ஒருவர் அவரது தினசரி அத்தியாவசிய வேலைகளைச் செய்வதற்கு அவரின் உடல் நிலை சரியான நிலையில் இருக்க வேண்டியது அவசியம். சுவர் இருந்தால் சித்திரம் வரைய முடியும் என்பது போல், ஒருவரின் உடல் நிலை சரியாக இருந்தால்தான் அவர் சம்பந்தப்பட்ட பணிகளை கவனிக்க முடியும். உடலை சரியாகப் பராமரிக்க தினசரி சில எளிய பயிற்சிகளை மேற்கொண்டாலே மற்றவர் உதவி இன்றி, அவரவர் வேலைகளை அவரவர் கவனித்துக் கொள்ள இயலும்.
அதன்படி முதல் பயிற்சியாக, முதுகை வளைக்காமல் ஒரு நாற்காலியில் மெதுவாக உட்கார்ந்து எழுங்கள். இப்படி பத்து முறை செய்ததும் சில நிமிடங்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அப்படியே பத்து முறை உட்கார்ந்து எழவும். இது போல ஐந்து முறை தினசரி செய்யவும்.
அடுத்ததாக, தரையில் நின்றபடி இரு கைகளை இருபுறமும் இறக்கை போல விரியுங்கள். இடுப்புக்கு மேலுள்ள பகுதியை மட்டும் மெதுவாக ஒரு பக்கம் 90 டிகிரி திருப்பவும். அதேபோல் மீண்டும் எதிர்ப்பக்கம் திருப்பவும். இதுபோல 50 முறை செய்யயவும். 10 திருப்பல்களுக்குப் பிறகு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.
அடுத்து, தரையில் 30 நிலக்கடலைகளை (உதாரணத்துக்கு) போடவும். முதுகை வளைக்காமல் முழங்கால்களை மட்டும் மடித்து ஒருமுறை ஒரு நிலக்கடலையை மட்டும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளவும். இப்படியே மற்ற கடலைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிடவும். நிலக்கடலை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அவற்றைத் தம்பிக்கோ தங்கைக்கோ கொடுத்துவிடலாம்.
இப்படி உடலின் ஒவ்வொரு உறுப்புக்குமே பயிற்சி தேவை. இதயம் மற்றும் ரத்த ஓட்ட மண்டலம் வலுப்பெற தினமும் 30 நிமிட நேரம் விரைவு நடை பயிற்சி சிறந்ததாகும். தினமும் நடப்பது அலுப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம், சைக்கிள், நீச்சல், கயிறு தாண்டல், படகு வலித்தல், மெது ஓட்டம் என மாற்றி மாற்றி பயிற்சி செய்யலாமே.