
கணவன், மனைவி சண்டை என்பது தற்போது குடும்பத்தில் சர்வ சாதாரணமாகி விட்டது. அதற்கு முக்கியக் காரணம் வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள்தான். முன்பெல்லாம் பெண்கள் வீட்டில் இல்லத்தரசிகளாக இருப்பார்கள். ஆண்கள் வெளியே வேலைக்குச் சென்று வந்து குடும்பம் நடத்துவார்கள். இது ஒரு காலகட்டம். காலங்கள் மாறின. பெண்களும் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களை விட அதிகம் கூட சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு நல்ல முன்னேற்றம்தான்.
இருந்தாலும், இந்த முன்னேற்றத்தில்தான் முளைக்கிறது ஈகோ. அதனாலேயே பெரும்பாலான கணவன், மனைவியர் எலியும் பூனையுமாய் வீட்டில் மனக்கசப்போடும் மனபாரத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள். பல ஆண்கள் கோபப்படும் தனது மனைவியை சுலபமாக சமாளித்து விடுவார்கள். ஆனால், இன்னும் பலருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். உங்கள் தவிப்புகளை விடுங்கள். கோபப்பட்டு ஆத்திரமாகப் பேசும் உங்கள் மனைவியை உடனே கூல் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
உங்கள் மனைவியை பார்க்கும்போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் உங்கள் மனைவி கோபத்தை மறந்து விடுவார். உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளை அடிக்கடி சுட்டிக்காட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பினும் பொறுமையாக அந்தத் தவறை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். மனைவி முக்கியமான வேலையில் ஈடுபடும்போது அவர்களிடம் அன்பாய் பேச வேண்டுமே தவிர, தொந்தரவு செய்வது போல மனைவியிடம் வீணாகப் பேசிக்கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களைத் திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் கடுப்பாக வாய்ப்பு அதிகம்.
வேலைக்குச் செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும்போது அவர்களின் அனுபவங்களைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும். மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதை வாயினால் தெரிவிப்பதை விட, சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு சிறு தவறுகள் செய்யும்போது உடனே மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். இதன் மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதைத் தவிர்க்க முடியும்.
மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை அடிக்கடி குத்திக் காட்டி பேசக் கூடாது. மேலும், சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்டக் கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்பாகும். வேலைக்குச் செல்லாத மனைவியாக இருந்தால், அவர்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கித் வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். நேரம் கிடைக்கும்போது மனைவியை வெளியே கூட்டிச் செல்லுங்கள். கணவனும், மனைவியும் பேசும்போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கத் தவறாதீர்கள்.
மனைவி செய்தவற்றை, குறிப்பாக சமையல் உள்ளிட்டவற்றில் குறை கண்டுபிடிக்காதீர்கள். சுமாராக இருந்தாலும், நன்றாக இருப்பதாகக் கூறி, சாதுர்யமாக தெரிவிக்கலாம். மற்றவர்கள் முன்பு மனைவியை கேவலமாகப் பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம். எனவே, வீட்டில் இருக்கும்போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவு பலப்படும், அன்பு பெருகும், கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும். சண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதானக் கொடியை பறக்கவிடக் காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்கக் கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்.