

நம் வீடுகளின் சமையலறையில் தினசரி பல வகை உலோகங்களாலான பாத்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வருடங்களுக்கு முன்பு நான்-ஸ்டிக் எனப்படும் பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்திற்கு வந்தன. உணவுப் பொருட்கள் அவற்றில் ஒட்டவோ, அடி பிடிக்கவோ செய்யாது என்ற காரணத்தால் அது அனைவராலும் விரும்பப்பட்டது. ஆனால், அவற்றில் பூசப்பட்டிருந்த ரசாயனக் கலவை உடல் நலக் கோளாறுகளை உண்டுபண்ணக் கூடியது என்றறிந்த பிறகு இப்போது அதன் பயன்பாடு குறைந்துவிட்டது. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களே தீங்கற்றதாகக் கூறப்படுகிறது. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை சுத்தப்படுத்த சில வழிமுறைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் சுலபமாக கோடுகள் விழ வாய்ப்புள்ளதால் மென்மையான உபகரணங்களைக் கொண்டு, சரியான சுத்திகரிக்கும் பொருளால் சுத்தப்படுத்த வேண்டும். டார்க் நிறமுடைய உணவுப் பொருளை உபயோகித்து சமைக்கும்போது மீடியம் தீயில் சமைப்பது நலம். ஒவ்வொரு முறை சமைத்த பின்னும், பாத்திரம் ஆறியவுடன் சுத்தப்படுத்துதல் அவசியம்.
மெல்லிய ஸ்டீல் இழைகளாலான ஸ்கிரப்பர், பாத்திரத்தில் நிரந்தர கோடுகளை உண்டுபண்ணும் என்பதால் அதைத் தவிர்த்து விடுதல் நல்லது. ஓவனை (oven) சுத்தப்படுத்த உதவும் ரசாயனம் கலந்த பொருட்கள் அல்லது ப்ளீச்சிங் பவுடரை, ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை சுத்தப்படுத்த உபயோகிப்பது ஆபத்தானது. அவை பாத்திரத்தின் மேற்பரப்புகளை சேதப்படுத்திவிடும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கடாயை சுத்தப்படுத்தும் முறைகள் மூன்று வகையாகும்.
1. முதலில், உபயோகித்த கடாயை இளஞ்சூடான நீரில் கழுவவும். பிறகு அதே நீரில் டிஷ் வாஷ் சோப் கலந்து கடாயில் ஊற்றி பத்து நிமிடம் ஊற விடவும். பிறகு சுத்தமான ஸ்பான்ச் வைத்து தேய்த்து, சுடு நீரில் கழுவி எடுத்து, மெல்லிய டவலால் துடைத்து வைக்கவும்.
2. முதல் முறையில் கடாய் முழுவதுமாக சுத்தமாகாமல், கறையிருந்தால் வினிகரில் சிறிது பேக்கிங் சோடா கலந்து கறையுள்ள பகுதிகளில் தடவி ஒரு நிமிடம் வைத்திருந்த பிறகு ஸ்பான்ச் வைத்து மென்மையாக கடாயை தேய்த்துக் கழுவவும். பாத்திரத்திற்கு எவ்வித சேதாரமுமின்றி இம்முறையில் சுத்தப்படுத்தி விடலாம்.
3. உணவுப் பொருளுடன் சேர்ந்து கறை விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டிருந்தால், கடாய் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து அடுப்பில் வைத்து பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின் அடுப்பை அணைத்து விட்டு, கடாய் நன்கு ஆறியவுடன் ஸ்பான்ச் வைத்து மென்மையாக தேய்த்துக் கழுவி விடவும்.
கேஸ் ஸ்டவ்வில் எரியும் நெருப்பு, கடாயின் அடிப்பரப்பையும் தாண்டி சைடு பகுதிகளிலும் சூட்டைப் பரப்பும்போது பாத்திரத்தின் உள்ளே வானவில் போன்ற நிற மாற்றம் உண்டாவது இயல்பு. கடாயிலுள்ள குரோமியக் கலவையானது அதிகளவு சூட்டுடன் இணைந்து இந்த நிற மாற்றங்களை உண்டுபண்ணும். இதை அப்படியே விட்டு விடவும் செய்யலாம் அல்லது சம அளவு தண்ணீரும் ஒயிட் வினிகரும் சேர்த்து கலந்து அந்த இடத்தை தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்தியும் விடலாம்.
நீங்களும் மேலே கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் வீட்டு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கடாய்களை பளபளக்கச் செய்யலாமே!