
தற்போதைய சூழலில் மிகவும் திறமையான இளைஞர்கள் கூட வேலை வாய்ப்புக்கான நேர்காணலின்போது சரியாக பதில் அளிக்கத் தெரியாத நிலையில் உள்ளனர். அதனால் அவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. அந்த வகையில், நேர்காணலின்போது, ‘உங்களை ஏன் அந்தப் பணியில் அமர்த்த வேண்டும்?’ என்பது போன்ற கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பில்கேட்ஸ் கூறிய பதில்களை இந்தப் பதிவில் காண்போம்.
* ‘உங்களை ஏன் நிறுவனத்தில் பணியமர்த்த வேண்டும்?’ என்ற கேள்வி வந்தால், உங்களைப் பற்றி பெருமை பேசுவதாக இல்லாமல், உங்களுடைய மதிப்பை வெளிப்படுத்தும் வகையிலும், நிறுவனம் உங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிய வைக்கும் விதத்திலும் உங்கள் பதில் இருக்க வேண்டும்.
* ஒரு நிறுவனத்தின் கொள்கை மற்றும் சவால்களுடன், நேர்காணலுக்கு வரும் இளைஞர்களின் மனநிலை எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டறியவே நிறுவனத்தின் மேலாளர்களை நியமிக்கின்றனர். வெறும் ஊழியர்களை பணியமர்த்த மட்டுமல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
* ஆகவே, இத்தகைய கேள்விகளுக்கு, ‘நான் கடினமாக உழைப்பேன். குழுவாக செயல்பட்டு, நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு உதவுவேன்’ என்பது போன்ற சாதாரண பதில்களைச் சொல்லாமல், அந்தப் பணிக்கு நிறுவனம் தேடும் நபரின் சிறப்பு அம்சம் என்ன என்பதைக் கண்டறிந்து அதனைக் குறிப்பிட்டு மேலாளர்களிடம் நுட்பமாக வெளிப்படுத்துங்கள்.
* பில்கேட்ஸ் ஆரம்பத்தில் நேர்காணலில் பங்கேற்றபோது, ‘நான் கோடிங் நன்றாக செய்வேன். மென்பொருள் துறையில் ஈடுபாடு அதிகம். குழுவாக இணைந்து செயல்படுவேன்’ என்பது போன்ற பதில்களைக் கூறியதாகவும், பின்னர் தாம் அதனை மாற்றிக் கொண்டதாகவும் கூறுகிறார்.
* உங்களது திறமையைப் பற்றியும் நிறுவனத்தின் தேவையைப் பற்றியும் தொடர்புப்படுத்தி பேசுவதோடு, அந்தப் பதவியை மெருகேற்றுவதற்கு உங்களிடம் இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள்.
* இப்போது இருக்கும் சவால்களை மட்டுமே பேசாமல், எதிர்கால பிரச்னைகள், நீண்ட கால பிரச்னைகளைச் சொல்லி அதற்கான தீர்வுகளைப் பேச வேண்டும் என்பது பில்கேட்ஸின் அறிவுரையாக உள்ளது.
* ‘உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன?’ என்ற கேள்விக்கு, தற்பெருமைக்கு பதிலாக சுய பரிசோதனையாக இருக்க வேண்டும். முன்னர் பணிபுரிந்த இடத்தில் திறமையாக சவால்களை எவ்வாறு கையாண்டீர்கள் என்பதைத் தெளிவாக சொல்லலாம்.
* பலவீனம் பற்றி எடுத்துரைக்கும்போது எந்தத் திறமையை வளர்க்க வேண்டும். அதை வளர்ப்பதில் எதுபோன்ற சவால்களை சந்திக்கிறீர்கள் என்பது பற்றி வெளிப்படையாகவே கூறலாம். இது அவரது பக்குவம் மற்றும் கற்கும் திறனை எடுத்துரைப்பதாக இருக்கும் என்பது பில்கேட்சின் கூற்றாக உள்ளது.
* ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் எப்படி இருப்பீர்கள்?’ என்ற கேள்விக்கு நாம் எப்படி இருப்போம் என்பதை கணித்து சொல்வதை விட, நாம் எப்படி இருக்க வேண்டும் என இலக்கு வைத்திருக்கிறோம் என்பதைக் கூறலாம். இது ஊழியருக்கு வளர்ச்சிக்கான ஊக்கம் இருக்கிறதா என்பதனை சோதனை செய்யும் கேள்வியாகும்.
* ‘என்ன ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள்?‘ என்ற கேள்வி, உங்களுடைய தன்னம்பிக்கையை பரிசோதிக்கும் என்பதால் முன்கூட்டியே அந்த வேலைக்கான சராசரி ஊதியம் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப பதில் அளிக்கலாம். குறைவான ஊதியத்தை கூறி விட்டால் நிறுவனம் உங்களைக் குறைத்து மதிப்பிட்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* ‘ஒருவர் பதிலளிக்கும்போது தன்னம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தாமல், என்ன செய்ய விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்’ என்கிறார் பில்கேட்ஸ்.