
கோடை வெயிலின் உக்கிரம் அதிகரிக்கும்போது, சில இடங்களில் பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவது வாடிக்கையாகி விடுகிறது. இது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம். பாம்புகள் ஏன் இந்தச் சமயத்தில் அதிகம் தென்படுகின்றன, அப்படி அவை வீட்டுக்குள் வராமல் தடுக்க நாம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
பாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகள். கோடைக்காலத்தில் வெளிப்புற வெப்பம் அதிகமாக இருக்கும்போது, அவற்றின் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க குளிர்ச்சியான அல்லது இடங்களைத் தேடும். கட்டிடங்களின் இடுக்குகள், நிழலான பகுதிகள், குப்பைகள் குவிந்த இடங்கள் போன்றவை அவற்றுக்கு ஏற்ற தங்குமிடங்களாகத் தோன்றும். இதனால் அவை மனிதர்கள் வாழும் இடங்களை நோக்கி வர வாய்ப்பு உள்ளது.
பாம்புகளின் முக்கிய உணவுகளில் தவளைகளும், எலிகளும் அடங்கும். கோடையில் நீர்நிலைகள் வறண்டு போவதால், தவளைகளின் எண்ணிக்கை குறைகிறது. அப்போது அவற்றின் உணவுத் தேவைக்கு எலிகளை நாடும். எலிகள் பெரும்பாலும் உணவுக்கழிவுகள் கொட்டப்படும் இடங்களில்தான் அதிகமாக இருக்கும். ஆகவே, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அல்லது வீட்டைச் சுற்றி உணவுக்கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இது எலிகளை வரவழைத்து, அதன் மூலம் பாம்புகளையும் ஈர்க்கும்.
பாம்புகள் வீட்டுக்குள் நுழையாமல் தடுக்க, வீட்டின் வெளிப்புறத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். கதவுகள், ஜன்னல்கள், சுவர்களில் உள்ள விரிசல்கள் அல்லது சிறிய துளைகள் வழியாக அவை உள்ளே நுழையலாம். முடிந்தவரை இதுபோன்ற இடைவெளிகளை அடைத்து வைக்கவும். சமையலறை அல்லது குளியலறை கழிவுநீர் வெளியேறும் குழாய்களையும் வலை போன்ற அமைப்புகள் மூலம் மூடி வைப்பது நல்லது. வாசலில் ஷூக்களைக் கழற்றி வைப்பதைத் தவிர்த்து, அவற்றை உயரமாகத் தொங்க விடுவது பாதுகாப்பானது. காரணம், சிறிய பாம்புகள் ஷூக்களுக்குள் சுருண்டு பதுங்க வாய்ப்புள்ளது.
வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். விறகுகள், செங்கல்கள், அட்டைப் பெட்டிகள் அல்லது தேவையில்லாத பழைய பொருட்களை வீட்டின் அருகில் குவித்து வைக்காதீர்கள். இவை பாம்புகள் பதுங்க சிறந்த இடங்கள். வீட்டைச் சுற்றித் தரையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இரவு நேரங்களில் வீட்டைச் சுற்றி வெளிச்சம் இருப்பது பாம்புகள் வருவதைக் குறைக்கும். வெளிப்புறக் குளியலறை அல்லது கழிவறை இருந்தால், அவற்றையும் சுத்தமாகவும், வெளிச்சமாகவும் வைத்திருக்க வேண்டும்.
இந்த எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடைக்காலத்தில் பாம்புகள் நம் வீடுகளுக்கு அருகில் வருவதைக் குறைக்கலாம்.