தற்காலத்தில் 50 வயது தாண்டிய பெண்களிடையே மன அழுத்தம் என்பது அதிகமாக உள்ளது. காரணம், தனிமையும் வெறுமையும். திருமணம் முடிந்ததிலிருந்து குடும்பத்துக்காக பரபரப்புடன் உழைத்து பிள்ளைகளை வளர்த்து அவர்களின் திருமணத்திற்காகப் பாடுபட்டு பின் அனைவரும் பிரிந்து வெவ்வேறு இடத்திற்குச் சென்ற பின்பு ஏற்படும் வெற்றிடமே இவர்களின் மன அழுத்தத்திற்குக் காரணமாகிறது.
ஆண்களைப் பொறுத்தவரை பாசம் நேசம் எல்லாம் ஒரு எல்லைக்குள்தான். அவர்களின் கடமைகள் முடிந்து விட்டால் அவர்கள் உண்டு, அவர்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. ஒருவர் மீது அன்பும் பற்றும் இருந்தால் அதை அதீதமாக வைத்து மகிழ்வது பெண்களின் குணம். அதனால்தான் பிள்ளைகளைப் பிரிந்த 50 பிளஸ் பெண்களை ஒருவிதமான வெறுமை வாட்டுகிறது. இதனால் அவர்களின் மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகம். இந்த திடீர் மன அழுத்தம் போக்குவது நமது கடமை. இதோ அதற்கான சில ஆலோசனைகள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனிமையில் இருக்காமல் காலாற வெளியே நடந்து செல்லுங்கள். நடந்து செல்லும்போது கண்களில் படும் உங்களை அறிந்தவர்களிடம் நின்று பேசிவிட்டு செல்லுங்கள். அது உங்களுக்கான ஆறுதல் என்பதால் நீங்களே வலியச் சென்று பேசலாம்.
ஈகோவை விட்டு விடுங்கள். நான் எனும் ஈகோ உங்கள் தனிமையை மேலும் தனிமைப்படுத்தி விடும். அறிந்தவரோ அறியாதவரோ அனைவரிடத்தும் சகஜமாக பழகுங்கள்.
வீடு உண்டு குடும்பம் உண்டு என்று இருந்த நீங்கள் இனி உங்களுக்கான நேரத்தை மதித்து உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள முன் வாருங்கள்.
எப்போதோ மறந்துபோன ஓவியத் திறமையும் பாடும் ஆசையும் இருந்தால் அதை வெளிக்கொண்டு வாருங்கள். பயிற்சி வேண்டும் என்றால் தகுந்தவரிடம் பயிற்சிக்கு செல்லுங்கள்.
மனநலம், உடல் வளம் பெற யோகா, உடற்பயிற்சி, நடனம் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு இருந்தால் கோயில்களுக்கும் திரைப்படங்களில் ஆர்வம் இருந்தால் தியேட்டர்களுக்கும் சென்று வாருங்கள்.
சேவை இல்லங்களுக்குச் சென்று அங்கு இருப்பவர்களுடன் பேசி மகிழுங்கள். இதனால் அவர்களுக்கும் உங்களுக்கும் சேர்ந்தே கிடைக்கும் மகிழ்ச்சி.
கடமைகள் இருந்தபோது செய்ய முடியாத புதுப்புது வகையான சமையல் வகைகளை செய்து அசத்துங்கள். அழகு நிலையம் சென்று புத்துணர்ச்சி பெறுங்கள்.
தொழில் முனைவோராக மாற வேண்டுமா? இதற்கான நேரம் உங்களுக்கு இது என்று உணர்ந்து கொள்ளுங்கள். சிறிய தொழில் என்றாலும் அதில் முழு கவனம் செலுத்துங்கள். முக்கியமாக, தனியே இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடுங்கள். உங்கள் வெறுமை , மன அழுத்தம் மறைந்தே போகும்.