏற்பட்டு விடுகிறது.
இந்தத் தொற்றிக்கொள்ளும் வகைக் கொட்டாவி சிம்பன்சி, நாய்கள், பூனைகள், பறவைகள், ஊர்வன ஆகிய உயிரினங்களிலும் கூட இருக்கின்றது. கொட்டாவி குறித்துப் பல்வேறு உளவியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* கொட்டாவியின்போது காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.
* நுரையீரல் நுண்ணறையிலுள்ள வளிக்கலங்கள் (வகை II) விரிவடைவதால் பரப்பியங்கி நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது. இதனால் மூளை குளிர்வடைகிறது.
* கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தன்னையறியாமல் வெளிக்காட்டுதல்.
* குருதியில் கரிமவளி - உயிர்வளி நிலைப்பாடு மாறுபடுதல்.
* ஈடுபாடின்மையைத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
* அருகில் இருப்பவரது கொட்டாவியால் தமது செவியின் நடுவில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைச் சரிக்கட்டும் பொருட்டு வெளிப்படுகிறது.
* மூளைக்குப் போதிய அளவு குளுக்கோஸ் கிடைக்காதபோது கொட்டாவி வருகிறது.
* உறக்கத்திற்கான தேவை மற்றும் அசதி அதிகமாகும் வேளையில் அடிக்கடி வரும் கொட்டாவியானது, சூடாகிப்போன மூளையை குளிர்விக்கும் ஒரு காரணியாக உள்ளது.
* நுரையீரலில் தேங்கிப்போன அளவுக்கதிகமான கரியமில வாயு, கொட்டாவிகளின் மூலம் வெளியேற்றப்பட்டு, புதிய பிராண வாயுவை (ஆக்சிஜன்) நுரையீரல் உள்வாங்குகிறது.
மேற்கண்ட விஷயங்கள் கொட்டாவி குறித்து முதன்மையானதாகச் சொல்லப்படுகின்றன. இருப்பினும், கொட்டாவியின் சரியான கரணியங்கள் உறுதியாக அறியப்படவில்லை. உயிர்வளிக் குறைவினால் இது ஏற்படுகிறது என்ற கூற்றும் அறிவியலில் முற்றாக நிறுவப்படவில்லை. பொதுவாக, மூச்சு விடுவதைக் காட்டிலும் கொட்டாவி விடுகையில் உயிர்வளி குறைவாகவே உட்கொள்ளப்படுவதாகவும் சிலர் கருதுகின்றனர். இது பதற்றத்தினால் கூட விளையும் என்றும் சிலர் கருதுகின்றனர். இருப்பினும், அடிக்கடி கொட்டாவி விடுவது உடலின் சில குறைபாடுகள், மருத்துவம் சார்ந்ததாகவும் இருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
* கல்லீரல் அழற்சி மற்றும் பாதிப்பு போன்ற காரணங்களால் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, நீண்ட நாட்களாக அடிக்கடி கொட்டாவி வந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது.
* உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாட்டினை, ‘மல்டிபிள் கொலோரிசிஸ்’ (Multiple sclerosis) எனச் சொல்வர். இந்தப் பிரச்னை உள்ளபோது, அடிக்கடி கொட்டாவி வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
* மூளைப் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் அழற்சி, மூளையின் செயல்பாட்டை பாதிப்பதோடு, கொட்டாவி பிரச்னையையும் உண்டாக்குகிறது. எனவே, அடிக்கடி கொட்டாவி வரும் நிலையில் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
* வலிப்பு எனப்படுவது ஒரு வகையில் மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஒரு நோய் பிரச்னையாகும். அந்த வகையில் கை, கால் வலிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த கொட்டாவி பிரச்னை சற்று அதிகமாகவே உள்ளது.
* அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், குறிப்பாக தூக்கத்திற்கு நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் நரம்பு மற்றும் தசைகளின் தளர்வுக்கு வழிவகுத்து, கொட்டாவியை தூண்டுகின்றன.