

மாதாமாதம் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கியாக வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மளிகைப் பொருட்களை வாங்குவார்கள். ஒருசிலர் ஒரு மாதத்திற்குத் தேவையான மொத்த மளிகைப் பொருட்களையும் ஒரே சமயத்தில் வாங்கி வைத்துவிடுவார்கள். ஒருசிலர் வாராவாரம் வாங்குவார்கள். இன்னும் ஒருசிலர் எப்போது தேவையோ அப்போது தேவைப்படும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். நான்கு நபர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு தற்காலத்தில் குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாயும் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாயும் செலவாகும். இதை நாம் திட்டமிட்டு வாங்கினால் மாதாமாதம் கணிசமான தொகையை நிச்சயம் சேமிக்க முடியும்.
பருப்பு வகைகள், பூண்டு, எண்ணெய் முதலான மளிகைப் பொருட்கள் ஒரே மாதிரியாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவற்றின் விலை ஏறி இறங்கும் தன்மை உடையவை. ஒவ்வொரு கடையிலும் ஒரு விலையில் விற்பனை செய்வார்கள். சில கடைகளில் தரமான பொருட்களை குறைவான லாபம் வைத்து விற்பனை செய்வார்கள்.
ஒவ்வொரு பொருளுக்கும் கிலோவிற்கு பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை வேறுபாடு இருக்கும். எனவே, இத்தகைய பொருட்களை ஒரே கடையில் வாங்காமல் உங்கள் பகுதியில் உள்ள நான்கைந்து கடைகளில் விசாரித்து எந்த கடையில் தரமாகவும் விலை குறைவாகவும் உள்ளதோ அந்தக் கடையில் வாராவாரம் தேவைப்படும் அளவிற்கு வாங்கிக் கொள்ளும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள்.
பெரிய சூப்பர்மார்க்கெட்டுகளில் அவ்வப்போது பிராண்டட் பொருட்களுக்கு ஆஃபர் தருவார்கள். அவர்கள் தரும் ஆஃபர் உங்களுக்கு லாபம் தருவதாக இருக்கிறதா என்பதைப் பார்த்து அவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். பல சூப்பர் மார்கெட்டுகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் (Buy 1 Get 1 Free) என்று விற்பனை செய்வார்கள். அந்த பொருள் உங்களுக்குத் தேவையானால் வாங்கி வைத்து உபயோகிக்கலாம். இதில் உங்களுக்கு நல்ல சேமிப்பு கிடைக்கும்.
பிஸியான கடைகளில் பொருட்களை வாங்கும்போது பில்லை வாங்கி நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகை சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை சரிபாருங்கள். சில சமயங்களில் பணியாளர் வேகமாக பில் போடும்போது சில பொருட்களுக்கான விலையை ஒன்றுக்கு இரண்டாக தவறுதலாக போட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. பலர் தாங்கள் வாங்கிய பொருட்களுக்கான விலை சரியாக உள்ளதா என்பதை சரிபார்ப்பதே இல்லை. இதனால் நாம் கணிசமான தொகையை இழந்துவிடும் வாய்ப்பு உள்ளது.
பல கடைகளில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறை இல்லை என்பதால் அதற்கு ஈடாக சாக்லெட் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். இதுவும் ஒரு வியாபார உத்தி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கடையிலும் இப்படியாக நாம் இழக்கும் தொகை ஒரு மாதத்தில் சில நூறுகள் இருக்கும். இதைத் தவிர்க்க ஆன்லைன் பணப்பரிவர்த்தனையைச் செய்யுங்கள். நீங்கள் தினம் தினம் சிறுகச் சிறுக இழக்கும் தொகை இதன் மூலம் சேமிக்கப்படும்.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்கள் உதாரணமாக துணி சோப்பு, டிடர்ஜெண்ட் பவுடர், பினாயில், ப்ளோர் க்ளீனர் முதலானவை பிராண்டட் பொருட்களை விட உள்ளுர் தயாரிப்புகள் விலை குறைவாக இருக்கும். அதை வாங்கி உபயோகித்துப் பார்க்கலாம். எப்போதாவது தேவைப்படும் அவசியம் இல்லாத மளிகைப் பொருட்களை வாங்கி வீட்டில் வைக்காதீர்கள். இத்தகைய பொருட்கள் பயன்படுத்தபடாமலேயே காலாவதியாகிவிடும் வாய்ப்பும் உள்ளது.
எந்த ஒரு பொருளையும் வாங்கும்போது அதன் காலாவதி (Expiry Date) தேதியைப் பார்த்து வாங்குங்கள். இது மிகவும் அவசியமாகும். பொதுவாக சூப்பர் மார்க்கெட்டுகளில் விரைவில் காலாவதியாக இருக்கும் பொருட்களை நம் பார்வையில்படும்படி முதலிலும் காலாவதியாக அதிக நாட்கள் உள்ள பொருட்களை பின்னாலும் அடுக்கி வைத்திருப்பார்கள்.
தற்காலத்தில் கிராமப்புறங்கள் மட்டுமின்றி, நகரப்பகுதிகளிலும் வாரத்திற்கொரு நாள் சந்தை போடுகிறார்கள். சந்தையில் விற்பனை செய்பவர்கள் நேரடியாக தங்கள் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்வதால் குறைந்த விலைக்கு விற்பனை செய்வார்கள். அங்கு சென்றால் குறைந்த விலையில் மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கலாம். இதன் மூலம் மாதாமாதம் ஒரு கணிசமான தொகையினை மிச்சப்படுத்தலாம்.
இறுதியாக, கடைகளில் பார்க்கும் பொருட்களையெல்லாம் ஆர்வ மிகுதியின் காரணமாக வாங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். இதன் மூலம் உங்கள் பணம் வீணாவது தவிர்க்கப்படும்.