பட்டுப் புடவை மடிப்புகளில் கிழியாமல், ஜரிகை மங்காமல் இருக்க இதைச் செய்யுங்கள்!

பட்டுப் புடவைகளின் பளபளப்பும் வலிமையும் பல ஆண்டுகளுக்குக் குறையாமல் இருக்கப் பின்பற்ற வேண்டிய பாரம்பரிய வழிமுறைகள்.
பட்டுப் புடவை
பட்டுப் புடவைGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

பட்டுப் புடவைகளின் பளபளப்பு, நிறம் மற்றும் இழைகளின் வலிமை பல ஆண்டுகளுக்குக் குறையாமல் இருப்பதற்கு அவற்றைப் பராமரிப்பதில் சில பிரத்தியேக மற்றும் பாரம்பரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குறிப்பாக சென்னை போன்ற ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளில் பூஞ்சை மற்றும் ஜரிகை கருத்து போவதை தவிர்ப்பதற்கு சிறிது மெனக்கிட வேண்டும்.

பட்டுப் புடவைகளின் ஜரிகை கருப்பாகாமல் இருக்கவும், மடிப்புகளில் கிழியாமல் நீண்ட காலம் புதிது போலவே இருக்கவும் சில எளிய மற்றும் பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1. மஸ்லின் அல்லது பருத்தித் துணியில் சுற்றி வைப்பது:

பட்டுப் புடவைகளை பிளாஸ்டிக் கவர்கள் அல்லது அட்டைப் பெட்டிகளில் நேரடியாக வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அவற்றின் உள்ளே ஈரப்பதம் தங்கி ஜரிகை விரைவில் கருப்பாகிவிடும். அதற்கு பதிலாக சுத்தமான வெள்ளை மஸ்லின் அல்லது மென்மையான பருத்தித் துணியில் தனித்தனியாக சுற்றி வைத்தால் காற்றோட்டம் கிடைப்பதுடன் ஜரிகை கருப்பாகாமலும் பாதுகாக்கப்படும். 

2. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மடிப்பை மாற்றுங்கள்: 

புடவையை ஒரே மாதிரியாக மடித்து நீண்ட நாட்கள் வைத்திருந்தால், மடிப்பு விழுந்த இடங்களில் உள்ள பட்டு நூல்களும் ஜரிகையும் வலுவிழந்து கிழியத் தொடங்கும். எனவே ஒவ்வொரு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புடவையை எடுத்து நிழலில் சிறிது நேரம் காற்றாட விரித்து விட்டு, வேறு திசையில் மடித்து வைக்க வேண்டும். 

புடவையை மடிக்கும் பொழுது ஜரிகை பார்டர் மற்றும் முந்தானைப் பகுதிகள் உள்புறமாக வருமாறு மடிக்க வேண்டும். மேலும் ஜரிகை ஒன்றுடன் ஒன்று உராயாமல் இருக்க மடிப்புகளுக்கு இடையே மெல்லிய பருத்தித் துணி அல்லது பட்டர் பேப்பர் வைக்கலாம்.

பட்டுப் புடவை
பட்டுப் புடவைGemini image

3. உலர் சலவை (Dry Clean) மட்டுமே செய்வது:

புடவையைக் கட்டிவிட்டு வந்தவுடன் உடனே மடித்து வைக்கக் கூடாது. வியர்வை மற்றும் ஈரப்பதம் முழுமையாக உலரும் வரை நிழலில் சற்று நேரம் காற்றாட விடுவதும் புடவையின் ஜரிகை மங்காமல் இருக்க உதவும். குறிப்பாக பட்டுப் புடவைகளை வெயிலில் காய வைப்பதைத் தவிர்த்து விடுவது நல்லது. வெயில் பட்டால் பட்டின் இயற்கையான பளபளப்பு மங்கி, ஜரிகை நிறம் மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வாங்கும் பட்டுப் புடவை அசல் தானா? பரிசோதிக்கும் 5 எளிய வழிகள்!
பட்டுப் புடவை

பட்டுப் புடவைகளை வீட்டில் சோப்பு அல்லது டிடர்ஜென்ட் போட்டுத் துவைக்க கூடாது. வீட்டில் இஸ்திரி செய்யும்பொழுது அதிக சூடு வைக்காமல், புடவையின் மீது ஒரு மெல்லிய காட்டன் துணியை விரித்து அதன் மேல் மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும். கறை படிந்தாலோ அல்லது அழுக்கானாலோ தரமான உலர் சலவை நிலையங்களில் (Dry Cleaners) கொடுத்துச் சுத்தம் செய்வதே ஜரிகையின் நிறம் மங்காமல் இருக்க உதவும்.

முக்கியமாக விலையுயர்ந்த காஞ்சிபுரம் மற்றும் பனாரஸ் பட்டுப்புடைவுகளை எப்போதும் டிரை கிளீனிங் செய்வதே சிறந்தது. வீட்டில் சாதாரண சோப்புத் தூள் போட்டுத் துவைத்தால் பட்டு தன் இயல்பான பளபளப்பை இழந்து விடும்.

4. வாசனை திரவியங்கள் மற்றும் ரசாயனங்களைத் தவிர்ப்பது: 

பட்டுப் புடவை அணிந்திருக்கும் பொழுது அதன் மீது நேரடியாக பெர்ஃப்யூம் (Perfume) அல்லது டியோடரண்ட் தெளிக்கக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள ரசாயனங்கள் ஜரிகையைக் கருப்பாக்கி விடும். அதேபோல் பூச்சிகள் வராமல் இருக்க புடவை வைக்கும் அலமாரியில் நாப்தலீன் உருண்டைகளைப் போடுவதைத் தவிர்த்து, குறிப்பாக நாப்தலீன் உருண்டைகளைப் புடவை மீது நேரடியாக வைக்காமல், அதற்கு பதிலாக சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் அல்லது துணியில் கட்டிய காய்ந்த வேப்பிலை, கிராம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். 

இதையும் படியுங்கள்:
ஜரிகை மத்தாப்பூ வேண்டாம்! இந்த தீபாவளிக்கு 'க்வயட் லக்ஸுரி' ட்ரெண்ட்!
பட்டுப் புடவை

5. உலோக ஹேங்கர்களைத் தவிர்த்து விடுவது: 

கனமான காஞ்சிபுரம் அல்லது பனாரஸ் பட்டுப் புடவைகளை ஹேங்கரில் தொங்கவிட்டால் புடவையின் எடையாலேயே நூல்கள் இழுபட்டு கிழிய வாய்ப்புள்ளது. எனவே அவற்றை மென்மையாக மடித்து அலமாரியில் அடுக்கி வைப்பதே சிறந்தது. பட்டுப் புடவைகளை இரும்பு அல்லது ஸ்டீல் ஹேங்கர்களில் தொங்கவிட்டால் உலோகத்துடன் வினைபுரிந்து ஜரிகை கருப்பாகிவிடும்.

அத்துடன் உலோக ஹேங்கர்கள் துருப்பிடித்தாலோ புடவையில் கறையை ஏற்படுத்தி வடும். எடையுள்ள பட்டுப் புடைவுகளை தொங்கவிடாமல் பருத்தித் துணியில் சுற்றி அலமாரியில் தட்டையாக அடுக்கி வைப்பதே சிறந்தது.

விலைமதிப்பற்ற பட்டுப் புடவைகளை ஈரப்பதம், ரசாயனப் பாதிப்புகள் மற்றும் மடிப்புச் சேதங்களில் இருந்து காத்து, தலைமுறை தலைமுறையாகப் புதுசு போலப் பராமரிக்கும் ரகசியங்களை வாசகர்கள் பெறுவார்கள்.